Tuesday, October 27, 2015

மாட்டிலாக்கா!

மாட்டிறைச்சியை உண்ணக்கூடாது என காவிகள் சொல்கிறார்களே! மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆசையை மற்றவர்களிடமும் தூண்டிவிட்டு ஆங்காங்கே மாட்டிறைச்சி விழாக்களை நடத்துவதற்கு ஊக்கமளித்து வருவதோடு அவ்வாறு மாட்டிறைச்சி விருந்து நடத்துவோரை தாக்குவதன் மூலம் மாட்டிறைச்சியின் பக்கம் மேலும் பலரை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் காவிகளுக்கு நாம் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.

இதுவரை மாட்டிறைச்சியைத் தேடித்தேடி யாரும் உண்டதில்லை. கிடைக்கும்போது உண்பதோடு சரி. மாட்டிறைச்சிக்குத் தடை என்று வந்த பிறகுதான் இன்று நாடெங்கும் மாட்டிறைச்சி விழாக்கள் பெருகி வருகின்றன.. 'சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பது போல இன்று மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்ததன் மூலம் மாட்டிறைச்சியின் பக்கம் மக்களை தள்ளிவிட்டுள்ளார்கள்.

ஒரு காலத்தில் தனக்குப் போகதான் மீதிப் பாலை விற்பனை செய்வான் விவசாயி. அதனால் அவன் வீட்டில் எப்பொழுதும் மோர் இருக்கும். அந்த மோர்கூட கேப்பைக் கூழுக்கும் கம்பங்கூழுக்கும் சுவை சேர்க்கவும், கோடை காலங்களில் தாகம் தீர்க்கவும்தானேயொழிய காவியைத் தூக்கித்திரியும் தயிர்வடைகளைப்போல தயிரில் மூழ்கி, வெண்ணையில் புரண்டு, நெய்யில் மிதப்பதற்கு அல்ல!.

விவசாயம் பொய்த்துவரும் இன்றைய சூழலில், விவசாயிகள் எந்த நேரத்திலும் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாடுகளை விற்கத் தயங்கமாட்டார்கள் என்பதால் வழக்கமாக மாடுகளை பராமரிக்கும் சூத்திர விவசாயிகளை நம்புவது அர்த்தமற்றது என்பதால் மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை இனி காவியைத் தூக்கித்திரியும் தயிர்வடைகளிடம் ஒப்படைப்பது என நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது. மாடுகளை பாதுகாப்பதற்கென தனியாக 'மாட்டிலாக்கா!' ஒன்றையும் அரசு உருவாக்க உள்ளது.

மாட்டிலாகா கேந்திரமான துறை என்பதால், மாடுகளை பராமரிப்பதற்கான பயிற்சி முறையாக அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தினமும் காலையில் எழுந்தவுடன் சாணியை அள்ளி கோமியத்தைத் தள்ளி தொழுவத்தைத் தொடச்சிக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். கோமியத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட சாணியை கூடையில் அள்ளிப் போட்டு தலையில் சுமந்து சென்று கொல்லை மேட்டுலயும் கழனிகாட்டுலயும் இருக்கிற எருக்குழியில் கொட்டவேண்டும். சாணியை சுமந்து செல்லும் போது கூடையின் இடுக்குகளில் உள்ள ஓட்டைகளின் வழியாக வழியும் சாணிக் கழிவுகள் முகத்திலும் தோளிலும் வழியும் போது அவற்றை லாவகமாக வழித்துவிட வேண்டும்.

குப்பையில் கொட்டிய சாணி, மக்கி எருவான பிறகு அதைக் கூடையில் வாரிப் போட்டு தலையில் சுமந்து சென்று வயல் வெளிகளில், விலைநிலங்களில் தூவ வேண்டும். எருக்குழியை தோண்டும் போது வெளியே வரும் பூரான்களையும், மண்புழுக்களையும், நட்டுவாக்கிளியையும், தவளைகளையும் இன்ன பிற பூச்சிகளையும் எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும்.

காலை - மலை இரண்டு வேலையும் பால் கறக்க வேண்டும். பால் கறப்பது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது.  பசுவின் இரண்டு கால்களையும் கயிற்றைக் கொண்டு கட்ட வேண்டும். சரியாவும் எச்சரிக்கையாகவும் கட்டத் தெரியவில்லை என்றால் மூஞ்சி பேந்திரும். பசுவின் காலை கட்டிய பிறகு தூரத்தில் கட்டி வைக்கப்பட்டு பாலுக்காக ஏங்கி நிற்கும் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட வேண்டும். கன்றுக் குட்டியின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் ஒரு முனை எப்பொழுதும் கையில் இருக்க வேண்டும். பாவம் கன்றுக்குட்டி என்ன செய்யும்? முதல் நாள் மாலை பால்கறக்கும் போது நனைந்த தொண்டை அதன்பிறகு இரவு முழுக்க காய்ந்து அகோரப்பசியில் இருக்கும் கன்று, அவிழ்த்து விட்ட வேகத்தில் பசுவின் மடியை 10000 kgf ஆற்றலோடு முட்டும் போது பசுவே சற்றுத் தள்ளாடும். இருந்தாலும் கன்று தனது குழந்தையல்லவா! அந்த முட்டலை மகிழ்வோடு பசு ஏற்றுக் கொள்ளும். பசுவின் ஒவ்வொரு காம்பையும் சப்பி சப்பி ஈரமாக்கி கன்று பாலை குடிக்கும் போது தனது குழந்தைக்கு பால்கொடுக்கும் மகிழ்ச்சியில் பசு தனது நாவால் கன்றை நக்கும் போது ஒரு தாயின் அரவணைப்பைப் பார்க்க முடியும்.

இந்த அரவணைப்பைக் கண்டு சொக்கிப் போய் நின்றால், கொஞ்ச நேரத்தில் மடி காலி. அதையடுத்து உனது வேலையும் காலி. எனவே கன்று பால் குடிக்கும் போது காம்புகளை ஈரப்படுத்தும்வரைதான் அனுமதிக்க வேண்டும். உடனே கையில் இருக்கும் கயிற்றை இழுத்து பசுவின் மடி எட்டாத தூரத்தில் கன்றை கட்டிவிட வேண்டும். ஆனால் சில கன்றுகள் கில்லாடிகளாக இருக்கும். ஒரு காம்பை மட்டுமே ஈரப்படுத்தி அதிலிருந்து மட்டுமே பாலைக் குடிக்கும். கன்று சப்பாத காம்பில் பால் சுரக்காது. மற்ற காம்புகளையும் ஈரப்படுத்தும் வரை காத்திருந்தால் அப்போதும் பால் காலி. உனது வேலையும் காலி.

கன்றுக்குட்டியை இழுப்பதற்கு யானை பலம் வேண்டும். அதுக்கு மோரும் தயிரும் மட்டும் சாப்பிட்டா போதாது. அப்பப்ப கொஞ்சம் கறியை கடிச்சிருக்கனும். ஆடோ! மாடோ! எதுவானாலும் பரவாயில்லை. இப்போதைக்கு மாட்டுக்கறிக்குத் தடை இருப்பதால் உடும்புக்கறி உசிதமாக இருக்கும்.

கைகளில் தண்ணீரை அள்ளி மாட்டின் மடியில் அடித்து காம்புகளைக் கழுவ வேண்டும். பால் கறப்பதற்கு மற்றோரு முக்கியமான திறமை வேண்டும். பசுவின் மடியருகே குத்துக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பால்பாத்திரத்தை - அனேகமாக உருண்டையான ஒரு குண்டான் – கக்கத்தில் இடுக்குவது போல இரண்டு முட்டிகளுக்கிடையில் தொடையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் ஒவ்வொரு காம்பாக அழுத்தி இழுத்து "சர்! சர்!" என பால் பாத்திரத்தில் விழும்படி பால் கறக்க வேண்டும். தொடையை கொஞ்சம் விரித்தாலே, பாத்திரம் குப்புற கவிழுந்து பாலெல்லாம் மண்ணோடு மண்ணாய்ப்போகும். அதோடு உனது வேலையும் மண்ணைக் கவ்வும்.

ஒருதடவையில் பசுவின் பாலை கறந்துவிட முடியாது. மறுமுறையும் கன்றை அவிழ்த்துவிட்டு பசுவின் காம்பு ஈரமான பிறகு கன்றை இழுத்துக் கட்டி மீண்டும் மேலே கூறியது போல பால் கறக்க வேண்டும்.

தவிடு - புண்ணாக்கு அளவா வைக்கத் தெறிஞ்சிருக்க வேண்டும். ஒரு தொட்டியில் தவிடையும், புண்ணாக்கையும் போட்டு முழங்கை நனைகிற அளவுக்கு கையை தொட்டியின் உள்ளே நுழைத்து தவிட்டையும் புண்ணாக்கையும் துழாவித் துழாவி கரைத்து கலக்க கேண்டும். எச்சரிக்கை! மாட்டை அவிழ்த்துவிட்டுவிட்டு தொட்டியை கலக்கினால் புண்ணாக்கு எனக் கருதி கைவிரலை மாடு கவ்வி விடும். விரல் ஜாக்கிரதை!.
  
வைக்கோல் அளவாகப் போட வேண்டும். அதிகம் போட்டால் பால் பாதியாகிவிடும். பால் அதிகம் வேண்டும் என்றால் தவிடு புண்ணாக்கு மட்டும் போதாது. வாய்கா வரப்புல- ஏரிக்கறையில பசுவை ஓட்டிட்டுப் போய் மேய்க்க வேண்டும். மேய்க்கும் போது பக்கத்து வயல்காரன் பயிர மேய்ஞ்சிட்டா தீராப் பகை. பாத்துக்க!

மாடு மேய்க்கும் போது வெயிலடிச்சா நெழலத் தேட வேண்டும். மழை பேஞ்சா கொட்டாயத் தேட வேண்டும். மாடு அழுக்கானா தேய்ச்சிக் கழுவ வேண்டும்.

பால் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் பசுவுக்கு பசும்புல் அதிகம் கொடுக்க வேண்டும். பசும்புல் கிடைக்க வேண்டுமென்றால் வயல் வரப்புகளில், கொல்லைமேடுகளில் உள்ள புற்களைத் தேடித் தேடி அறுத்தோ, பிடுங்கியோ, கட்டுக் கட்டியோ, புற்கள் குட்டையாக இருந்தால் சாக்குப் பையில் திணித்தோ சுமந்து வரவேண்டும். கதிர்அருவா கொண்டு புற்களை அறுக்கும் போது கைவிரல்கள் பத்திரம். அதுவும் குட்டையான புற்களை இடது கையால் கொத்தாக கோர்த்து வலது கையில் உள்ள அருவாவால் அறுக்கும் போது அனேகமாக சுண்டுவிரலில் இரத்தம் பார்க்காமல் புல் அறுக்க முடியாது.

சொந்த வயல் வரப்புகளில் புற்கள் இல்லை என்பதற்காக பக்கத்து வயல் வரப்புகளில் புற்கள் இருந்தால் வயக்காரனுக்குத் தெரியாமல் புற்களை அறுத்துவிடக்கூடாது. பக்கத்து வயல்காரன் பங்காளியே ஆனாலும் அனுமதி பெற்றே அறுக்க வேண்டும். இல்லையேல் அதற்கு ஒரு வெட்டுக் - குத்து, கோர்ட் - கேசு என அலைய வேண்டியிருக்கும். 

புற்களை மாட்டுக்குப் போடும் போது குட்டையான புற்கள் என்றால் கூடையில் வைத்தும், நீளமான புற்கள் என்றால் அப்படியே போடவும் தெரிந்திருக்க வேண்டும்.

மாட்டுக்கு மூக்குக் குத்த வேண்டும். அப்பப்ப மூக்குக் கயித்த மாற்ற வேண்டும். காசுருக்க (புளிச்சக் கீரை) நாரைக் கொண்டு கயிறு திரிக்க தெரிந்து கொள்ள வேண்டும். கயிறை காசுக்கு வாங்கினால் கறக்கும் பால் கயித்துக்கே சரியாயிடும்.

மாட்டை கட்டி வைக்க மொளயடிக்க வேண்டும். சுருக்கு போட்டு கயித்த கட்டத் தெரிய வேண்டும். மாடு தனது கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டாமல் இருக்க மொளக்குச்சியையொட்டி ஒரு முழம் அளவு நீளம் மட்டுமே கயிறு இருக்க வேண்டும். அதிக நீளமாக கயிற்றை விட்டுக் கட்டினால் கழுத்தை வேகமாக ஆட்டி ஆட்டி, ஒன்று கயிற்றை அறுத்துவிடும்; இல்லையேல் பக்கத்து மொளையில் கட்டியுள்ள மாட்டோடு மல்லுக் கட்டும்.

கன்றுக்குட்டியை சரியா கட்டத் தெரியலன்னாலும் அல்லது பசுவிற்கு அருகே கட்டினாலும் மறுநாள் காலையில பசுவின் மடி வத்திப் போயிடும். தண்ணிய தெளிச்சு மடிய அடி அடின்னு அடிச்சாலும் பாலு வராது. காம்புதான் கண்ணிப் போகும்.

அப்பப்ப மாட்டுக்கு கொம்பு சீவ வேண்டும். சீவின கொம்புகளுக்கு பெயிண்ட்டும் அடிக்க வேண்டும். மாட்டுப் பொங்கலின் போது இது கட்டாயம்.

மாடுகளைப் பராமரிப்பதற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. மற்றவைகளை வேலையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: மாட்டிறைச்சிக்குத் தடை கோரி கூப்பாடு போடும் தயிர்வடை காவிப் பசங்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கு உடன்பட மறுத்தாலோ அல்லது மாடுகளை பராமரிக்க மறுத்தாலோ அவர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!


8 comments:

 1. "வைக்கோல் அளவாகப் போட வேண்டும். அதிகம் போட்டால் பால் பாதியாகிவிடும். பால் அதிகம் வேண்டும் என்றால் தவிடு புண்ணாக்கு மட்டும் போதாது. வாய்கா வரப்புல- ஏறிக்கறையில பசுவ ஓட்டிட்டுப் போய் மேய்க்க வேண்டும். மேய்க்கும் போது பக்கத்து வயல்காரன் பயிர மேய்ஞ்சிட்டா தீராப் பகை. பாத்துக்க!" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 2. மாட்டுச்.....சாணி அள்ள.....சுத்தம் செய்ய... எல்லாவற்றுக்கும் மாட்டிலாக்கா! ஆனது கீழ் சாதியைத்தான் வேலைக்கு அமர்த்தும் தோழரே.....

  ReplyDelete
  Replies
  1. இது காவிப்பசங்களுக்கு மட்டுமான பிரத்யேக பயிற்சித் திட்டம்.

   Delete
 3. அப்படியே..., இந்த பதிவ, "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கி எனச் சொல்லும் வாத்திகளுக்கும் அனுப்பனும்..."
  எம்புட்டு கஷ்டம்ன்னு தெரிஞ்சுக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மாடுகளைப் பராமரிப்பது குறித்து இங்கே சொல்லப்ட்டது ஒரு பகுதிதான். மொத்தத்தையும் பட்டியலிட்டால் ”நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கி” என ஒரு பயலும் சொல்லமாட்டான். மாட்டை மேய்த்துப் பார்த்தால்தான் தெரியும் அது கலெக்டர் வேலையைவிட கடினமானது என்று.

   Delete

There was an error in this gadget