Saturday, November 22, 2025

சரித்திர நாளா? தரித்திர நாளா?

44 தொழிலாளர் நல சட்டங்கள் (laws), நான்கு சட்டத் தொகுப்புகளாக (codes) 2019 இல் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான விதிகளும் (rules) 2020 வாக்கில் உருவாக்கப்பட்டு, 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இதை முன்னறிந்து, இராணிப்பேட்டை BHEL/BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் ஆற்றிய உரையை அன்றே ஒரு தொடராக ஊரான் வலைப்பூவில் வெளியிட்டதோடு, அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டிருந்தேன். 

“வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது” 

என்று அந்தத் தொடரின் இறுதியில் எழுதி இருந்தேன். 

வேளாண் திருத்தச் சட்டங்கள் வந்த உடனேயே தாமதம் செய்யாமல் விவசாயிகள் உடனுக்குடன் களத்தில் இறங்கிப் போராடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். 

சரித்திர நாளா? தரித்திர நாளா?

தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள்  21.11.2025 முதல் நடைமுறைக்கு வந்து விட்டன. முதலாளிகளுக்கு இது சரித்திர நாள். பாடுபடுவோருக்கு இது தரித்திர நாள். 

"முதலாளிகள் தொழில் செய்வதை சுலபமாக்குகிற (ease of doing business) அதே வேளையில், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதியப்பட்டுவாடா உள்ளிட்ட  பல்வேறு நலன்களை இந்தச் சட்டத் திருத்தங்கள் உறுதி செய்கின்றன.  மகளிர் ஆற்றல் (Nari Shakti) மற்றும் இளைஞர் ஆற்றல்கள் (Yuva Shakti) மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் (Viksit Bharat)  முடுக்கிவிட இச்சட்ட திருத்தங்கள் உதவும்" என கதை அளந்துள்ளார் மோடி.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நவீன அடிமை முறையை தோற்றுவிப்பதோடு, கார்பரேட் பெரு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இச்சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, அதற்காக சில போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. 

மோடி கொடுத்த ஐந்தாண்டு கால அவகாசத்தை தொழிலாளி வர்க்கம் வீணடித்துவிட்டு, தற்போது கண்டனக் குரல் எழுப்புவது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஆகிவிட்டது. இப்பொழுதும்கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. தொழிலாளி வர்க்கம் உணர்வு பெற்றால், எதிரிகள் எல்லாம் எம்மாத்திரம்?

மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறவில்லை என்றால் வெகுவிரைவில் இந்தியா ஒரு ஆண்டான்-அடிமைச் சமூகமாக உருமாறி நிற்கும். சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பது சனாதனிகளின் வேலை என்றால் அதை உடைத்தெறிந்து தொழிலாளி வர்க்கத்தை நிமிரச் செய்வது நம் அனைவரின் கடமை அல்லவா? 

ஊரான்

குறிப்பு: சட்டத் திருத்தங்களின் சாதக-பாதக அம்சங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள, ஊரான் வலைப்பூவில் வந்த தொடர் கட்டுரைகளையும், அமேசானில் உள்ள மென்நூலையும் வாசிக்கவும்.

Monday, November 17, 2025

அரசியல் ஈனம்!

பப்பாளிக் காயில் ஒரு கூர்முனைதான் இருக்கும். ஆனால் இந்தக் காயில் கூடுதலாக ஐந்து மூக்கு முனைகள் உள்ளன. ஒரு மரத்தில் மற்ற காய்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் பொழுது, இது மட்டும் மாறுபட்டு இருப்பது ஏன்? 

பப்பாளி

இது மரபினால் ஏற்பட்ட விளைவா அல்லது அது காய்க்கும் பொழுது உண்டான நீர் சத்து உள்ளிட்ட பிற சத்துக்களின் போதாமையால் ஏற்பட்ட விளைவா? தெரியவில்லை! இது பிறவி ஊனமா இல்லை ஈனமா? இங்கே அது எதுவாயினும் உண்ணத் தகுந்ததே, ஊட்டமுடையதே!


மனிதர்களிலும் சிலருக்கு பிறவியிலேயே ஆறு விரல் மற்றும் சில அங்க ஈனங்கள் தோன்றுவது ஏதோ ஒரு வகை குறைபாட்டினால்தானோ? 'உண்டாகும்' பொழுது ஊட்டக் குறைபாட்டாலோ, சூழல் மாறுபாட்டாலோ பிறவி ஊனமும் ஒட்டிக் கொள்ளுமோ? இங்கேயும், அது எதுவாயினும் மனிதர்கள் முடங்கி விடுவதில்லை. சமூகத்தில் இயங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

போதிய தரவுகள் (ஊட்டம்) இல்லை என்றால் அரசியலிலும் 'தற்குறிகள்' எனும் புதியவகையினர் தோன்றுவது இயல்புதானே? இது பிறவி ஊனம் அல்ல, இடையில் தோன்றி வளர்ந்து அழிவை உண்டாக்கும் புற்றைப் போன்றதொரு ஈனம்!

ஊனமோ, ஈனமோ அது அபூர்வமாய் இருந்தால் ஆபத்தில்லை. அதுவே முழுமையாய் வியாபித்துவிட்டால்...? இழிவும் அழிவும் மட்டுமே மிஞ்சும்!

ஊரான்

Monday, November 10, 2025

காயத்ரி மந்திரம்: வெறும் குரங்குக் கூச்சலா?

சந்தியா வந்தனமென்று வழங்கும் காயத்ரி ஜெபத்தில் அடங்கிய சொற்கள், எல்லாச் சொற்களைப் போன்றவைகளே‌. ஆனால் அச்சொற்களை யார் காதுக்கும் படாமல், குளக்கரையிலோ, நதிக்கரையிலோ அஸ்தமன சமயத்தில், சூரியனை நோக்கி, கையும் காலும் அசைவற்றுச் சொல்வதால், அந்தச் சொற்களுக்கு வந்துள்ள புண்ணியங்களாமென அறிக. இவைகளோடு இதனை உபயோகிக்கும் பிராமணர்கள், மற்ற ஜாதியாருக்குக் கற்பிக்காமலே வந்திருத்தலும், ரகசியமாக இந்தச் சொற்களை வைத்துப் பாமர மக்களை மயக்குவதற்கென அறிக.

இந்தக் காயத்ரி ஜபம் சாதாரண ஜெபமாகும்,. இது சூரியனைக் குறித்துப் பூஜிக்கும் அதாவது பிராத்திக்கும் ஜபமாகும். ஆதி மனிதன் சூரியன் உதயத்தைப் பார்த்து, ஆச்சரியத்துடன் சொல்லும் சொற்களாகும். 

சந்தியா வந்தனம்

உதயத்தில் பட்சிகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. உறங்கிக் கிடந்த உலகமே ஒரு குதூகலத்தை அடைகின்றன. ஜீவராசிகளும் சூரிய உதயத்தைக் கண்டதும் மனக்களிப்பை அடைகின்றன. யார்தான் சூரிய உதயத்தைக் குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள்?

சூரிய உதயமும் அஸ்தமும் ஓர் அழகிய காலமாகும். எந்த உயிரும் இந்தச் சம்பவங்களைக் கண்டு களிப்படையாமலிரா. எல்லா உயிர்க்கும் உண்டாகும் குதூகலத்தை, ஆதிவேத மனிதன், இந்தக் காயத்ரி ஜபமாக உச்சரித்து வந்தான்.

இவன் உச்சரித்து வந்தது போலவே, இன்றைக்கும் சந்டா தீவுகளில் (Sunda Islands) வசிக்கும் குரங்குகளும், சூர்யோதத்தைக் கண்டு கை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. சந்தியா வந்தனமென்பதே, சந்திக் காலத்தில், அதாவது காலை மாலையில், செய்யும் வந்தனம் என்று பொருள்.

சந்டா தீவு குரங்கு 

இந்த வந்தனத்தையே கோழிகளும், பறவைகளும், குரங்குகளும் சூரியனைக் கண்டவுடன் தத்தம் கூச்சல்களால் குறிப்பிடுகின்றன. தங்களுக்குள் எழும் ஓர் குதூகலத்தை அதாவது சந்தோஷத்தைக் கூச்சல் மூலமாகத் தெரியப்படுத்துகின்றன. 

அதுபோலவே வேத காலத்து மனிதரும் சந்திக் காலங்களில் சூரியனைக் கண்டதும், ஓர்வித சந்தோஷத்தைக் குறிக்கச் சந்தியா வந்தனம் எனும் கூச்சலையே இன்றைக்கும் இரு பிறப்பாளர்களெனும் வேதியர், காலையிலும், மாலையிலும் சூரியன் பக்கம் திரும்பிச் செய்கின்றனர். சந்தியா வந்தனத்தின் ஆரம்பம் (Origin)  இவ்விதமிருக்க, தற்கால வேதியர்கள் இந்தச் சாதாரண குதூகலக் குறிப்பை (Mysterious words) மறைவான சொற்களென்றும், பிராமணர்களுக்குத்தான் இவை உரித்தென்றும் சொல்லித் திரிகின்றார்கள். மலையத் தீவுகளில் (Malay Islands) இந்த அந்தணர்கள் போய்ப் பார்ப்பார்களாகில், குரங்குகளும், “சந்தியா வந்தனத்தைக் கை கொட்டிக் குறிப்பிடுகின்றதைக் காணலாம்.

ஆனால் குரங்குகளுக்குக் கபடமென்பதும் கூடாதென்பதும், தனது சொத்தென்பதும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதும், பார்ப்பான், பறையன் என்பதும் தெரியாதாகையால், அவைகள் சத்தமிடுவதில் ஒன்றும் ரகசியமில்லை. மனிதனோ, தான் பேச ஆரம்பித்ததும், மோசம், வஞ்சனை, மேல் கீழ், உயர்வு, தாழ்வு என்று தனக்குள் வேற்றுமைகளை உண்டாக்கிக் கொண்டு, “சந்தியா வந்தனம்” பிராமணன்தான் சொல்ல வேண்டும், மற்ற பாமர மக்கள் சொல்லும் நாவைத் துண்டிக்கப்படுமென்று சட்டதிட்டங்களை உண்டாக்கிக்கொண்டு தனது சீவனத்தை நடத்தி வருகின்றான்.  உபாயத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு மந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றன. இதுதான் மந்திரங்களின் ஆதாரம். மறை பொருள் கொண்டவை எல்லாம் மந்திரங்களே!

மாட்டுச் சாணத்தைச் சாம்பலான பிறகு “மந்திரமென்பது நீறு, வானவர் தொழுவது நீறு,” என்று பாடும் ஊரில், சாதாரண சொற்கள் மந்திரங்களாக ஏன் பாவிக்கப்படா? மந்திரங்களின் உற்சவம் (Origin) இதுவே.

சாதாரணக் கல்லும், செம்பும், களி மண்ணும் விக்கிரக வஸ்துகளாக மாறும்போது, எப்படி மகத்துவமும் பயபக்தியும் பெறுகின்றனவோ, அவ்விதமே சாதாரண சொற்கள் பேசும் திறமையாலும், தொனியாலும் ரகசியமாக உச்சரிப்பதாலும், மறைவாக வைக்கப்பட்டிருந்ததாலும், பாமர மக்களுக்கு ஓர்வித நம்பிக்கையை உண்டாக்குகின்றன. மந்திரங்களின் ஆதாரத்தையும் எதார்த்தத்தையும் பாகுபாடு (Analysis) செய்து பார்க்கையில் “தோலும் கோலுமாக”வே காணப்படும்".

குடியரசு
7.8.1932
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து. 

மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

மந்திரத்தால் மாங்காய் விழுமா?

“பண்டைய காலத்தில் இருந்து வந்த அறியாமையால்தான், பாம்புக் கடிக்கு மந்திரம் ஒரு முறையென்று நாளதுவரை நமது பாமர மக்கள் எண்ணி வருவது, ஆதிகால முதல் எந்தெந்த நோய்களுக்குக் காரணங்கள் தெரியவில்லையோ, அந்தந்த நோய்களுக்கு மந்திரங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.



மந்திரமென்றால் என்ன? மந்திரம் என்பது சில சொற்களே! எல்லா சொற்களும் மந்திரத்தில் அடங்கியுள்ளன. இந்தச் சொற்களுக்கு மாத்திரம், இவ்வளவு செல்வாக்கு வந்ததேன்? இதுவும் நம்பிக்கையே (Faith). நம்பிக்கை இல்லாத சொற்கள் வெறுஞ்சொல்லென அறிக.

அந்த சொற்களில் ஏதோ மகத்துவம் உள்ளதாக எண்ண வந்தவுடன், அவைகளுக்கு மனிதர் உள்ளத்தில் நிவேதனம்  (Sacredness) அடைகின்றன. இதுதான் மந்திரச் சொற்களுக்கும், மற்ற சொற்களுக்கும் உள்ள வித்தியாசம்.

மந்திரத்தில் ஆவது ஒன்றுமில்லை. “மந்திரத்தால் மாங்காய் விழுமா?” என்ற நாத்திகர் பாடமும் இதுவே. அறியாமையால், பாமர மக்கள் மந்திரம், மந்திரம் என்று மயங்குகின்றார்கள். அறியாமையை வளர்க்கவே மந்திரங்கள் கற்பிக்கப்படுகின்றன, இந்தப் பித்தலாட்டம், வேதத்திலேயே உண்டு".

"ஓம்” எனும் சொல்லுக்கு மகத்துவம் உண்டா?

“ஓம்” என்ற சொல், மற்ற சொற்களைப் போன்ற சொல்லேயொழிய வேறில்லை. “வா” “போ” என்ற சொற்களைவிட “ஓம்” என்பதற்கு விசேடம் ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் சொல்லுக்கு மாத்திரம் ஏன் அவ்வளவு விசேடங்கள் வேத நூல்களில் கொடுத்துள்ளார்? ஏனெனில், பாமர மக்களை மிரட்டுவதற்கென அறிக.

“ஆம்” “ஓம்” சாதாரண சொற்களே. ஆனால், அதனை உச்சரிப்பதிலே ஒரு பயத்தை உண்டாக்கும்படி உச்சரிக்கின்றார்கள். சொற்களால் பயத்தை உண்டாக்கலாம். உரத்துச் சொல்வதாலும் அல்லது கேட்கப்படாமல் வாய்க்குள்ளேயே சொல்வதாலும், பயத்தை உண்டாக்கலாம். எல்லா மகத்துவமும் பயத்தால் உண்டானவைகளே. 

இந்தச் சொற்களை உச்சரிக்கும் விதங்களால் பாமர மக்களைப் பயப்படும்படி செய்வதால், அதிலிருந்து எல்லா நம்பிக்கையும், மகத்துவமும் உண்டாகின்றன”

அடுத்து, சந்தியா வந்தனம் பற்றி பார்ப்போம். 

குடியரசு
7.8.1932
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து. 

மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.

தொடரும்

ஊரான்

Wednesday, November 5, 2025

பஞ்சணைப் பிரச்சாரம் (Arm Chair Criticism)!

"சுயமரியாதை இயக்கம் சட்டசபைகளைக் கைப்பற்றாமல், அதாவது பஞ்சணையில் படுத்துக் கொண்டு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், மதஸ்தாபனங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தால் போதுமா?" (Arm Chair Criticism)

என்று கேள்வி எழுப்பி,

"உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?"

என்று வினவி,

"இந்துமதச் சபையார் சட்டசபையில் புகுந்து கொண்டு, சுயமரியாதைப் பிரச்சாரங்களைத் தடுக்க ஆரம்பித்தால் அவர்களை யார் தடுப்பது? நாஸ்திகக் கூட்டத்தைச் சட்டசபை மூலமாகத் தடை செய்தால் சபையில் யார் அதனை எதிர்த்துப் போர் புரிவது?”

என்று கேட்டதோடு,

“சமதர்மம் ஆகாய மூலமாவா_ வருமாமென்று கேட்கின்றோம்?”

“புரட்சிக்காரர்கள் சட்டசபைகளில் போகக் கூடாதென்ற மனப்பான்மையைக் குழந்தைகள் வியாதி என்றார் தோழர் லெனின்” 

என சுயமரியாதை இயக்கம் மேற்கொள்ளவேண்டிய பாதை குறித்து ‘ஈரோட்டுத் திட்டம் “புரட்சி”!’ (16) என்ற தலைப்பில் “புரட்சி” இதழில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம் அன்று சமதர்மக் கொள்கையையும் பேசியது.


புரட்சி
பக்கம் 5-17
24.12.1933

சான்று: சிங்காரவேலர் கட்டுரைகள், NCBH வெளியீடு,
***
ஆங்கிலேயரின் அடிமை இந்தியாவில், சனாதனிகள் மட்டுமே படித்துவிட்டு, சென்னை மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது, மேற்கண்ட வழிகாட்டுதல் எந்த அளவுக்கு சாலப் பொருந்துமோ, அதை இன்றைய ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு செய்துவரும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது "புரட்சி" இதழின் வழிகாட்டுதல் அப்படியே இன்றும் நூறு சதவீதம் பொருந்துவதாகத்தான் நான் கருதுகிறேன்?

அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு சனாதனிகள் மேற்கொள்ளும் இன்றைய தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை  (SIR) ஒன்று போதாதா?

இதையெல்லாம் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு கூக்குரலிடுவதைப் பார்க்கும் போது, “பஞ்சணையில் படுத்துக்கொண்டு” என்று அன்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அதிமுக போன்ற அடிமைகளும், விஜய் போன்ற தற்குறிகளும் அதிகாரத்தில் இருப்பதாலோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதாலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது?

ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை எதிர்ப்பவர்கள், போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பலமற்றிருப்பது அல்லது ஒருசிலர் பிழைப்புவாதிகளாக இருப்பது என்ற இன்றைய சூழலில், அரசியலில் நேர்மையாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகள் பலமற்று இருப்பது அல்லது தேர்தல்களைப் புறக்கணிப்பது என்பதைப் பார்க்கும் போது,

“உத்தமர்கள் எங்கு சென்று வேலை செய்து வந்தால் என்ன?" என்று,

அன்று சுயமரியாதைக்காரர்களை நோக்கி கேட்டதைத்தான், மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்களை நோக்கி இன்று கேட்கத் தோன்றுகிறது.

காலத்திற்கேற்ப செயல் திட்டம் வகுத்துச் செயல்படுபவர்களே தங்களைக் காத்துக் கொள்வதோடு, சனாதனிகளிடமிருந்து மக்களையும் காக்க முடியும்!

தேர்தலில் நேரடியாகப் பங்கேற்பது, ஒருசில மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்டுகளுக்கு நெருடலாகத் தோன்றலாம். அத்தகையோர், ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காகத் தேர்தல் களம் காணும் கட்சிகளை, கூட்டணிகளை (தற்போதைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி) நேரடியாக ஆதரிப்பதோடு, குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-சனாதனக் கும்பலுக்கு எதிரான
பஞ்சணைப் பிரச்சாரத்தையாவது (Arm Chair Criticism) 
மேற்கொள்ள வேண்டும்! தேர்தல் அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத இன்றைய சுயமரியாதைக்காரர்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இது பொருந்தும்.

ஊரான்

Saturday, November 1, 2025

சமதர்மமும் பொதுவுடமையும் மலர முட்டுக்கட்டை போடுவது யார்?

இந்தியப் பொதுவுடமையர்கள் சரியில்லை, அவர்கள் பார்ப்பனியத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை, எதிர்த்துப் போராடவில்லை, பார்ப்பனியத்தை ஒழிக்காமல் அதாவது சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய இந்து மதத்தை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை என்று சுயமரியாதை பேசுவோரும்,

சுயமரியாதைக்காரர்கள் இந்திய விடுதலையை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஆங்கிலேய அடிமை ஆட்சியை ஆதரித்தவர்கள், இவர்கள் பணக்காரர்களின் பாதுகாவலர்கள், சாதியும் மதமும் சமூக உற்பத்தி முறையின் மேல் கட்டுமானமாக இருப்பதால், இந்த மேல் கட்டுமானத்திற்கு அடிப்படையாக உள்ள அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்று பொதுவுடமை பேசுவோரும் இரு முகாம்களாக நின்று,



ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டைகளை சுமத்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் சேற்றைவாரி இறைத்துக் கொள்கின்றனர்.

சாதியை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை, அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்று இரு தரப்பினரும் எழுதி வருகின்றனர். 

பொதுவுடமைத் தலைவர்களையும் இயக்கங்களையும் சுயமரியாதைக்காரர்கள் எள்ளி நகையாடுவதையும், சுயமரியாதைத் தலைவர்களையும் இயக்கங்களையும் பொதுவுடமையர்கள் எள்ளி நகையாடுவதையும் இருதரப்புமே குதூகலத்தோடு செய்து வருகின்றனர். 

கடந்த காலங்களில், இருதரப்பிலும், இயக்கப் போக்கில் கொள்கைப் போதாமையும், நடைமுறையில் போதியத் தெளிவும் இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மாறாக ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போட்டு வருவது வேதனை அளிக்கிறது. 

‘மார்க்சிய நெறியினராக இல்லாத பெரியாரே’ என்று பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்த சுயமரியாதைக்காரர்களே முயற்சிப்பது பரிதாபத்திற்குரியது. இவர்களுக்கு பொதுவுடமை பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக பெரியாரை ஏன் இவர்கள் துணைக்கழைக்க வேண்டும்?

தங்களை அடிமைப்படுத்தும் பார்ப்பனியத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற நிலையில், அந்த மக்கள் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை பெற யோக்கியத்தை உடையவர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பி, 

“இவற்றையெல்லாம் பார்த்துதான் இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும் பொதுவுடமைத் தத்துவமும் என்ற முடிவுக்கு வந்தேமேயொழிய வேறில்லை. பார்ப்பனர் அல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்து கொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு; அப்படிக்கில்லாமல் பார்ப்பனீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தைக் கொடுப்பதற்குப் பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கிறோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று 22.10.1933 இல் குடியரசு எழுதுகிறது. (பக்கம் 11, 12, 13).

பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டி சமதர்மத்தை நிறுவுவதையும், சுரண்டலை ஒழித்துக் கட்டி பொதுவுடமை நிறுவுவதையும் ஏககாலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான் சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது. 

பொதுவுடமையைப் படைப்பதற்காக போராடும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் அதிகாரம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரானப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பொதுவுடமையர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தங்களுடைய செயல் திட்டத்தை வகுத்துக் களமாடி வருகின்றனர். அதேபோல பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடிவரும் சுயமரியாதைக்காரர்களும், இன்று நாளுக்கு நாள் பெருகி வரும் சுரண்டல் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் களமாடி ஒரு பொதுவுடமைச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்கிற அவசியத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டம் வகுத்து போராட வேண்டும் என்பதைத்தான் பொதுவுடமையர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மார்க்சையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்தும் போக்கு சமதர்மத்திற்கும், பொதுவுடமைக்கும் போடும் முட்டுக்கட்டை!

"பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக் கொடுக்க சுயமரியாதை இயக்கம் இருக்கிறது என்று சொல்லுவதானால் கஷ்டப்படும் மனித சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்விதப் பலனும் ஏற்படாதென்பதே நமது அபிப்பிராயம்" (மேற்கண்ட குடியரசு கட்டுரை) 

இதுதான் எனது அபிப்பிராயமும்கூட!

ஊரான்