Showing posts with label BHEL. Show all posts
Showing posts with label BHEL. Show all posts

Saturday, May 31, 2025

இணை ஏற்பு: நாற்பதாம் ஆண்டு!

மே மாதம் 27 அன்று அகவை 67 முடிந்து 68 இல் அடி எடுத்து வைத்து, நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த போது, ஜூன் 1 (1986) எனது இல்வாழ்க்கை இணை ஏற்பு நாள் என்பதை நான்கு நாட்களுக்கு முன்பே, கல்லூரியில் எனது வலக்கரமாய் விளங்கிய இனிய நண்பன் ராஜன் சேக்ரி நினைவுபடுத்தினான். 

எமது இணை ஏற்பு விழா குறித்து "இராகு காலத்தில் இணை ஏற்பு!" என்ற தலைப்பில் ஏற்கனவே எதிர்த்து நில் வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்றை கல்லூரிக் கால நண்பர்கள் குழுவில் பகிர்ந்திருந்தேன். 


"ஜுன் முதல் நாள்தான் என் பிறந்தநாள் மச்சி..
திருமணத்திற்கு நானும் வந்திருந்தேன்.. பசுமையான நினைவுகளாக இன்றும் உளப்பதிவில் உள்ளது"

என்று நினைவு கூர்ந்ததோடு,

"இராகு காலத்தில் என்பதை விட இரகு (பிறந்த) காலம் அன்று திருமணம் நடந்தது என்பதுதான் கூடுதல் சிறப்பு"

என்று நண்பன் இரகுநாதன் பதில் எழுதினான்.

அதற்கு நான்,

"இரகு இருக்கும் இடத்தில் இராகுவுக்கு என்ன வேலை?"

என்று பதில் எழுதினேன். 

உண்மைதானே? உற்ற நண்பர்களும், தோழர்களும், உறவுகளும் நம்மை அரவணைத்துக் காக்கும் போது 'இராகு'வெல்லாம் எம்மாத்திரம்?

காசு பணம் பொருளைவிட நேசக்கரம் நீட்டும் நட்புதானே நமது நினைவுகளை பசுமையாக்குகின்றன. உறவுகள்கூட சில பல காரணங்களுக்காக இடையில் அறுபடலாம், ஆனால் நட்பு, பூத்த நாள் முதல் உதிரும் இறுதி நாள் வரை வாடாமல் மிளிர்வதால்தானே வண்டுகள் வட்டமடிக்கின்றன.

சாதி மதம் பழக்க வழக்கம் வேறு வேறாயினும் ஒருசிலருக்கிடையில் நட்பு பூக்கிறதே எப்படி? பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகக் கேடுகளை விட்டொழித்து, உண்மை நேர்மை நியாயத்தைக் கைக்கொள்ளும் இடமே மாசற்ற நட்பு மிளிரும் இடம். 

ஒத்த உணர்ச்சிதான் நட்புக்கு அடிப்படை என்பதால், 
சிலசமயம் பொய், பித்தலாட்டம் ஏமாற்று வஞ்சகம் என ஏதாவதொன்று ஒரு நண்பனை ஒட்டிக் கொண்டால் மறுகணமே அவனுடனான நட்பை வெட்டி விடுகிறோம். 

அதனால்தான், "ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது" 

என்று 13.04.2025 அன்று நடைபெற்ற எனது மகனின் இணைஏற்பு விழா குறித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

எமது இணை ஏற்பு விழா குறித்து "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதிய பதிவு கீழே இணைப்பில்.


நன்றி

பொன்.சேகர்
இணை ஏற்பு



































Wednesday, December 18, 2024

சமூக நீதி: உங்களுக்கானத் தலைவர்கள் யார்? - 15

ஊழியர்களிடையே சாதியப் பாகுபாடு 

1980 மற்றும் 1990 களில் 'பெல்' (BHEL) போன்ற பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

அதன் பிறகு, பதவி மூப்பின் காரணமாகவும், இட ஒதுக்கீட்டின் மூலமாகவும் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து ஒரு சிலரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிலரும் உயர் பொறுப்புகளுக்கு வர முடிந்தது. 

உயர் பொறுப்புகளுக்கு வரும் இத்தகைய எவர் ஒருவரும் சாதியைத் துறந்தவர்களும் அல்ல; தீவிர கம்யூனிஸ்டுகளும் அல்ல. அவர்களிடமும் சாதியச் சாயல் இருக்கவே செய்கிறது. அதன் காரணமாக, வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், ஊழியர்களின் பதவி உயர்வுகளின் போதும், இவர்களும் தங்கள் தங்கள் சாதியினருக்குச் சலுகை காட்டி முன்னுரிமையும் கொடுக்கின்றனர்.

ஓராண்டு 'தொழிற் பழகுநர்' (Apprentice) பயிற்சிக்கு ஆள் எடுக்கும்போதுகூட இந்தச் சாதியச் சாயலைப் பார்க்க முடியும். 

'திறமை' என்ற அளவுகோலை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, இவர்களே அதற்கானக் கூடுதல் மதிப்பெண்களையும் வழங்கி,  முடிந்தவரை எத்தனை பேரை பொதுப் பிரிவில் (Open Category - OC) கொண்டுவர முடியுமோ அதற்கு ஏற்ப, தங்கள் சாதிக்காரர்களுக்கான இவர்களது சலுகை நீளும். இட ஒதுக்கீட்டில் பெறுவது தனி.

பெரியார்

சாதிகளின் தொகுப்பாக இருக்கும் SC, ST மற்றும் OBC வகுப்புகளில், 
இட ஒதுக்கீட்டின் மூலம் வருபவர்களைக்கூட, இந்தத்,  தொகுப்புகளில் பல்வேறு சாதிகள் உள்ளடங்கி இருப்பதனால், தங்கள் தங்கள் சாதி ஆட்களாகப் பார்த்துத் தேர்வு செய்வதில் அந்தந்தச் சாதிக்காரர்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். 

எல்லாச் சாதிகளைச் சார்ந்தவர்களும் இதைச் செய்த போதும், பட்டியல் சாதியினர் செய்யும் போது மட்டும், அது மிகப் பெரியக் குற்றமாகப் பிறரால் பார்க்கப்படுகிறது. 

பட்டியல் சாதியினர் மீது ஓராயிரம் வன்மங்களை மனதில் வைத்துக் கொண்டே, தனக்கு ஆதாயம் தேவை என்றால், உயர் பதவியில் உள்ள  பட்டியல் சாதி அதிகாரிகளுக்கு 'எடுபிடி' வேலை செய்து பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஆதாயங்களை அடையும் பிறசாதி காரியவாதிகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கின்றனர்.

வேலைக்கு ஆள் எடுக்கும் போதும், ஊழியர்களின் பதவி உயர்வின் போதும், எல்லா அரசு அலுவலகங்களிலும் இது போன்ற சாதி அடிப்படையிலான பாரபட்சம்
தொடர்ந்து நீடிப்பதால் ஊழியர்களுக்கு இடையிலான சாதியக் காழ்ப்பும் அவர்களிடையே வழிந்தோடுகிறது. 

இத்தகையப் பாரபட்சம்தான், தமிழ்நாட்டில் உள்ள 'பெல்' (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், இரயில்வேயிலும் இன்று வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கிறது. இங்கே நாம் சாதி அடிப்படையில் பாராபட்சம் பார்க்கிறோம். அங்கே, அவன் வடக்கு தெற்கு என்ற அடிப்படையில் பாரபட்சம் பார்க்கிறான். 

தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே பெரும்பான்மை இடங்களை ஒதுக்குவதற்கும் நாம் போராட வேண்டி உள்ளது என்பதைத்தான்
மேற்கண்ட வடக்கு தெற்கு பாரபட்சம் நமக்கு உணர்த்துகிறது.

நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில், தேர்வுக்கான வினாத்தாள்களை உயர் பதவியில் இருப்பவர்கள், தங்கள் தங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் இரகசியமாகச் சுற்றுக்கு விட்டுத் தங்கள் சாதிக்காரர்களைச் 'சாதிக்க' வைப்பதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எதற்கு இரகசியம், நுழைவுத் தேர்வை நேரடியாகப் பார்த்தே எழுது என்கிறான் வட இந்தியன். இல்லை என்றால் விடைகளையும் அவனே சொல்லி விடுகிறான்.

அவ்வளவுதாங்க 'மெரிட்டு'.

எல்லா அரசு அலுவலகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. நேரடிக் கள அனுபவம் என்கிற வகையில் BHEL ஐ இங்கே நான் உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

***
உங்களுக்கானத் தலைவர்கள் யார்?

ஆலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தச் சமூகத்தில் மிகச் சொற்பமே. ஆனால், ஓரளவு விவரம் தெரிந்தவர்களாகவும் இருப்பதால் இந்தச் சாதியக் காழ்ப்பை இவர்கள் ஒட்டுமொத்தச் சமூகம் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றனர்.

தன் சாதி மக்கள் தரமானக் கல்வியைப் பெறுவதற்கும், அரசு வேலைகளைப் பெறுவதற்கும் படிப்பகங்கள் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டுவதற்குப் பதிலாக, பெரும்பாலும் அடுத்த சாதியினர் மீதான வன்மத்தையே இவர்கள் தங்கள் தங்கள் சாதி மக்களிடம் பரப்பி வருகின்றனர். 

ஏதுமறியா அப்பாவி மக்களும் இத்தகையோரின் தவறான வழிகாட்டுதலுக்குப் பலியாகி, கல்விக்கு வழிகாட்டிய மகாத்மா ஜோதிராவ் புலேவையும், பெரியாரையும், அம்பேத்கரையும், ஆனைமுத்துவையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வன்மத்துக்கும், வன்முறைக்கும் வழிகாட்டும் பசும்பொன்களையும், காடுவெட்டிகளையும், சந்தனக் கட்டைகளையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, கையில் பேனா பிடிப்பதற்குப் பதிலாக அருவாவைப் பிடித்துக் கொண்டுத் திரிகின்றனர். போதாக்குறைக்கு இப்போது 'காவி' சூலத்தையும் கையில் எடுத்துக் கொண்டனர்.

எனவே, இன்றைய சூழலில் தகுதி திறமை என்பதிலும் மோசடி நடக்கிறது. வகுப்புவாரித் தொகுப்பில் போனாலும் சாதியக் கசடு வழிகிறது. வேறு என்ன செய்ய?

சாதிவாரிப் பங்கீடு நோக்கித்தானோ? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்














Tuesday, November 26, 2024

பூத் பங்களா!

நண்பரின் தாயார் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பவரை சென்று பார்க்கவில்லையே என்ற குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இன்று எப்படியாவது சென்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்தோடு காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் வழக்கமான மாத்திரையை வாங்கிக் கொள்ளலாம் என நான் பணியாற்றிய பொதுத்துறை நிறுவன மருத்துவமனையை நோக்கிப் பயணமானேன்.

நகரப் பேருந்தில் ஏழு ருபாய் கொடுத்து  அடுத்தப் பேருந்தைப் பிடிக்க முத்துக்கடையில் இறங்கியபோது, நான் ஏற வேண்டிய இடத்தில், பேருந்து நிலையத்திற்குள்ளேயே சிலர் கூடாரம் அமைத்திருந்தனர். கிட்டே சென்று பார்த்தால் அது நாம் தமிழர் தம்பிகளின் “இலவச பொது மருத்துவ முகாம்” கூடாரம் என்பதை அறிந்த போது, ஒருபக்கம் சீமானின் கூடாரமே காலியாகும் போது, இவர்கள் எதற்கு இங்கே கூடாரம் அமைத்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று எண்ணியபோது என்னுள் எழுந்த நகைப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். 


பேருந்து நிற்க வேண்டிய இடத்தில் கூடாரம் இருந்ததால், பேருந்து உள்ளே வருமா, சாலையிலேயே ஜகா வாங்கி விடுமா என்ற குழப்பம் மனதில் ஓட, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடாரம் போட காவல் துறை எப்படி அனுமதி கொடுத்தது என்ற ஐயங்கள் என்னுள் எழ, நிலையத்திற்கு வெளியே வந்து சாலையில் வரும் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

லேசானத் தூறல் வேறு. கையில் குடையையும் கொண்டு வரவில்லை. முன்பு 'டானா' புயல் தமிழகத்தை ஒதுக்கிவிட்டு, எட்டியே சென்று விட்டதால் கடந்த ஒரு மாத காலமாக அடைமழை காலத்திலும் பிசிறுதான் தமிழ்நாட்டில் எஞ்சியிருந்தது.  ஊட்டியை உறைபனி சூழ சென்னைகூட மூடுபனியால் மூழ்கிப் போனது. அடைமழை காலத்தில் இது என்னடா காலக்கொடுமை என்று எண்ணுவதற்குள் கார்த்திகையும் வந்து விட்டது. 


தூறலைப் பார்த்தபோதுதான் வடகிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி நினைவுக்கு வர, கூகுளில் 'அக்குவெதரைத்' தட்டினேன். “வரும்.. ஆனா வராது” போலத் தோன்றினாலும், ஒரு வேளை தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்குப் ஃபெங்கல் (Fengal) எனப் பெயரும் சூட்டிவிட்டார்கள் வானவியலாளர்கள். காதலர்களின் கடைக்கண் பார்வையிலேயே பிறக்கப் போகும் குழந்தைக்குப் பெயர் சூட்டலா என  எண்ணியவாறு பயணத்தைத் தொடர்ந்தேன். 

குடியிருப்பு வளாக பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் நலச் சங்கத் தலைவரை சந்தித்து, ‘மிகவும் விலை குறைந்த வழக்கமான (regular medicine) மருந்து மாத்திரைகளைப் பெறுவதற்குக்கூட இரண்டாவது முறை வரச் சொல்கிறார்களே? எழுபதைத் தொடுபவர்களுக்கு இது தொந்தரவில்லையா”?  என முதியோர்களின் ஆதங்கத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டு மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மூப்பு அடைய அடைய குருதி ஓட்டக் குறைவால்  நடைகூட தடுமாறும் என்பதால் செருப்புக்குப் பதிலாய் 'கேன்வாஸ் ஷூ' அணிவதால்  சற்றே மிடுக்காய் நடக்கலாம் என்பதால் நானும் அவ்வாறே நடப்பது வழக்கம்.

குடியிருப்புக்குள் நுழைந்து வலப்பக்கம் சாலையில் நடந்தபோது இடப்பக்கம் எனது பிள்ளைகள் பயின்றத் தமிழ்வழி பள்ளிக்கூடம். “ஏன் நெற்றியில் திருநீறு இல்லாமல் வந்தாய்”, என எனது இளைய மகனை வகுப்புக்கு வெளியில் நிறுத்த , “ஏன்?” என்று நேரில் சென்று நான் பள்ளித்தாளாளரை வினவ, “திருநீறு வைப்பது ஒழுக்கத்திற்காக” என அவர் எனக்கு வகுப்பெடுக்க, “ஒழுக்கம் திருநீரால் வருவதில்லை, அது வளர்ப்பால் வருவது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் படிப்பைப் பாருங்கள்” என நான் அவருக்கு வகுப்பெடுக்க, “இனி திருநீறு குறித்து எனது பிள்ளையிடம் கேட்கக்கூடாது” என நான் வலியுறுத்த, அதை அவரும் ஏற்க, அந்த நினைவுகள் என்னுள் வந்துபோக பள்ளியைக் கடந்து நடக்கலானேன்.

சாலையின் இருபுறங்களிலும் திருமண மண்டப வளாகத்திலும் மொத்தத்தில் குடியிருப்பு வளாகத்திலும் பருத்து ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள் நம்மை அமேசானுக்குள் அழைத்துச் சென்றுவிடும். 2018 இல் பணி ஓய்வு பெற்ற பொழுது நான் ஊன்றிய புங்கையும் இன்று அமேசானில் அடர்த்தி காட்டுகிறது. 

மூப்படைந்தவர்கள் மெல்ல மெல்ல மெலிந்து தேய்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வைத்த மரங்களோ மேலும் மேலும் வளர்ந்து செழுமை சேர்க்கின்றன. அதுபோல நாங்கள் உழைத்து வளர்த்த ஆலையிலும், அதிக அளவில் இளைஞர்களை சேர்த்தால், நாங்கள் நட்ட மரங்களைப் போல ஆலையும் செழித்தோங்குமே என்ற ஏக்கம் மட்டும் எப்பொழுதும் எல்லோரிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆளும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் பொதுத்துறைகளின் வளர்ச்சி குன்றி, ஊழியர்களும் குறைந்து போனதால் குடியிருப்புகள் எல்லாம் செல்களின் மாளிகைகளாய் மாறி வருகின்றன. மருத்துவமனை செல்லும் சாலையின் இடப்புறம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு 'டி' வகை உயர்தரக் குடியிருப்புகள், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட்டதால் அவை பொலிவோடு காட்சி அளிக்கின்றன. வலப்புறம் உள்ள வீடுகள் படர்ந்து தவழும் மரக்கிளைகளின் பாரம் தாங்காமல் பெருமூச்சு விட்டவாறு பூத் பங்களாக்களாக மாறி வருகின்றன. 

நிரந்தரப் பணியாளர்கள் இருந்த இடத்தில் இன்று  மருத்துவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள். ஒப்பந்த முறை என்பது, அதுவும் மருத்துவ மனையில், அது நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும் என்ற எண்ணம் மனதில் ஓட, எனக்கான மாத்திரைகளைச் பெற்றுக் கொண்டு திரும்பும் போது ஓங்கி வளர்ந்த அந்த மரங்கள் என்னை மீண்டும் அமேசானுக்குள் அழைத்துச் சென்றன.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது படபடவென மழைத் தூறல். நண்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நண்பர் இருப்பதோ தென் திசையில் நூறு கிலோ மீட்டருக்கு அப்பால். தாழ்வு மண்டலம், 'ஃபெங்கலாக' மாறுமா என்ற அச்சம் என்னைக் கவ்விக் கொள்ள, செல்ல முடியவில்லையே என்ற உறுத்தல் மட்டும் நெஞ்சைக் குடைய, பிரிதொரு நாளில் நண்பரைக் காணச் செல்வதே உசிதம் எனக் கருதி வீடு திரும்பினேன்.

ஊரான்

Wednesday, October 9, 2024

சாம்சங் உணர்த்தும் பாடம்!

அரசாங்கமே தொழில்களை எடுத்து நடத்த வேண்டும். அதற்கான ஆற்றல் இங்கு இல்லையா என்ன? அயலானை, தனியாரை அழைப்பானேன்? அவனுக்குச் சலுகை தருவானேன்?  அல்லல் படுவானேன்?

கையாலாகாதவர்களே அந்நியனிடமும் தனியாரிடமும் கையேந்துவார்கள்.

தனியாருக்கு வங்கிப் பணத்தை 
வாரிக் கொடுத்து, பின்நாளில் அவன் செலுத்தாமல் கடனைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக அரசே அந்த நிதியை முதலீடாகக் கொண்டு தொழில் தொடங்கினால் மட்டுமே நாடு முன்னேறும்! தொழிலாளர்களின் வாழ்வும் வளம் பெறும்.


அப்படிப்பட்ட ஒரு அரசே மக்களுக்கான அரசு. மற்றதெல்லாம்
கார்பரேட்
கம்பெனிகளின் காப்பந்து அரசு!  டா(தா)டி மாடலும், திராவிட மாடலும் இதற்கு விதிவிலக்கல்ல.

BHEL , SAIL, HAL, ISRO என எண்ணற்ற பண்முகத் தன்மை கொண்டத் தொழில்களை 
திறம்பட நடத்தத் தெரிந்த நமக்கு, வாஷிங் மெஷினையும் வாகனங்களையும் தயாரிக்க முடியாதா?

தொழிற்சாலைகளை அரசே தொடங்க வேண்டி போராட வேண்டிய காலம் இது.

ஊரான்

Sunday, August 25, 2024

இளங்கோவன் மரணம்: மேலும் ஒரு பெருந்துயரம்!

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை, சென்னையிலிருந்து கோவை வரை, என 1978 ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் படிப்பு முடித்த, தமிழ்நாடு பட்டயப் பொறியாளர்களின் (Diplamo in Engineering) குவி மையமாக விளங்கியது திருச்சி பெல் (BHEL) நிறுவனம்.
 
பன்முகப் பண்புகளைக் கொண்டவர்களோடு பழக, உறவாட பாலம் அமைத்துக் கொடுத்தது அந்நிறுவனம்.  


நடுவண் அரசின் நிறுவனம் ஒன்றில், நிரந்தரப் பணியில் சேர்ந்தோம், இனி தன் வீடு, தன் குடும்பம்மட்டும் என்றில்லாமல், சமூகத்தில், தாங்கள் கற்ற பாடங்களையும் ஒரு படிப்பாக எடுத்துக் கொண்டு, சமூக அவலங்களையும் அலசும் ஆவல் கொண்டவர்களில் தோழர் எஸ்.இளங்கோவனும் ஒருவர்.
 
பணி நிரந்தரம் ஆகுமா என்பது உறுதி ஆவதற்கு முன்பாகவே, பயிற்சிக் காலத்தில், மகத்தான தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்ச் சாற்றைக் பருகபெல் பயிற்சி விடுதி வளாகத்திலேயே ஏற்பாடு செய்தவர் நண்பர் இளங்கோவன் அவர்கள். ‘தென் மொழியும், ‘தமிச்சிட்டும் எம்மைந் பற்றிக்கொள்ள பாலம் அமைத்தவரும் இவரே.
 
இவர் திராவிட இயக்க அரசியலில் தீவிரமாகப் பயணித்தபோதும், நான் தீவிர இடதுசாரி அரசியலில் பயணித்த போதும், அரசியலில் ஆயிரம் கருத்து முரண் இருந்தாலும், முகம் காட்டாமல், முறுக்கிக் கொண்டு செல்லாமல் புன்முறுவலோடுப் பழகும் பண்பாளர் இவர்.
 
திராவிட இயக்கப் போராளிகளும், தீவிர இடதுசாரிகளும் கரம்கோர்த்து பயணிக்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், திருச்சியில்  மகஇக மேடைகளில்கூட அவர் 
முழங்கி உள்ளார்.
 
சமூகப் பணிகளுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுத்து, அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டதால், அவர் எந்தப் பதவியில் (chargeman) பணிக்குச் சேர்ந்தாரோ அதே பதவியிலேயே  அவர் பணி ஓய்வும் பெற்றார். பெல் வரலாற்றில் அதிசயங்களிலும் அதிசயமான ஒரு அசாதாரணமான  நிகழ்வு இது. அதனால், அவர் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பை மட்டும் இழக்கவில்லை; ஊதிய இழப்பாக பணமதிப்பில் பல இலட்சங்களையும் இழந்து, தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்ந்தவர் அவர்.
 
தன்னை ஆட்டிப்படைத்த சோரியாசிஸ் எனும் நோய்கு எதிரானப் போராட்டமும் அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. ஹோமியோபதி கற்றுத் தேறி தனது இறுதி காலத்தில் பிறருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாக என்னிடம் அவர் கூறுவார். இறை மறுப்பு, தமிழ்ப் பற்று, சோரியாஸிஸ், ஹோமியோபதி என எண்ணற்றவற்றில் என்னோடு ஒப்புமை உள்ளவர்.
 
சோரியாசிஸ் ஒரு நோய் அல்ல; அது ஆரோக்கியமானவர்களின் பிணி’ (healthy man disease) என்பார்கள். ஆனாலும் அவர் அறுபத்தி ஐந்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
வாழ்வின் மிக முக்கிய நண்பரை, தோழரை இழந்துவிட்டேன். அவரது இழப்பின் துயரங்கள் எம்மைத் துரத்திய போதும், அவரது லட்சியங்களைச் சுமப்பதே அவருக்கு யாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
 
ஊரான்.