Showing posts with label மகாபலி. Show all posts
Showing posts with label மகாபலி. Show all posts

Wednesday, August 29, 2012

மகாபலி இனி வரமாட்டார்!

உயிரற்ற ஓணம் பண்டிகையைக் கண்டு துவண்டு போன மகாபலி சக்ரவர்த்தி!

ஓணம் பண்டிகையின் இன்றைய தன்மை குறித்து திரு C.V.சுகுமாரன் (email: lscvsuku@gmail.com) என்பவர் 26.08.2012 அன்று இந்து நாளேட்டில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.

“அன்புள்ள வாசகர்களே,

முன்பொரு காலத்தில் கேரளாவின் சக்ரவர்த்தியாக விளங்கிய மகாபலி பேசுகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை நான் கேரளாவுக்கு விஜயம் செய்யும் மற்றுமொரு ஓணம் நெருங்கி விட்டது. நான் ஒரு பேராசை பிடித்த மன்னன் அல்ல. நான் ஒரு இளிச்சவாயன் என்பதால் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். மகாவிஷ்ணு குள்ளனாக ‘வாமன’ அவதமாரம் எடுத்து மூன்றடி மண்ணை பிச்சையாகக் கேட்டான். நானும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் மகாவிஷ்ணு விஸ்வரூபமெடுத்து முதல் அடியிலேயே மொத்த பூமியையும் அளந்தான்; இரண்டாம் அடியை சொர்க்கத்தில் அளக்க மூன்றாம் அடியை அளக்க இடம் இல்லாததால் எனது தலையைக்காட்ட அவனும் என் தலைமீது முன்றாவது அடியை வைத்து அழுத்த நான் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். நான் கீழ்லோகத்திற்கு தள்ளப்படும் தருவாயில் ஏதாவது வரம் வேண்டுமானால் கேள் என்றான் விஷ்ணு. ஆண்டுக்கொரு முறை என் அன்பிற்குறிய மக்களை சந்திக்க மட்டும் வரம் கொடு என்றேன். அவனும் கொடுத்தான். அன்றிலிருந்து நான் கேரளாவிற்கு விஜயம் செய்வதை ஒரு தேசியத் திருவிழாவாகவே எனது மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுவே ஓணம் பண்டிகையாகும்.

கடந்த காலங்களில் எனது மக்களை சந்திக்க ஓணத்திற்காக நான் காத்திருப்பேன். அன்று அறுவடையின் வாசனையை உணர முடிந்தது. பூத்துக் குலுங்கும் செடிகளையும் கொடிகளையும் பார்க்க முடிந்தது. எங்கு நோக்கினும் ஒய்யாரமாய் பறக்கும் தும்பிகள். தேனீக்களின் ரீங்கார ஓசை மற்றும் பறவைகளின் இசைக் கோலங்களை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவார்கள். தங்களின் வீட்டு வாசலில் மலர்களால் பூக்களம் அமைத்து என்னை வரவேற்பார்கள். கால்நடைகளுக்குக்கூட அவர்கள் தனியொரு ஓணம் வைத்திருந்தார்கள். சுற்றுச்சூழல்கூட என்னை அன்பாக வரவேற்பதில் தன்னை இணைத்துக் கொண்டது.
செடிகளிலும் கொடிகளிலுமிருந்து சிறுவர்கள் மலர்களைப் கொய்து வருவார்கள். அதைக்கொண்டு எனக்கு விதவிதமன வடிவங்களில் பூக்களம் அமைப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து வகுப்பு மற்றும் சாதி சனங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் விழாதான் ஓணம் பண்டிகை. சந்தைக்கும் விழாவிற்கும் எந்தத் தொடர்பும் அன்று கிடையாது. ஓணசத்யா என்கிற அறுசுவை விருந்துக்குத் தேவையான அனைத்து வகைக் காய்கறிகளும் தங்கள் வீடுகளிலேயே விளைவித்துக்கொண்டனர்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு அனைத்தையும் சந்தையில் வாங்கிக் கொள்ளும் போக்கும் மக்கள் ஒன்றுகூடி ஐக்கியப்படுவதும் மெல்ல மெல்ல காணாமல் போவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. இன்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு பன்னாட்டு வர்த்தகர்களின் விளம்பரங்களைப் பார்த்து ஓணத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சுற்றுச்சூழலை பாழ்படுத்திவிட்டு காசு மேல் காசு சேர்ப்பதில் குறியாய் உள்ளனர். அடிப்படையில் ஓணம் ஒரு அறுவடைத் திருவிழா என்பதை மறந்துவிட்டனர். பாரம்பரிய விவசாயம் அவர்களுக்குத் தேவையானதை அதிகபட்சமாக அளித்திருந்த போதிலும் அது அவர்கள் பணம் குவிக்க உதவவில்லை போலும்.

காணாமல் போன நெல்லும் மலர்களும்!

இயற்கையோடு இயைந்த தன்னிறைவை ஒழித்துவிட்டு அதிக மணம் ஈட்ட அலைகிறார்கள். அவர்கள் கொய்வதற்கு இன்று பூக்கள் இல்லை; அறுவடை செய்ய நெல்வயல்கள் இல்லை; ஆனால் இவைகள் அனைத்தையும் வாங்க அவர்களிடத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பற்றிப் படரும் நுகர்வுக் கலாச்சாரத்தை எங்கும் பார்க்க முடிகிறது; சந்தைகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஒன்றுகூடும் சூழல் நிறைந்த ஓணம் இல்லாதது கண்டு நான் வாடி வதங்குகிறேன்.

பணத்தைக் கொட்டி மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பூக்களங்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. செடிகளிலும் கொடிகளிலிமிருந்து பறிக்கப்பட்ட தும்பா, முக்குட்டி, மந்தாரம், துளசி போன்ற உள்ளுர் மலர்களைக் கொண்டு மிக எளிமையான வடிவத்தில் அமைக்கப்படும் பூக்களங்களை நான் பெரிதும் விரும்புவேன்.

இன்று ஓணத்தையொட்டி ஆண்கள் அனைவரும் சாராய – பிராந்தி கடைகளுக்கு முன்பாகக் கூடுகிறார்கள். போதையேற்றிக் கொண்டு ஓணத்தைக் கொண்டாடி என்னைக் கேவலப்படுத்துகிறார்கள். முன்பு மக்கள் ஒன்றுகூடி விளையாடுவார்கள். ஆனால் இன்று பிளாஸ்டிக் பாட்டில்களும் சாராய பாட்டில்களும் சிதறிக் கிடக்கின்றன. மக்கள் பொதுவாக ஒன்று கூடுவதற்குப் பதிலாக போதை ஏற்றிக் கொள்வதற்காக நான்கைந்து பேர் அவர்களுக்குரிய இடத்தை தேர்வு செய்து அங்கே ஒன்றுகூடுகிறார்கள்.

சாராயத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றாலும் நான் ஒருபோதும் எனது மனக்களிடம் போதைப்பழக்கத்தை வளர்க்கவில்லை. சாராயத்தை வருவாய்கான ஒரு ஆதாயமாக இன்றைய அரசாங்கங்கள் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. மக்களின் நலனைக் குட்டிச்சுவராக்கிவிட்டுதான் அவர்கள் அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டுமா? வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உங்களது அபிவிருத்தித் திட்டங்களால்  எமது மக்கள் நற்பண்புகளை இழந்ததோடு மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் நிம்மதியையும் இழந்தார்கள். இன்று எமது மக்கள் வசதிபடைத்தவர்களாக மாறியபோதும் அவர்கள் கூடிவாழும் கோடி நன்மையை இழந்தார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்களை வறியவர்களாக்கிக் கொண்டார்கள்.

பெண்களுக்கு இடமில்லை

பெண்களும் மற்றும் இளம் வயதுப் பெண்களும் பொது இடங்களில் இருக்கும் போது பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் அச்சப்படுவதை நான் பார்க்க முடிகிறது. எல்லாவிடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனது மக்கள் தங்களது உரிமைகள் குறித்து மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள். ஆனால் கடமைகள் என்று வரும்போது பாராமுகமாய் இருப்பது வேதனையளிக்கிறது. பெண்களைப் பொருத்வரை அவர்களுக்கு எந்த உரிமையும் உரிய இடமும் கிடையாது. ஆண்கள்  அவர்களை பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளால் நாகூசும்படி பேசுகிறார்கள். கேவலமாக நடத்துகிறார்கள்.

பொது சுகாதாரம் எங்கே?

முடைநாற்றமடிக்கும் குப்பைகளும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் எங்கும் சிதறிக்கிடப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் ஆண்கள் மூத்திரமடிக்கிறார்கள். சுத்தமான கிராமச் சாலைகளின் ஓரங்களில் கோழிக் கழிவுகளும் பிளாஸ்டிக் பைகளும் கொட்டப்படுகின்றன. “நிர்மல் கிராமப் பஞ்சாயத்து உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்கிற விளம்பரப் பலகையின் அடியிலேயே இதுதான் நிலமை.  எல்லா நிர்மல் பஞ்சாயத்துகளிலும் என் மூக்கைத் தொடுவது முடைநாற்றம்தான். மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் திணித்து அதை அப்படியே சாலைகளில் வீசிவிடுகிறார்கள். ஒரு காலத்தில் சுகாதாரமாகத் திகழ்ந்த எனது கிராமங்கள் இன்று எப்படி இருக்கின்றன என்று பார்த்தீர்களா?

சாராய நெடி, குன்றுகளாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளிலிருந்தும் வெளியேறும் முடைநாற்றத்தை சுவாசிக்கவும் மற்றும் நுகர்வுமயமாகிப்போன ஓணத்தையும் காண நான் வரவேண்டுமா சொல்? எல்லாவற்றையும் கடைகளிலேயே வாங்கி நுகர்வுக்கலாச்சாரத்திற்கு ஆட்பட்ட மக்கள் கொண்டாடும் ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. மக்களை ஐய்கியப்படுத்தும் தம்மையை இழந்த, உயிரற்ற ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. வர்த்தக சூதாடிகளால் கட்டுப்படுத்தப்படும் ஓணத்தில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.


இப்படிக்கு

உங்களின்
மகாபலி
கேரளாவின் முன்னாள் சக்ரவர்த்தி  
கீழுலுகம்.”

*****

இதன் மீதான எனது பார்வை.....

ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்ட மகாபலி சக்ரவர்த்தி!

”மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். இந்து புராணங்களின்படி இவர் பக்த பிரகாலதனின் பேரன் ஆவார். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு முதல் இரண்டடியால் பூமியையும், வானத்தையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அமிழ்த்தி அவரை வதம் செய்தார். மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.தமிழ்விக்கிப்பீடியா

இது மகாபலி சக்ரவர்த்தியைப் பற்றிய புராணக்கதை.

இப்படிப்பட்ட புராணக்கதைகள் தென் இந்தியாவில் பல உள்ளன. குடித்தலைவன் முதல் மகா சகக்ரவர்த்திவரை யாரெல்லாம் ஆரியர்களின் வருகையை / ஆதிக்கத்தை எதிர்த்தார்களோ அவர்களெல்லாம் ஏதாவதொரு வகையில் சதிக்குள்ளாக்கப்பட்டு ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரியர்களை எதிர்த்த இம்மண்ணை ஆண்ட மூதாதையர்களெல்லாம் அரக்கர்கள் என சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களது தலைவர்கள் ஆரியர்களால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால் அது ஆரியர்களி்ன் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதால்தான்  இத்தகைய படுகொலைகளை மூடிமறைத்து கடவுளே அவதாரம் எடுத்து அரக்கர்களை அழித்ததாக புனை கதைகளை உருவாக்கி அதை மக்கள் ஏற்குமளவுக்கு நம்ப வைத்துள்ளார்கள். இத்தகைய கதைகளில் ஒன்றுதான் தீபாவளி நரகாசுரன் புராணக்கதையும்.

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் அந்தணர்களை துன்புறுத்திய கஞ்சனன் என்கிற அரக்கனை ஈஸ்வரன் விஸ்வரூபம் எடுத்து அவனது தலையை கொய்து போட்டானாம். தலை விழுந்த இடம் சீக்கராஜபுரமாம். (சீக்கராஜபுரம்) வலது காலை திருகிப் போட்டானாம். அது விழுந்த இடம் வடகாலாம் (வடகால்). அதேபோல இடது கால் விழுந்த இடம் தெங்காலாம் (தெங்கால்). இது லாலாப்பேட்டையின் தலபுராணம். கஞ்சனனுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அவ்வூர் மக்கள் விழா எடுக்கிறார்கள்.

இப்படி ஊருக்கு ஊர் ஒரு தலபுராணம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தகைய படுகொலைகளைக் கண்டு ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக மக்கள் விழா எடுப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.

ஊரான்