Friday, June 26, 2015

“ஓடறான் புடி! ஓடறான் புடி!”

இப்பொழுது தமிழ் நாட்டில் பனங்கள்ளும் இல்லை; தென்னங்கள்ளும் இல்லை;; ஈச்சங்கள்ளும் இல்லை. முன்பெல்லாம் அரசுக்குத் தெரியாமல் கள்ளு இறக்கினால் கலால் பிரிவு நல்லாவே கல்லா கட்டும். இப்பொழுது சாராயத்தில் அரசாங்கமே கல்லா கட்டுவதால் கலால் பிரிவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

அடர்ந்த காடு-மலைகளுக்கு நடுவே கஞ்சாச் செடி வளர்த்தாலும் மோப்பம் பிடித்து கஞ்சாவை பொசுக்கி விடுகிறது அரசு. கஸ்டம்சைத் தாண்டி அவ்வளவு லேசில் ஹெராயின் உள்ளே நுழைந்து விட முடியாது. கஞ்சாவும், ஹெராயினும் அப்படியே கிடைத்தாலும் விற்பவன் திருட்டுத் தனமாக மிகவும் சாதுர்யமாகத்தான் விற்க வேண்டும். அதனால் கஞ்சாவும், ஹெராயினும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு பலியாகுபவர்கள் சிலரே.

ஆனால் அனைவருக்கும் மிக எளிதாக கிடைக்கும் ஒரே போதைப் பொருள் சாராயம்தான். சாராயம் நமக்குத்தான் போதைப் பொருள். நமது காசைப் பிடுங்கி நமது உடலை உருக்கி சுடுகாட்டுக்கு வழி காட்டும் டாஸ்மாக் நிறுவனம் அரசுக்கு ஒரு அட்சய பாத்திரம். டாஸ்மாக் அரசுக்குத்தான் அட்சய பாத்திரம். நமக்கோ பிச்சைப் பாத்திரம்.

இந்த லட்சணத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றுள்ளது. இதை விட கேளிக்கூத்து வேறு என்ன இருக்க முடியும்?
 
“ஓடறான் புடி! ஓடறான் புடி!” என கூப்பாடு போடும் திருட்டுப் பயலுக்கும் சாராய போதையில் மக்களை மூழ்கடிக்கும் இந்த மானங்கெட்ட அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.

 வள்ளுவனும், அல்லாவும், ஏசுநாதருமே சொல்லிக் கேட்காத குடிமக்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் கொண்டாடி விட்டால் மட்டும் போதையை விட்டு விடுவார்களா என்ன?

நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தாமல் இருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தின் அட்சயப் பாத்திரம் சுக்கு நூறாக நொறுக்கப்பட வேண்டும்.

அதற்கு….

டாஸ்மாக் கடை முன்னால் பெரிய பள்ளம் வெட்டப்பட வேண்டும். பெண்கள் தினமும் அங்கே குப்பைகளை கொட்ட வேண்டும். மாணவர்களும் இளைஞர்களும் கடையிலேயே ஒண்ணுக்கு அடிக்க வேண்டும். எதுவும் அசையவில்லை என்றால் டாஸ்மாக் கடை கக்கூசாக மாற வேண்டும். ஆற்று மணலை கொள்ளையடிக்கும் மணல் லாரிகளை மடக்குவது போல சாராயம் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி விரட்ட வேண்டும். புதுவைப் பெண்களைப் போல சாராயக் கடைகளை சூறையாடாமல்  போதையிலிருந்து மக்களை ஒரு போதும் மீட்க முடியாது.
 
வெல்லட்டும் மக்கள் அதிகாரம்!
 
புதுவை பெண்கள் சாராயக் கடையை சூறையாடிய படங்கள்.
 


 
 
 
 

 
தொடர்புடைய பதிவுகள்:
 
 

No comments:

Post a Comment