II
"இந்துக்களின் மத, ஆசார, சமுதாய வாழ்வினை ஆளும் விதிகளை எடுத்துரைக்கும் ஒரு தெய்வீக நெறிமுறைதான் மனுஸ்மிருதி. அதனை இந்துக்களின் விவிலியம் என்று கருதலாம். இந்து மதத் தத்துவமே அதில் அடங்கியுள்ளது"
- பக்கம் 12, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி-6
III
"ஒரு இந்துவின், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாறு கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி, எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையில் உள்ள முடியை எவ்வாறு கத்தரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும், ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்த ஒரு செயலும், இந்துவின் வாழ்வில் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற ஒரு சகஜ விஷயமாக, படித்த இந்துக்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது விந்தையே"
- பக்கம் 34, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி 6
IV
"எல்லா மதங்களும் நல்லவை மற்றும் உண்மையானவை என்று கருதுவது தவறான நம்பிக்கையாகும். ... மதங்களிடையே பாகுபாடு காண்பது தேவையற்றது என்ற கருத்தும் மிகவும் தவறானதாகும்..... மதம் என்பது ஓர் அமைப்பு அல்லது ஓர் ஆதிக்க விளைவு; சமுதாயத்திற்கு அது உதவலாம் அல்லது தீங்கு பயக்கலாம்....இந்து மதம் எந்த லட்சியத்திற்கு உதவுகிறது, எத்தகைய சமூக லட்சியத்தை முன்வைக்கிறது என்கிற பரிசீலனைக்குச் செல்லாமல் மதங்கள் பலவாயினும் அவை அனைத்துமே சிறந்தவைதான் என்று இந்துக்கள் கூறுவதன் மூலம் இந்து மதத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதை தவிர்க்க முயலுகின்றனர் இந்துக்கள்.
இந்து மதத் தத்துவப் பிரச்சினையை மூடி மறைக்க எவ்வளவுதான் ஒரு இந்து முயன்றாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது."
- பக்கங்கள் 35, 36, 37-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6
V
"இந்து மதத் தத்துவத்தை நிர்ணயிக்க நியாயச் சோதனை, பயனீட்டுச் சோதனை (test of justice and test of utility) என்ற இரண்டு சோதனைகளையும் பிரயோகிக்க நான் எண்ணியுள்ளேன். முதலில் நான் நியாயப் பரிசோதனையை நடத்துகிறேன். அவ்வாறு செய்வதற்கு முன்பு நியாயம் அல்லது நீதி என்ற கொள்கைக்கு நான் எவ்வாறு பொருள் கொள்கிறேன் என்பதை விளக்க விரும்புகிறேன்.
நியாயம் என்பது எப்போதுமே சமத்துவம், வீதாச்சாரம், "சமன் செய்தல்" என்ற கருத்துக்களைத் தூண்டுகிறது. நடுநிலை, நேர்மை என்பது சமத்துவத்தைக் குறிக்கிறது. விதிகளும், கட்டுப்பாட்டு முறைமைகளும், நேர்மையையும், மதிப்பின் சமத்துவத்தைப் பொறுத்தது. எல்லா மனிதர்களும் ஒரே சாராம்சத்தைக் கொண்டவர்களே; அந்தப் பொதுவான சாராம்சம், அவர்களுக்கு ஒரே சீரான அடிப்படை உரிமைகளையும், சமமான சுதந்திரத்தையும் பெற்றுத் தருகிறது.
சுருங்கக் கூறின், நீதி என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மற்றொரு பெயரே. இந்து மதத்தை மதிப்பிடுவதில், நான் இந்தப் பொருளில்தான் நீதியை உரைகல்லாக பயன்படுத்துகிறேன்.
இவற்றில் எந்தக் கூற்றினை இந்துமதம் அங்கீகரிக்கிறது? இந்தக் கேள்வியை ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்வோம்!"
- பக்கம் 37, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6
ஊரான்
தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment