அத்திமூரான் கொட்டாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று நாகப்பாடியில் பேருந்தைப் பிடித்து பாட்டி ஊருக்குப் பயணித்த காலம் நினைவில் நிழலாட இந்த ஆண்டு, ஆடியிலே ஒரு நாள் வாலாஜாவிலிருந்து பாட்டி ஊருக்குப் பேருந்தில் பயணமானேன்.
செங்கத்துக்கு முன்னால் செய்யாறு. அன்று ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கிடையாது, தரைப்பாலம் மட்டும்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மழைக்காலங்களில் பேருந்துகள் அக்கரைக்குச் செல்ல முடியாது என்பதால் இக்கரையிலேயே இறக்கி விடுவார்கள். அக்கரைக்குச் சென்றால்தான் அடுத்தப் பேருந்தைப் பிடித்து அய்வேல் (பாட்டி ஊரின் பெயர்) செல்ல முடியும்.
எனக்கு 7-8 வயது இருந்த போது ஒரு முறை, ஆற்றில் இடுப்பளவு தண்ணீர். அம்மா இடுப்பில் மூட்டை முடிச்சு, நானோ சிறுவன். நாலனாவோ எட்டனாவோ - சரியாக நினைவில்லை - பெற்றுக் கொண்டு எங்களை அக்கரையில் சேர்த்துவிட்டார் ஒருவர். ஆற்றைக் கடக்க இது ஒன்றுதான் அன்றைய வழிமுறை.
அம்மா கொண்டு வந்த சுமையை அவர் தனது வலது தோளில் வைத்துக் கொண்டார். இடது கையால் எனது இடுப்பைப் பிடித்துக் கொண்டார். எனது கால்களோ வெள்ளத்தில் மிதக்கின்றன. அவரது பிடி விலகினால் நான் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது நிச்சயம் என்பதால் அவர் என்னை இறுக்குமாய்ப் பிடித்துக் கொள்ள, எனது தாய் அவருக்கு மேல்பக்கமாய் உடன் வர பாதுகாப்பாய் மறுகரை சேர்ந்தோம்.
அந்தக் காட்சி இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறதே, ஏன்? அது ஒரு கண்டம் என்பதாலா?
ஒரு முறை, எனக்கு நீச்சல் தெரியாத காலத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த போது, என்னை எனது அக்கா காப்பாற்றிய காட்சியும் அதே போல இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறது. மரண பயம்தான் எத்துனை வலுவானது?
இன்றோ நேர்த்தியான சாலைகள்; நெடுஞ்சாலைகளில் பாலங்களுக்குப் பஞ்சமில்லை. குறுக்கே வரும் சாலைகளைக் கடக்கவே மேம்பாலங்கள் கட்டும் காலமல்லவா இது!
கோடை மழையால் ஈரமான நிலங்கள் சித்திரை-வைகாசியில் ஆழ உழுது பண்படுத்தப்பட்டு, ஆனியிலே விதை விதைத்து, முளைவிட்டு மண் பிளந்து செடியாய் மலர்ந்து, இதழ் விரித்து, ஆடியிலே பூக்கும் மானாவாரி கடலைச் செடிகளின் கண்கொள்ளாக் காட்சிகளை இன்று அதிகமாகக் காண முடியவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பொழிவு, நீர் வளம் காரணமாக பயணித்த வழி நெடுகிலும் வேர்க்கடலைக்குப் பதிலாக, பரவலாக நெல்லும், ஆங்காங்கே கரும்பு-மரவள்ளி-முல்லைகளையேக் காண முடிந்தது.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!
ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?
ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!
மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 1
மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2
மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3
மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி
N.Ramu: ஆபத்தான சூழலாக ஆற்றை கடக்கும் நிலை இருந்த காலங்களில் இனிமையான நினைவுகள்.இன்றைக்கு நவீனமான காலத்தில் 20 வருடங்கள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் நெற்பயிர்களுக்காக காத்திருந்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மனம் இல்லாமல் போய்விட்டதே.இதற்கு சப்பைக்கட்டும் அரசும் அதிகார வர்க்கங்களும்.
ReplyDeleteஎண்ணற்ற வேதனைகளை அன்றாடம் சுமக்கும் விவசாயிகளின் வேதனைகளை என்றைக்குதான் அதிகார வர்க்கம் உணர்ந்திருக்கிறது.
DeleteKanna Iran: சார் அருமையான பதிவு இனிய இரவு வணக்கம்.
ReplyDeleteVijayakumar Kuppan: மலரும் நினைவுகளை பதிவிடுவதுசிறப்பு. இதுவே இறுதியில் தன் வரலாறு புத்தகமாக மாறும்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் தோழர்
நன்றி தோழர். விவசாயிகளின் சில வலி மிகுந்த வேதனைகளை இந்தத் தொடரில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
Delete