Showing posts with label சிதம்பரம். Show all posts
Showing posts with label சிதம்பரம். Show all posts

Saturday, April 9, 2011

தேர்தல் கலேபரத்தில் புதைந்து போன தீண்டாமைக் கொடுமை!



"ஓய்வுபெற்ற தலித் அதிகாரியின் அறையை சாணம் தெளித்து சுத்தம் செய்த அரசு ஊழியர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை.

திருவனந்தபுரம், ஏப்.7: ஓய்வு பெற்ற தலித் அதிகாரியின் அறையை பசு சாணத் தண்ணீர் தெளித்து அரசு ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தரப்பட்டுள்ளது.


கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

நான் ஓய்வு பெற்ற பின்னர் நான் பயன்படுத்திய அறை, மேஜைகள், நாற்காலிகள், அலுவலகர் கார் ஆகியவற்றின் மீது பசுவின் சாணத் தண்ணீர் சில ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாக நம்பகமான தகவல் வந்துள்ளது. நான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதுபோன்ற செயலில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன. இது மனித உரிமைகளையும், குடிமக்கள் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து வழக்கைப் பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி என். தினகர், சம்பந்தப்பட்ட வரித்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் புகார் தொடர்பாக மே 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட நபர் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசில் உயர்பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று அவர் கூறியுள்ளார்."
தினமணி : 08.04.2011

மிகக் கடுமையாக கண்டிக்க வேண்டிய, தண்டிக்க வேண்டிய தீண்டாமைக் கொடுமை இது.

மார்க்சிஸ்டுகளின் ஆட்சியில் இது நடந்துள்ளது. திருமா உள்ளிட்ட எல்லோரும் தேர்தல் வேட்டைக்குச் சென்றுவிட்டதால் பார்ப்பனப் பத்திரிக்கை மூலம்தான் இந்தப் பார்ப்பனியக் கொடுமையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் கலேபரத்தில் இத்தீண்டாமைக் கொடுமை புதைந்தே போனது. 

அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.க்கே இந்த நிலைமை. ஏற்கனவே ஜெகஜீவன்ராமுக்கு இதேதான் நடந்தது. 

இங்கே அறையைக் கழுவி விட்டவர்கள் பார்ப்பனர்களாக இருக்க முடியாது. மிகச் சாதாரண ஊழியர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இதை அவர்களாகவே செய்தார்களா? யார் அவ்வாறு செய்யச் சொன்னது? இதில் பார்ப்பனர்களின் பங்கு என்ன? தலித்துகளை எப்பொழுதும் கேவலமாக நடத்தும் பார்ப்பனரல்லாத பிற சாதியினரின் பங்கு என்ன? 

அறையைக் கழுவுவது வழக்கமான ஒன்றுதான் எனக் காரணம் கூறி சமாதானப் படுத்தினாலும் அதற்கு சாணம் தெளித்து கழுவ வேண்டிய அவசியம் என்ன? தலித் அல்லாத பிற சாதியினர் ஓய்வு பெறும் போதும் இவ்வாறு செய்யப்படுகிறதா?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்வதற்கான அடிப்படை பார்ப்பனியம் என்கிற வர்ணாசிரம கோட்பாட்டில் இருக்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமா இத்தகைய வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடைபிடிக்கிறார்கள்? பார்ப்பனியத்தை தங்களது அன்றாட வாழ்வின் நெறிமுறையாக கடைபிடிக்கும் அனைவருமே இதைச் செய்யக் கூடியவர்கள்தான்.

இன்றும்கூட கிராமங்களில் ஒரு தலித் தன்னை தொட்டுவிட்டதால் தீட்டுப் பட்டுவிட்டது என்பதற்காக தலையில் தண்ணீர் தெளித்தோ அல்லது முழுக்குப்போட்டோ தீட்டுக் கழிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

வர்ணாசிரம கோட்பாட்டை உருவாக்கிய பார்ப்பனர்கள் மட்டுமே இதில் குற்றவாளிகள் என முத்திரை குத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. இது தி.க.வீரமணி அணுகுமுறை. இதில் குற்றத்தைத் தூண்டிய பார்ப்பனர்கள் மற்றும் குற்றத்தைச்செய்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் என பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் அனைவருமே குற்றவாளிகள்தான்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகச்சாமி தமிழில் பாடியதற்காக மேடை தீட்டுபட்டு விட்டதாகக் கூறி மேடையை கழுவி விட்டார்கள் தில்லைவாழ்ப் பார்ப்பனர்கள்.

ம.க.இ.க வினர் நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தின் போது, சூத்திரர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டதால் தீட்டுப்பட்டு விட்டது எனக்கூறி, 108 குடங்களில் தண்ணீா ஊற்றிக் கழுவி, மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தார்கள் திருவரங்கப் பார்ப்பனர்கள். 

பார்ப்பனியக் கோட்பாட்டை உருவாக்கி அதைப் பாதுகாக்கும் வேலையை பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள். இது நம்மை இழிவு படுத்தும் செயல் என பிற சாதிக்காரனும் நினைப்பதில்லை. இது தீண்டாமையின் ஒரு வடிவம் என அவன் கருதுவதுமில்லை. இதுதான் பார்ப்பனியத்தின் -  பார்ப்பனர்களின் பலம்.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்கள் மூலம்தான் கடைபிடிக்கப்படுகிறது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தை கடைபிடித்து அதைப் பாதுகாத்து வருகின்றனர்.

ஒரு குழந்தை பிறந்த உடனே அதன் பிறந்த நாளையும், நேரத்தையும் வைத்து ஜாதகம் எழுதத் தொடங்குவதிலிருந்து, அக்குழந்தை வளர்ந்து வாழ்ந்து மடிந்து சுடுகாடு சென்ற பிறகும் நடக்கும் காரியம் வரை பார்ப்பனியத்தைக் கடைபிடிக்காதவர்களே கிடையாது. பார்ப்பனியம் கோலோச்சுவதற்கு நீர்பாய்ச்சி, உரமிட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்களே.எனவே பார்ப்பனியத்தை அன்றாட வாழ்க்கை நடை முறையிலிருந்து தூக்கி எறியாமல் இது போன்ற அவலங்களை ஒருக்காலும் ஒழிக்க முடியாது.