Tuesday, June 28, 2022

ஓ! தோழனே! உனது மரணத்தை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது!

1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலம் புரட்சிகர அரசியல் பயணத்தில் அவரோடு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறேன். நான் மிகத் தீவிரச் செயல்பாட்டாளராக வாழ்ந்த காலம் அது. அதன் பிறகு எனது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில ஆண்டுகாலம் அவரோடு நெருங்கிப் பழக-பயணிக்க முடியவில்லை என்றாலும் இயக்க வேலைகளினூடே அவரை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். பிரியமானவர்களின் ஸ்பரிசம் அது.

நகமும் சதையும் போல எனது குடும்பத்தோடு உறவாடியவர். எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது, அவர்களுக்கு ஒரு மூத்த நண்பனாக விளங்கியவர். நானும் எனது துணைவியாரும் இல்லாத போது அவரே எனது பிள்ளைகளைப் பராமரிப்பார்.  அதனால்தானோ என்னவோ ஒரு இருபது ஆண்டு காலம் அவரை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் நினைவில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘எயிலு’ என எனது இளைய மகனை அவர் வாஞ்சையோடு அழைக்கும் அந்தக் குரல் என் காதுகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

அரசியல் மற்றும் களப்பணிகளின் போது ஏற்படும் தவறுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் மேலும் என்னை வளர்த்துக் கொள்வதற்கு உற்சாகப் படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க எனது இல்லம் தேடி அவர் வந்த போது நான் “ஊரான்” வலைப்பூவில் எழுதுவது குறித்து அறிந்து கொண்டு, மேலும் மேலும் எழுதுமாறு உற்சாகப் படுத்தியவர். முன்னணியாளர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் ”மனுதர்ம சாஸ்திரம்” குறித்து உரையாற்ற ஒரு கருத்தாளராக நான் செல்வதற்கு இந்தச் சந்திப்புதான் வழி வகுத்தது. 

மிகக் கடுமையான உணவு கட்டுப்பாடுகளுடன் அப்பொழுது அவர் இருந்ததை நான் பார்த்த போது என் நெஞ்சம் ஏனோ சஞ்சலப்பட்டது. நோய்வாய்ப்பட்டுள்ள காலத்திலும், வயது முதிர்ந்த காலத்திலும் ஒருவர் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வது எத்துணை கொடூரமானது என்பது அவரைப் போல அனுபவித்தவர்களுக்குதான் புரியும். 

நக்சல்பாரி பொதுவுடமைப் புரட்சி அரசியலை மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பெயரில் தமிழகத்தில் பரப்புரை செய்ததில், அரசியல் தலைமைக் குழுவின் செயலாளராக இருந்து வழிகாட்டிய அவரது பங்களிப்பு அளப்பரியது. இவரைப்போன்ற முகம் தெரியாதவர்கள்தான் மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியலுக்கு முகவரி கொடுத்தவர்கள்.

புரட்சி என்ற நீண்ட நெடிய பயணத்தில், சகடுகள் நிறைந்த இச்சமூகத்தில் பயணிக்கும் போது, சில சறுக்குல்களும் பின்னடைவுகளும் தவிர்க்க முடியாதவை.  கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்க்கையில் சறுக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முதுமை காலத்தில் முடிவுக்கு வராத மன உளைச்சல் உயிருக்கே உலை வைக்கும் என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே? 

என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘இஎல்' எனும் என் இனிய தோழனே! சென்று வா! இறுதிக்காலம் மட்டுமே வரலாறு அல்ல. நீ கடந்து வந்த நீண்ட நெடிய பாதையின் சாதகங்கள்-சாதனைகள் நினைவு கூறப்படும் பொழுது சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு தாவிச் செல்லும்! 

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!










1 comment:

  1. ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்

    ReplyDelete