Showing posts with label அழகிய பெரியவன் இலக்கியம் அம்பேத்கர் பெரியார் கரிசல் காடு. Show all posts
Showing posts with label அழகிய பெரியவன் இலக்கியம் அம்பேத்கர் பெரியார் கரிசல் காடு. Show all posts

Thursday, November 28, 2024

வடார்க்காடு வழக்குமொழி இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான ஒரு கலகக் குரல்!

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்டத்தின் ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில், பட்டியல் சாதிப்பிரிவு மக்களான பறையர் சாதி மக்கள் சந்திக்கும் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும், இழிவுகளையும், அவலங்களையும், அவற்றிற்கு எதிரானப் போராட்டங்களையும் பேசுகிறது அழகிய பெரியவன் அவர்களின் "வல்லிசை" நாவல்.

ஓரளவு படிப்பறிவும், முற்போக்கு எண்ணமும் போராட்டக் குணமும் கொண்ட, தோல் கம்பெனியில் வேலை பார்க்கும் இராவணேசன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பு முடித்து ஊர் திரும்பும் அவரது மகன் திருவேங்கடம் தந்தையைப் போல பறையர் சாதி மக்களின் விடுதலைக்காகப் போராடுவது, தந்தையின் போராட்டங்களால் தனது வாழ்வே சிதைந்து போனதாகக் கருதும் திருவேங்கடத்தின் கடைசி மகன் சமநீதியரசு என, இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்கும் கதைக்களம், எம்.ஜி.ஆர் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டம் வரை மூன்று தலைமுறைகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்றுப் புதினமாகப் புனையப்பட்டிருக்கிறது இந்நாவல்.



இந்தியக் கிராமங்கள் ஊர் என்றும், சேரி என்றும் இரண்டு அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது என்பார் அம்பேத்கர். இதுதான் தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்கு முறையின் தொடக்கப் புள்ளி என்பதை இந்தியக் கிராமங்களில் பயணித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

கூழோ குடிநீரோ அவற்றை இரு கைகளில் ஏந்திக் குடிப்பது, தேநீர்க் கடைகளில் தனிக் குவளை, உணவகங்களில் பிறசாதியினரோடு அமர்ந்து உண்ணத் தடை, சாதியைச் சொல்லித் திட்டுவது போன்ற வெளிப்படையான சில நடவடிக்கைகள்தான் தீண்டத்தகாதவர்களுக்கு நேரடியாகப் புரியும். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி ஆதிக்கச் சாதியினரின் மனதில் குடிகொண்டிருக்கும் தீண்டாமை எண்ணங்கள் பற்றி தீண்டத்தகாதவர்களால் அறிந்து கொள்ள முடியாது.

நாவலின் இறுதியில் அடடா, பழசை எல்லாம் (ஆதிக்கச் சாதியினருக்கு எதிரானப் போராட்டங்கள் வழக்குகள் பழிவாங்கல்கள்) நான் எப்பவோ மறந்துட்டேன் திருவேங்கடம். மனுசன்னா மன்னிக்கத் தெரியணும்..” என திருவேங்கடத்திடம் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தீர்த்தமலை பேசுவது போல, “இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா, எல்லாம் மாறிப்போச்சுஎன வேறு மொழியில் பலரும் பேசுவதைப் இன்றும் கேட்க முடியும்.

தீண்டாமையின் வடிவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாமே ஒழிய, தீண்டாமை எண்ணங்கள் இன்னமும் ஆதிக்கச் சாதியினரின் ஆழ்மனதில் நிலை கொண்டுள்ளது, அவை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

எந்த ஒரு படைப்பாளியும், தான் செய்கின்ற தொழில், சந்திக்கின்ற பிரச்சனைகள், பழகுகின்ற மனிதர்கள், வாழுகின்ற புறச்சூழல் பற்றிதான் எழுத முடியும். அதைத்தான் அழகிய பெரியவனும் செய்திருக்கிறார்

வன்னியர், முதலியார், பிள்ளை, வெள்ளாளர், தேவர், நாடார், பார்ப்பனர் உள்ளிட்ட சாதி மக்களோடு பழகுகின்ற ஒருவர் அவரது படைப்பில் அந்தச் சாதி மக்களைத்தான் பிரதிபலிக்க முடியும். அவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரராகவும் இருக்கலாம். அதற்காக அவரது படைப்பை வன்னியர் இலக்கியம், முதலியார் இலக்கியம், பார்ப்பனர் இலக்கியம் என்றோ …. அழைக்காத போது, பறையர் சாதி மக்களைப் பற்றியப் படைப்பை அல்லது பறையர் சாதியைச் சார்ந்த ஒருவரின் படைப்பை தலித் இலக்கியம் என்று அழைப்பது இலக்கியத்திலும் தீண்டாமையைக் கடைபிடித்து ஒதுக்குவதற்கு ஒப்பாகும்.

இலக்கியம் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். அப்படித்தான் நான் வல்லிசையைப் பார்க்கிறேன். வல்லிசை ஆதிக்கச் சாதி மக்களையும், ஆதிக்கத்திற்கு உள்ளாகிற மக்களையும் பற்றிப் பேசுவதால் இது எல்லோருக்குமான இலக்கியம்தான்.

இந்நாவல் பேசுகின்ற படிப்பு, கல்வி, உள்ளூர் படிப்பகங்கள், பல்வேறு இதழ்கள், நூல்கள் இவை எல்லோருக்கும் பயன்தரக் கூடியவைதானே? படிக்க வேண்டும் என்பதைத்தானே வலியுறுத்துகிறது வல்லிசை. ஒருவன் படித்து அறிவாளியானால் அது அவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்தானே பயன்படப் போகிறது.

சமூகத்தை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் மார்க்ஸ், மாவோ, அம்பேத்கர், பெரியார், புலே, ராகுல்ஜி என பலரையும், சங்க இலக்கியம் உள்ளிட்ட இலக்கியங்கள் மற்றும் பல்வேறு இதழ்களையும் நூல்களையும் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார் அழகிய பெரியவன்.

தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடும் சங்கத் தலைவர்களும்இந்து மதவெறிப் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும், பொதுவுடைமைச் சமூகம் படைக்கவும் போராடும் கம்யூனிஸ்டுகளும்போராட்டக் களத்தில் சந்திக்கும் அடக்குமுறைகளையும் வழக்குகளையும் கையாள்வதற்கு வல்லிசையின் இரண்டாம் தலைமுறை கதை மாந்தன் திருவேங்கடத்திடம் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு.

கிராமங்களையும் வயல்களையும் வனங்களையும் சென்னையின் வீதிகளையும் விவரிக்கும் போது அவைகளோடு வாழ்ந்திருக்கிறார்; இயற்கையை நம்மீது அள்ளித் தெளிக்கிறார்  நாவலாசிரியர். மனித மனங்களை ஊடுருவி அவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நம் நெஞ்சங்களில் பாய்ச்சுகிறார்.

மரங்களடர்ந்த மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் உள்ள மரங்களைப் பற்றி,
வெள்ளைக்காரன் கொண்டு வந்த அம்மரங்கள் கரும்பச்சையில் முட்டை வடிவ இலைகளுடனும் சடைபோலத் தொங்கும் காம்புகளில் காய்களுடனும் அவனை ஈர்த்தன. வாதமடக்கியும் மயில் கொன்றையும் சிரித்தன; 
பல இடங்களில் பெருங்கொன்றையைப் பார்க்க முடிந்தது. ஊர்ப்பக்கங்களில் இருக்கும் பொன்னாவரைக்கும் இதற்கும் குழப்பம் வந்தது; கொன்றையின் மஞ்சள் பூக்கள் பொன் கம்மல்களாய் மின்னின. காலைச் சூரியன் இளமஞ்சள் ஒளி மரங்களுள் ஊடுருவி கோட்டுச் சித்திரங்களை சாலையில் வரைந்தது
என வர்ணிக்கிறார்.

பூமியின் ஆழத்திலிருந்து கற்களுக்கும், மண் துகள்களுக்கும் நடுவிலே மறைந்திருக்கும் பொன் துகள்களை எடுப்பதற்காக மலை மலையாய் மண்ணை அகழ்ந்து கொட்டுவது போல்தானே போராட்டங்களும் போய்விட்டன? சமத்துவம் என்கிற ஒரு துண்டுப் பொன்னை மனிதனின் பல்வேறு இழிமை குணங்களிலிருந்து அகழ்ந்தெடுக்க எவ்வளவு கசடுகளை வெளியேற்ற வேண்டியிருக்கிறது? ஒரு மனிதன் தன்னுடன் வாழும் இன்னொரு மனிதனை சக ஜீவியாக ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்?” என்று திருவேங்கடத்தின் கசந்து போன மனநிலையைக் படம்பிடித்துக் காட்டுகிறார்.

ஆதிக்கச் சாதியினரைத் தாக்கியதாகப் புனையப்பட்ட பொய் வழக்கிலிருந்து தப்பிக்கத் தலைமறைவு வாழ்க்கை, பிணை பெறுவதற்காக கோலாருக்கும் சென்னைக்கும் அலைந்த அலைச்சல், இறுதியில் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைந்து, நீதிமன்றத்தின் தரையை தன் இரு கைகளாலும் திருவேங்கடம் தொட்ட போது, அவர் கண்களிலிருந்து பொலபொலவென நீர்கொட்டியதைப் படிக்கும் போது, நமது நெஞ்சத்தையும் தொட்டு வாசகனின் கண்களையும் கசிய வைக்கிறார் அழகிய பெரியவன். ஒரு படைப்பாளி இலக்கிய உலகில் தடம் பதிக்கும் இடம் இதுதான்.

இன்றும்கூட ஊரும் சேரியும் தனித்தனியாகத்தான் உள்ளன. ஊரென்றால் அது ஆதிக்கச் சாதியினரை குறிப்பதாகும். சேரி என்றால் அது தீண்டத்தகாதவர்கள் இருப்பதைக் குறிப்பதாகும். ஆனால் நாவலின் ஒரு சில இடங்களில் மட்டுமே தீண்டத்தகாதவர்கள் வசிக்கும் பகுதியை சேரி என்று குறிப்பிடுகிறார். மற்ற இடங்களில் ஊர் என்று குறிப்பிடும் பொழுது அது வாசகனின் மனதில் சற்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

முழவு, துடி, தண்ணுமை என்ற மூன்று அத்தியாயங்களாக நாவல் பகுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே இசைக்கருவிகளோடு தொடர்புடையது. தீண்டாமைக்கு எதிரான போராட்ட வடிவத்தில் பறை இசையைத் தடை செய்வது நாவலின் மையப் பேசு பொருளாக இருப்பதால் 'வல்லிசை' என்ற பெயர் பொருத்தமானதுதான் என்றாலும் எளிய மக்களுக்கு முழவு, துடி, தண்ணுமை மூன்றையும் விளங்கிக் கொள்வது சிரமம். எங்கேயாவது குறிப்பு கொடுத்திருக்கலாம். 

ஒட்டுமொத்த சமூகத்தில் மட்டுமல்ல பட்டியல் சாதி மக்களிடையேயும் படித்தவர்களும் படிப்பாளிகளும் அறிவாளிகளும் பெருகி உள்ள காலகட்டத்தில், 2016 இல் வெளியான இந்நாவல் வெறும் 500 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது வாசகர்களிடம் உள்ள வாசிப்பின் அவலத்தை வெளிக்காட்டுகிறதுஇலக்கிய உலகம் சந்திக்கும் சோகம் இது.

வடார்க்காடு வட்டார வழக்கு மொழியில், ஓங்கி ஒலிக்கும் வல்லிசை கரிசல் காட்டையும் அதிரவைக்கட்டும். வடார்க்காடு வழக்குமொழி இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான ஒரு கலகக் குரல் வல்லிசை!

ஊரான்