'டிராக்டர்களின்' பயன்பாட்டால்
ஏர் மாடுகள்
அற்றுப் போயின!
ஏர் கலப்பைகளும்
காட்சிப் பொருளாயின.
இனவிருத்திக்காக
எங்கோ,
சில காளைகள் மட்டுமே
வாட்டமாய் வளர்க்கப்படுகின்றன!
எஞ்சிய காளைகள்
கறிக்குப் பலியாக
பசுக்கள் மட்டுமே
பராமரிக்கப்படுகின்றன
பாலுக்காக!
அன்று,
தவிடும் புண்ணாக்கும்
தவிர்க்க முடியா தீவனமாய்!
இன்று,
SKM, கௌ கேர் - என
சந்தையில்
எண்ணற்ற தீவனங்கள்
கல்லா கட்ட!
என்னதான்,
பசும்புல்லும்
வைக்கோலும்
வயிற்றை நிரப்பினாலும்
காய்ந்த
மொறுமொறுப்பான
மல்லாட்டக் (1) கொடிகளே
மாடுகளின்
மனங்கவர்ந்த தீனியாகும்!
கல்லக்காயைப் (1) பறித்தெடுத்து
இலைகள் உதிராமல்
கொடிகளைப் (செடிகளை)
பக்குவமாய்க் காய வைத்து - பின்
போராக்கி
உச்சியிலே பர்தா (2) போட்டு
மூடுகின்றான்
மழையில் நனையாமல்
பாதுகாக்க!
அடிக்கும் காற்றில்
பர்தாவும்
பறக்காமல் இருக்க - சேலையால்
இருக்கமாய்
இழுத்துக் கட்டி
காக்கின்றான் போரை,
கரந்த பாலை
அப்படியே
நமக்களிக்கும்
நம்மவன்!
ஆனால்,
பசுக்களுக்கு - ஒரு
புல்லும் புடுங்காத
வெண்ணெக் கூட்டமொன்று
'கோமாதா பாரத்மாதா'வென
ஓயாமல் ஓலமிட்டு
இந்தியத் தாய்களைத்
துகிலுரித்துக் கெக்கலிக்கும்
கேடுகெட்ட 'தேசமடா' இது!
ஊரான்
குறிப்பு:
1. வேர்க் கடலையை, கல்லக்கா (கடலைக் காய்), மல்லாட்ட (மணிலாக் கொட்டை) என்றழைப்பது ஊர்வழக்கு.
2. மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாலின் அல்லது வைக்கோல் போட்டு போரை மூடுவார்கள். அதைத்தான் இங்கே பர்தா எனக் குறிப்பிட்டுள்ளேன்.
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment