சமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்சிக்குச் சென்றிருந்தேன். இனிமையான மாலைப் பொழுது. நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட பாட்டுக்கச்சேரி - அதாங்க 'ஆர்க்கெஸ்ட்ரா'-அரங்கையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. தாளமும் பாட்டும் தனித்தனி 'ட்ராக்குகளில்' ஓடிக்கொண்டிருந்தன. சுட்டுப் போட்டாலும் சுருதி சேராது போலும். பாடியவர்களும் ஈடுபாட்டோடு பாடவில்லை. கருவிகள் எழுப்பிய ஒலியோ அனைவரின் காதுகளையும் கிழித்துக் கொண்டிருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இது போன்ற விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை பாட்டுக் கச்சேரிகள் தட்டிப் பறிக்கின்றன.
கிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளை இப்பாட்டுக் கச்சேரிகள் நம்மைப் பேசவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, அவை ஏற்படுத்தும் நாசகார ஒலி நமது காதுகளைக் கிழித்துத் தலைவலியை உண்டாக்குகின்றன. பாட்டுக் கச்சேரிகள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு 100 டெசிபெல்லுக்கும் மேலாகத்தான் இருக்கும். ஒலியின் அளவு 60 டெசிபெல்லுக்கு மேலே இருந்தால் நமது உடல் நலத்தை பாதிக்கும் என்பது மருத்துவ உலகம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள உண்மை. மெல்லிய காதுச் செவிப்பறைகளைச் சேதப்படுத்தும் இந்நாசகார ஒலி மூக்கு, தொண்டை உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் வெகுவாகப் பாதித்து உடல் நலிவை உண்டாக்குகிறது.
இசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கும் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்.
சரி, இசைக்கணக்குதான் சரியில்லை. ஏதாவது பயனுள்ள செய்தியாவது இக்கச்சேரிகள் மூலம் சொல்லப்பட்டால் கொஞ்சம் காது கிழிபடுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். திருமண வரவேற்பு மட்டுமல்ல; கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் 'ஆர்க்கெஸ்ட்ராக்களில்' அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் அறைக்கிறார்கள். மாவு அறைப்பவர்களும் (பாடுபவர்கள்) எந்திரங்களும்தான் (இசைக்கருவிகள்) வேறுபடுகின்றன. வேறென்ன சொல்ல.
ஊரான்.