Friday, July 21, 2023

அடி வயிற்றை நனைக்கும் மென் பூக்கள்!

பருவம் பார்த்து 
நிலம் உழுது 
உரமிட்டு பண்படுத்தி 
பக்குவமாய் 
நாற்றூன்றி 
நீர்ப்பாய்ச்சி 
கோடை என்றால் 
குடம் சுமந்து- பெரு
மழை என்றால் 
நீர் வடித்து
செடிகளைக் காக்க 
மண் கிளறி 
களை எடுத்து 
நோய் கண்டால் மருந்தடித்து,

சில பூக்கும் தருவாயில் 
சில பூத்த பிறகு
முல்லை மல்லி 
கனகாம்பரம் ரோசாவென.....
சேவல்கள்கூட ஆழ்ந்துறங்கும்
பின்னிரவு அதிகாலை வேலைகளில்
கால் கிலோ ஒரு கிலோ 
பறிப்பதற்குள்
கால்கடுத்து முதுகொடிந்து
பெரும் உழைப்பை உள்வாங்கி
இருள் நீக்கும் நெற்றி 
டார்ச் லைட்டின்- சிறு 
ஒளிவட்டத்தில்
மாந்த விரல்களின் ஸ்பரிசத்தோடு
செடிகளை 
கொடிகளை விட்டேகி,




நாற்திக்கிலிருமிருந்து 
நகர் நோக்கி 
பக்குவமாய் 
பைகளில் பயணித்து
பூ மார்க்கெட்டில் சங்கமித்து -அங்கே எடைபார்த்து - பின் 
சில்லரையில் ஊர் பரப்பி,

சரங்களாய் 
மாலைகளாய் உருமாறி
பெண்களை 
பிணங்களை
படங்களை 
சிலைகளை.....
அலங்கரித்து - பின் 
காய்ந்து சருகாகி 
குப்பையில் குவியும் போது 
மனித உழைப்பு 
அர்த்தமற்றதாய் ஆகிறதே?
ஆதங்கம் ஒரு பக்கம்!
ஆனாலும் - இங்கே
பல வேளாண் குடிகளின் 
அடிவயிற்றை 
நனைக்கிறதே இம் மென் பூக்கள்
என்கிற தேறுதல் மறுபக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

2 comments: