X
காதல்
மனு: 8-266: உயர்குலத்துப் (பிராமண-சத்திரிய-வைசிய) பெண்ணை ஒரு சூத்திரன் காதலித்தால் சாகும் வரையில் அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்.
(பட்டியல் இனச் சாதியைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தனக்கு மேலே உள்ள சாதிப் பெண்ணைக் காதலித்தால், அவனைக் கொலை செய்யவும் இன்று ஆதிக்கச் சாதியினர் துணிகிறார்கள் என்றால் அதற்கு மனு வகுத்த நீதான் அடிப்படை-ஊரான்).
மனு: 8-373: திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணுடன் ஒரு சூத்திரன் சோரம் போனால், அவன் தனது சொத்துக்களை இழப்பதுடன் அவனது ஆண் குறியும் வெட்டப்பட வேண்டும்.
மனு: 8-385: திருமணமான ஒரு பறையர் சாதிப் பெண்ணுடன் ஒரு பிராமணன் சோரம் போனால் அவனுக்கு ஆயிரம் பணம் அபராதம் விதிக்க வேண்டும்.
(இப்படி காதல் செய்வதிலும், சோரம் போவதிலும் வருணத்திற்கு ஏற்ப தண்டனை முறையில் மிகப்பெரிய பாகுபாடுகளை வைத்திருக்கிறான் மனு-ஊரான்)
XI
பல வகைக் குற்றங்கள்
மனு: 8-379: ஒரு பிராமணன் மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த போதிலும், அவனைக் கொல்லக் கூடாது. அவனுக்கு மொட்டை அடிப்பதே மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். ஆனால் மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
மனு:8-380: ஒரு பிராமணன் எத்தகையப் பாவத்தை செய்தபோதிலும் அவனை கொல்லக் கூடாது. ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.
மனு:8-381: பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் கூட நினைக்கக்கூடாது.
(இப்பொழுது புரிகிறதா, எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ, சின்ன சங்கரனையோ, தேவநாதனையோ ஏன் தண்டிக்க முடியவில்லை என்று?- ஊரான்)
இந்து சட்ட முறைகளுக்கும், இந்து அல்லாத சட்ட முறைகளுக்குள்ளேயும் எத்துனை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம்.
குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரேவிதமான தண்டனையே.
ஆனால், மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பைத் துண்டித்தல், வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்க்குத் தனித்தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும், கருதி தண்டனை அளித்தல்.
மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத்தன்மையற்ற தண்டனை விதித்தல்.
மனுவில் குற்றவியல் சட்டத்தில் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது.
குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள், சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச்சமமின்மையை நிலைநாட்டுவதேயாகும்.
சமூக சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன். அடுத்து மத சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கு மனு விதித்திருக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.
-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி - 6, பக்கங்கள் 43-46.
தொடரும்,.
தொகுப்பு: ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment