Showing posts with label உலகமயம். Show all posts
Showing posts with label உலகமயம். Show all posts

Sunday, February 9, 2014

எச்சரிக்கை: கல்விக் கொள்ளையர்கள் கடை விரிக்க வருகிறார்கள்!


அன்று

தன்னைப் போல ஏர் - மாடு - கலப்பை என தனது மகனும் விவசாயம் செய்து துன்பப்பட வேண்டாம் என நினைத்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனை 1970 வாக்கில் ITI பிட்டர் படிப்பு படிக்க வைத்தார்.

அப்ரன்டிஸ் பயிற்சியாளர் வேலைக்கு ஆள்பிடிக்கும் கலையை அன்றே கற்று வைத்திருந்த சென்னை அண்ணா சாலையிலும், செம்பியத்திலும் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் ITI படித்த அம்மாணவன் பயிற்சியாளராகச் சேர்ந்து ஓராண்டு கசக்கி பிழியப்பட்டு நிரந்தரம் செய்ய முடியாது என விரட்டப்படுகிறார். பிறகு சில ஆண்டுகள் கழித்து நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து சுமார் முப்பந்தைந்து ஆண்டுகாலப் பணி முடித்து சமீபத்தில்தான் ஓய்வு அவர் பெற்றார்.

இன்று

ஏழை எளிய விவசாயிகள் தங்களது பிள்ளைகளை ITI அல்லது டிப்ளமோ படிப்பு படிக்க வைக்கிறார்கள். படிக்கும் போதே வளாக நேர் காணல் மூலம் ஆட்களை அள்ளிச் செல்கின்றனர் தனியார் ஆலை முதலாளிகள். பையனுக்கு வேலை கிடைத்து விட்டது என்கிற மகிழ்ச்சியில் திளைக்கிறது குடும்பம். பட்ட கடனை அடைத்து விடலாம், எத்தனை காலம்தான் கூரைவீட்டில் குடியிருப்புது? இனி சொந்தமாக மெத்தை வீடொன்றை கட்டிக் கொள்ளலாம் என பெற்றோர்கள் மனக்கணக்கு போடுகின்றனர்.

ஆயிரம் கனவுகளோடு ஆலைகளில் பயிற்சியாளர்களாக சேர்கிறார்கள் அம்மாணவர்கள். நம்பிக்கைக்குரிய வகையில் கடினமாக வேலை செய்தால் நிரந்தரமாக்கிக் கொள்வார்கள் என்கிற பொய்யான வாக்குறுதிகளை நம்பி தங்களது ஆற்றல் அனைத்தையும் கொட்டி அந்த நிறுவனத்திற்காக உழைக்கிறார்கள். ஓராண்டு பயிற்சி முடிந்த பிறகு 'போய் வா' என அந்நிறுவனம் கதவை மூடிக் கொள்கிறது. வேலை தேடி மீண்டும் வேறு ஆலைகளின் கதவுகளைத் தட்டினால் அங்கேயும் பயிற்சியாளர் பணிதான். இங்கேயும் ஓராண்டுதான். மீண்டும் கதவு இழுத்து மூடப்படுகிறது. பிறகு மற்றுமொரு ஆலை. மீண்டும் அதே பயிற்சியாளர் பணி. இம்முறையும் கதவு மூடப்படுகிறது.

மாதம் ரூ.3000 த்திலிருந்து ரூ.5000 வரை பயிற்சியாளர்களுக்கு தரப்படுகிறது. இது மாதச் சம்பளம் அல்ல. ஸ்டைபண்ட். இதில் பெரும் பகுதியை நடுவண் அரசே கொடுக்கிறது.

மூன்றாண்டுகளில் தனது ஆற்றல் அனைத்தையும் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இழந்துவிட்டு சக்கையாய் துப்பப்பட்ட இத்தகைய இளைஞர் கூட்டம் லட்சக் கணக்கில் பெருகிவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவால் முன்பு போல பொதுத் துறை அரசுத் துறை நிறுவனங்களும் கடந்த பல ஆண்டுகளாகவே வேலைக்கு ஆள் எடுப்பதில்லை.

மீண்டும் பிழைப்பு தேடி

பிழைப்புக்கு என்ன செய்வதென்று புரியாமல் மீண்டும் தனது கிராமங்களுக்கே திரும்புகின்றனர். இனி அப்பன் தொழிலையாவது செய்யலாமென்றால் மழை இல்லை; கிணறு - ஆறு – ஏரி - அணைகளில் நீரில்லை; விவசாயம் இல்லை; விவசாயம் செய்தாலும் விளைவித்த பொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. மொத்தத்தில் வருவாய் இல்லை.

வயதோ முப்பதைத் தொடவிருக்கிறது. திருமணம் செய்து வைக்கலாம் என்றால் வீடு - வாசல் இல்லை, வேலை இல்லை என பெண் தர தயங்குகிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். ITI மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களின் நிலை இதுதான். இன்று பட்டி தொட்டி எங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டதால் இவர்களின் பட்டியலில் தற்போது BE பட்டதாரிகளும் சேர்ந்து விட்டார்கள்.

ஆசை வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை

கடந்த மூன்று ஆண்டுகளில் வளாக நேர்காணல் மூலம் 40% மாணவர்கள் நேரடி வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். 20% பேர் உயர்கல்வி பயிலச் சென்றுள்ளனர். 10- 20% மாணவர்கள் தொழில் முனைவோராகிவிட்டனர் (அதாவது முதலாளிகளாகிவிட்டனர்). 10% மாணவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று விட்டனர்.”

ஒரு தனியார் பொறியில் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சமீபத்தில் அள்ளித் தெளித்த புள்ளி விவரங்கள் இவை.

ஆண்டு தோரும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களில் வெறும் 10% மாணவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியைப் (employability) பெற்றுள்ளனர் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். வேலை கிடைத்தாலும் ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம் என்கிற விரத்திக்கு ஆளாகி வேலையை விட்டு ஓடும் நிலையில்தான் பலரும் முதலாளிகளால் கசக்கி பிழியப்படுகின்றனர்.

இவர்கள் தவிர மற்றொரு சாரார் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான தகுதியை மேலும் வளர்த்துக் கொள்ளவே மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இனி கிடைக்காது, மேற்படிப்பு படிக்க பொருளாதார வசதியும் போதாது என்பதால் படித்த படிப்புக்கு தொடர்பு இல்லை என்றாலும் ஏதாவதொரு தொழிலைத் தேர்வு செய்து 'முன்னேற' வேறு சிலர் முயல்கின்றனர். ஆனால் தொழில் முனைவோராக முயன்ற இவர்களில் பலர் தற்கொலைக்கு முயலும் அவலம் எத்தனை பேருக்குத் தெரியும்?
 
'மெய்ட் சர்வண்ட்' வேலையில் பட்டதாரிப் பெண்கள்

பட்டம் பெற்ற பல பெண்கள் வேலைக்காக காத்திருப்பதில்லை. காதல் - கீதல் செய்து விடுவாளோ என்கிற பயத்தில் படிப்பு முடியும் முன்பே சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து குடும்பம் எனும் ஆலையில் ‘நிரந்தர’ வேலை ஒன்றிற்கு பெற்றோர்களே உத்தரவாதம் செய்து விடுகிறார்கள். படிக்கும் போதே வேலை. இதுவும் ஒரு வகையில் வளாக நேர்காணல்தானே!. வேலை என்னவோ ‘மெயிட் சர்வண்ட்’ வேலைதான். ஆனால் டெசிக்னேஷனோ ‘ஹவுஸ் ஒய்ஃப்’. இத்தகைய வேலை வாய்ப்பினை பெற்ற பட்டதாரிப் பெண்கள் முதல் 40% த்தில் அடங்குவர் போலும்!

தனியார் மயம்தாராளமயம்உலகமயக் கொள்கையின் விளைவால் ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள பலர் தங்களது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடுபடுகின்றனர்.

10 % சதவிகித மாணவர்கள் மட்டுமே பயன் பெறுகின்ற ஒரு கல்விக்காக 90% மாணவர்கள் ஏமாற்றப்படவும், கல்விக் கொள்ளையர்கள் தங்களது பைகளை நிரப்பிக் கொள்ளவுமே மேற்கண்ட புள்ளி விரவங்கள் உதவக் கூடும்.

ஆசை வார்த்தைகளைக் கண்டு மோசம் போவதை விட நம் வாழ்வு மோசமாவதற்கான காரணத்தைக் களைய முற்படுவோம்!

Friday, March 11, 2011

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று!

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுமனைப் புகுவிழா நடத்தினார். கிரஹப்பிரவேசத்துக்குரிய சகல சம்பிரதாயங்களோடுதான் இந்த விழாவும் நடைபெற்றது. நடுத்தர வர்க்கத்து இரசனைக்கேற்பதான் வீடு கட்டியிருந்தார். விழாவிற்கு வந்தவர்கள் வீட்டை ஒரு நோட்டம் விட்ட பிறகு இது நல்லா இருக்கு. அது எதற்கு? இங்கே இதை வைக்கலாம். அதை அங்கே வைக்கலாம். பக்கத்தில் உள்ள காலியிடம் யாருடையது? எனக் கேள்விகளை எழுப்பி சிலவற்றிற்கு பதிலையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வீட்டைக் கட்டியவரோ 'பார்க்கலாம்' என்பது போல தலையசைத்தார். தலையை மட்டும்தான் ஆட்டமுடியும். ஏற்கனவே கடன் எனும் ஈட்டி தலைக்கு மேலே தயாராய் இருக்கிறது.

எல்லோரும் வீட்டைப் பார்த்தபோது நான் மட்டும் ஐயரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஐயர் அல்ல இரண்டு ஐயர்கள் வந்திருந்தார்கள். முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளவயது ஐயர்கள். மாநிறத்தில் வாட்டசாட்டமாய் வாலிப மிடுக்கோடு இருந்தார்கள். இவர்கள் மந்திரம் ஓதும் ஐயர்கள் மட்டுமல்ல, மல்யுத்தத்திற்கும் தயாராய் இருக்கும் பரிவாரக் காளைகள் என்பதை உடற்கட்டு எடுத்தியம்பியது. தேவநாதன்களின் சூட்சமம் இதுதானோ? 

ஐயர்களைப் பார்க்க வேண்டுமானால் காலை ஆறுமணிக்குள் செல்ல வேண்டும். ஆறு மணிக்குமேல் கிரஹப்பிரவேசம் நடத்தப்படாது. பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அப்போது இருப்பார்கள். நண்பர்கள் எல்லாம் பின்னர்தான் வருவார்கள். இது வாடிக்கை.

நெருப்புக் குண்டம் வைத்து யாகம் வளர்த்தார்கள். வீட்டு உரிமையாளரும் அவரது துணைவியாரும் புதுமணத் தம்பதியராய் மாறியிருந்தார்கள். ஐதீகப்படி இது அவர்களுக்கு இன்னொரு திருமணமாம். ஐயர் ஏதேதோ மந்திரங்களைச் சொல்லி வீட்டில் புகையைக் கிளப்ப வந்திருந்தோர் கண்களைக் கசக்க சம்பிரதாயங்கள் முடிந்தன. ஒன்றரை மணி நேரத்தில் வேலை முடிந்தது. ஐயர்களின் வேலை நேரத்தை ஆண்டவன் அன்றே தீர்மானித்து விட்டான். அதற்கு மேல் நீங்கள் வேலை வாங்கினால் அது தெய்வக் குத்தம் ஆகிவிடும். 

அக்கினியில் எரிந்தது போக மீதியை சுருட்டி மூட்டைக் கட்டினார்கள். இது ஒரு ஐநூறு தேரும். ஒன்றரை மணி நேர கூலி மட்டும் ஆயிரத்து ஐநூறு. மொத்த வசூல் இரண்டாயிரம். எந்தத் தொழிலில் இத்தனை வரும்படி வரும்?

பிரவேசமெல்லம் விடிவதற்குள் முடிந்துவிடும். அதன்பிறகு 6-7.30, 9-10.30 என இரண்டு முகூர்த்தங்களை நடத்தினால் மேலும் ஒரு ஆறு தேறும். ஆயிரமாயிரமாய் ஐயர்களுக்கு அள்ளித் தரும் அட்சய பாத்திரங்களையும் அவர்களே தயாரித்து வைத்துள்ளதுதான் அவாளின் சாமார்த்தியம்.

இடுப்பைச் சுத்தி 'செல்போன்கள்', அடுத்த முகூர்த்தத்துக்கு விரைந்து செல்ல 'ஸ்பிளண்டர்கள்', மூட்டை முடிச்சை எடுத்துச் செல்ல மூட்டையின் அளவைப் பொருத்து 'டி.வி.எஸ் ஃபிப்டியிலிருந்து' மகிழுந்து (car) வரை என சகல வசதிகளும் இவர்களுக்குச் சொந்தம். நம்மால் ஐம்பதுகளில்தான் பூமி பூஜையே போடமுடிகிறது. அவாளெல்லாம் முப்பதுகளில் பிரவேசத்தையே முடித்து விடுகிறார்கள். பாலைக்கூட இன்று 'பாக்கெட்டில்' கேட்கும்போது முடியாதா என்ன?

"'அங்கிள்', நீக்களும் கோயிலுக்குப் போங்க. எங்கள மாதிரி 'கார்' வாங்கலாம்" என என்னிடம் விளிக்கும் ஏதும் அறியா எதிர் வீட்டு 'ப்ரி.கே.ஜி' பெண் குழந்தைக்கு எப்படி தெரியும் இதெல்லாம் அவாள் மட்டுமே செய்யும் தொழில் என்று.   

உலக மயத்தால் அமெரிக்காவின் கதவுகள் திறந்த போது முதல் ஆளாக உள்ளே நுழைந்தவர்கள் ஐயர்கள்தானே. ஒரு சிலர் 'ஐ.டி'துறையில் ஐக்கியமாக, எஞ்சியவர்களுக்கோ ஏக கிராக்கி. பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என நாம் யோசிப்பதற்குள் பையை எடுத்துக் கொண்டு அவாளெல்லாம் கிளம்பி விடுகின்றனர். மந்திரம் ஓதும் தொழிலுக்குதான் எத்தனை மவுசு. யானை செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அது இதுதானோ!

ஒரு பக்கம் உலக மயத்தால் ஆட்குறைப்பு, ஆலைமூடல் என உள்ளதும் பறிபோகுதே என நாம் அங்கலாய்க்கிறோம். வாழ்க்கை நெருக்கடிக்கு வழி தெரியாததால் பரிகாரங்களை நாடுகிறோம். ஐயர்கள் இல்லாமல் பரிகாரம் ஏது? ஐயர்களே எட்டிப் பார்க்காத சேரிகள்கூட இன்று அவாளின் தொழிற் பேட்டைகளாக மாறிவிட்டன. தொழில் பெருகிவிட்டது. பரிகாரம் செய்ய தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. அதியமான்=லிபர்டேரியன் 'தியரிப்படி' இங்கே 'டிமாண்ட்' அதிகம். 'சப்ளையோ' குறைவு. விலை... கூலி.....கட்டணம் ஏறாதா பின்ன? 

இன்று மந்திரம் ஓத ஆள் பற்றாக் குறை என்றால் பாருங்களேன். ஆள் பற்றாக் குறையை சமாளிக்க அய்யன் கலைஞர் ஆணை பிறப்பிக்க, அதைப் பிடுங்கி அடுப்பில் போட்டு விட்டார்கள். சாஸ்திர சந்தையில் போட்டிக்கு இடமில்லையாம். ஊக்குவிப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் போட்டியாளர்களை ஒழிப்பதுதானே உலகமயம், தாராளமயம், தனியார்மயம். உலக மயத்தின் முதல் வெற்றி இங்கேதான் தொடங்குகிறது.

இன்றைய சாஸ்திரத் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது உலக மயம்தான். அதை 'மோனோபோலியாக' தக்கவைத்துக் கொள்வது அவாளின் சமார்த்தியம்.

ஒன்றரை மணி நேரத்தில், சிறுநகரங்களில் ஆயிரங்களையும் சென்னை போன்ற பெருநகரங்களில் பத்தாயிரங்களையும் சுலபமாய் அள்ள முடியும். கை ராசிக்கேற்ப ஆயிரங்கள் அதிகமாகுமேயொழிய ஒரு போதும் குறையாது.

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று!