Showing posts with label தருமபுரி. Show all posts
Showing posts with label தருமபுரி. Show all posts

Thursday, July 4, 2013

மனு இன்னும் மடியவில்லை!

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தற்போது ஓசூரில் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த G.சுரேஷ் (வயது:30) தனது மனைவி s.சுதாவுடன் (வயது:23) ஊருக்கு வருகிறார். திருவிழாவிற்காக ஏற்கனவே இவரிடமிருந்து வசூல் செய்திருந்த ரூ.1500 ஐ விழா நடத்துவோர் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.

திருவிழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாய் வந்திருந்தவருக்கோ இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இவர் மீள்வதற்குள் இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரை விட்டு நீக்கி வைப்பதாகவும், இவர்கள் கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கவும்,
 ஊர்க்காரர்கள் இந்தக் குடும்பத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும்  தடை விதித்து கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பெழுதுகிறது சாதிவெறிக் கும்பல்.

கந்துவட்டிக்காரன், திருட்டுத் தொழில் செய்பவன், சாராயம் காயச்சுபவன், பாலியல் பலாத்காரம் செய்பவன், லஞ்ச ஊழல் பேர்வழிகள் உள்ளிட்ட சமூக விரோதிகள் கொடுக்கும் காசு இவர்களுக்கு கசப்பதில்லை. ஆனால் G.சுரேஷ்  கொடுத்த காசு மட்டும் ஏன் கசக்கிறது?

வன்னியரான G.சுரேஷின் மனைவி தாழ்த்தப்பட்டவராம். அது இப்பொழுதுதான் தெரியவந்ததாம். பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கு இதுதான் காரணமாம். வன்னிய சாதி வெறியர்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள பிற உயர்சாதியினர் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தத் தம்பதியர் வயதுக்கு வந்தவர்கள்தானே? அதாவது சாதிவெறியர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் 'மைனர்கள்' இல்லைதானே? "காதலுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; 'செட்டப்' திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என கூப்பாடு போடும் பா.ம.க வினரோ அல்லது அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் இணைய எழுத்தாளர்களோ இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?

ஆணோ! பெண்ணோ! அது தாழ்த்தப்பட்ட நபராக இருந்தால் அவர்கள் பிற உயர்சாதியினரை காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என்பதுதான் சாதி வெறியர்களின் சமூக நீதி. நாயக்கன் கொட்டாய் சம்பவமும், வேப்பமரத்தூர் சம்பவமும் இதைத்தான் உணர்த்துகிறது.

இதே சுரேஷ் ஒரு செட்டியார் பெண்ணையோ அல்லது ஒரு முதலியார் பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் திருவிழாவிற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அப்பொழுது மட்டும்  சுரேஷின் காசு இனித்திருக்கும். இப்பொழுது மட்டும் கசப்பதற்குக் காரணம் ஒரு தீண்டத்தகாதவளை திருமணம் செய்து கொண்டதால் சுரேசும் அவனது காசும் தீட்டுப் பட்டுவிட்டது. இதுதான் சாதி வெறியர்களின் மன ஓட்டம்.

இது அப்பட்டமான வன் கொடுமை. இது குறித்து சுதா புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன்  மற்றும் கிராம பெருசு (நாட்டாமை) பெரியசாமி உள்ளிட்ட 22 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு  செய்து  அரூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர்  விசாரணை செய்து வருகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கள் நுழையவும் பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் சாதி வெறியர்கள் தடை விதித்து வருவதைத்தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று ஒரு வன்னியனையே கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் வன்னிய சாதி வெறியர்களே தடை விதித்துள்ளார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை சுரேஷ் திருமணம் செய்து கொண்டதால் அவரும் தீண்டத்தகாதவராகி விட்டார். 

தத்ததமது சாதிகளுக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனு சாஸ்திரம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இதையும் மீறி அன்று  கலப்பு திருமணங்கள் நடைபெறவே செய்தன. இதை மனுவால் தடுக்க முடியவில்லை. அதனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகளை தனி ஒரு சாதியாக்கினான் மனு. இத்தகைய புதிய சாதிகளை சாதியப் படிநிலையில் மேலும் கீழான சாதிகளாக்கினான்.

இங்கே G.சுரேஷ் - s.சுதா இருவருக்கும் இன்னும் வாரிசு உருவாகவில்லை.ஆனால் வாரிசு உருவாவதற்கு முன்னரே வன்னியனாகப் பிறந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காகவே அவனைத் தீண்டத்தகாதவனாக்கி மனுவையே விஞ்சி விட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்: THE HINDU, June 24, 2013