Tuesday, May 14, 2019

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைந்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!

அம்பேத்கர்-பெரியார் பெயரில் இராணிப்பேட்டை பெல் வளாகத்தில் ஒரு படிப்பு வட்டம். பல்வேறு துறைகளில் தங்களது படிப்பை முடித்துவிட்டு நல்லதொரு வேலையில் சேர்ந்து பணியாற்றுவோர் - பணியாற்றி ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்தம் குடும்பத்தார். இவர்கள்தான் இந்த படிப்பு வட்டத்தின் அங்கத்தினர்கள். எட்டு மணி நேரம் அலுவலகத்தில்-ஆலையில் பணிபுரிகிறார்கள். எட்டு மணி நேரம் உறங்குகிறார்கள். மீதி எட்டு மணி நேரத்தில் என்ன செய்வது? இந்த எட்டு மணி நேரத்தில் வாசிப்பின் மூலம் நாட்டு நடப்பை-சமூக அவலங்களை அலசுகிறார்கள். 

இவர்களின் இந்த அலசல் சாதி-மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி வயிறு வளர்க்கும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடி வயிற்றைக் கலக்குகிறது. அன்று நம் பாட்டன்களை படிக்கவிடாமல் தற்குறியாக்கியது போல இன்று நமது அறிவுத் தேடலை முடக்கப் பார்க்கின்றனர். இது அவர்களால் முடியாது என்ற போதிலும் அதிகாரத்தைக் கொண்டு அச்சுறுத்த முனைகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் தங்கள் பீச்சைக் கையால் புறந்தள்ளிவிட்டு வாசிப்பை வளர்த்தெடுக்கும் பயணத்தைத் தொடர்கின்றனர் இந்தப் படிப்பு வட்டத்தினர். 

அன்று நமது பாட்டன்கள் படித்தால் நாக்கை அறுக்கச் சொன்னார்கள்; படிப்பைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள். இப்படி எல்லாம்கூட நடந்திருக்குமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். தற்குறிகளாய் இருந்த நமது முப்பாட்டன்களே இதற்கு சாட்சிகளாய் காட்சியளிக்கிறார்களே!

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த ஓராண்டில் ஏராளமான வாசிப்புகள்; கருத்துரைகள்;  கலந்துரையாடல்கள் என நீள்கிறது இவர்களின் தேடல். இருபதைத் தொட்டவர்கள் முதல் அறுபதைக் கடந்தவர்கள் வரை; ஆண்கள்-பெண்கள்  என அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது இந்த வட்டம். படித்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒரு போட்டியே நிலவுகிறது. ஆம்! அனைவரும் இங்கு நெறியாளர்கள்; கருத்தாளர்கள்தான்.

இத்தகைய சிறப்புமிக்கதொரு வாசகர் வட்டத்தை பொது வெளியில் அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவை முடக்குவதற்காக அதிகாரத்திலிருக்கும் ஆதிக்கக் கூட்டத்தினர் சென்னையிலிருந்தும் வேலூரிலிருந்தும் முயன்று மூக்குடைபட்டுப் போனார்கள்.  அறிமுக விழா 16.02.2019 அன்று இராணிப்பேட்டையில் அமர்க்கலமாய் நடந்தது. இராணிப்பேட்டையைத் தாண்டி தமிழக அளவில் தடம் பதித்தது அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம். இந்த விழா வாசகர் வட்டத்தின் 15-வது சந்திப்பு.
அறிமுக விழா-முழுக் காணொளி: இணைப்பு: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அறிமுக விழா. https://www.youtube.com/watch?v=39354ZH6xlU&t=126s

அறிமுக விழாவைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற வாசகர் வட்ட நிகழ்வுகள்.

14.03.2019 அன்று தோழர் அரங்க பெருமாள் தலைமையில் நடைபெற்ற 16-வது சந்திப்பில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் “நமக்கான குடும்பம்” நூல் குறித்து தோழர் சிறீதர் அவர்களும், ரோசலிண்ட் மைல்ஸ் அவர்களின் ”பெண் என்ன செய்தாள்?” நூல் குறித்து தோழர் இளங்கீரன் அவர்களும் உரையாற்றினார்கள். தோழர் கிருபா வரவேற்புரையாற்றினார். தோழர் கோவிந்தசாமி நன்றி உரையாற்றினார்.






23.04.2019 அன்று தோழர் இந்திரன் தலைமையில் உலக புத்தக நாள் மற்றும் வாசகர் வட்டத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்ற 17-வது சந்திப்பில் தோழர் பொன்.சேகர் அவர்கள் வட்டத்தின் நோக்கம் குறித்தும்,  எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக புத்தக நாள் குறித்தும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தோழர் கிருபா வரவேற்புரை ஆற்ற, தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார். திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.















 அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

இராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்  சார்பில் 05.04.2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் முக்கிய வாயிலில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. பரவலாக சுவரோட்டிகள் ஒட்டப்பட்டன.















03.05.2019 அன்று தோழர் கலைவாணன்  தலைமையில் நடைபெற்ற 18-வது சந்திப்பில் தோழர் பூர்ணிமா வரவேற்புரை நிகழ்த்த, “மே நாளும் கார்ல்மார்க்சும்” என்கிற தலைப்பில் தோழர் சிலம்பரசன், “தொழிலாளர்களின் தோழர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் தோழர் இரவி ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் அரங்க.மேகநாதன் நன்றி கூறினார்.






வாசகர் வட்ட சந்திப்புகள் வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படவில்லை. வாசகர் வட்ட சந்திப்பு குறித்து வட்டத்தின் அமைப்புச் செயலாளர் நீலகண்டன் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் வாசிப்பின் மூலம் இக்கால கட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு முற்போக்கு சிந்தனையில் தொடர்ந்து தொலை நோக்குப் பார்வையுடன் இக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறது என்கிறார். வட்டத்தின் வெற்றி இதுதான். தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துகளுடன்

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்