Showing posts with label ராஜீவ்காந்தி. Show all posts
Showing posts with label ராஜீவ்காந்தி. Show all posts

Saturday, April 4, 2015

ஆதார் அட்டையும் மாட்டுக் கோமியமும்!

“மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!”

இப்படி எழுதி (http://hooraan.blogspot.in/2015/03/3.html) பத்து நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள்……

மாடுகளின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களையும், அவை தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான உத்தரவாதக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகர காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால் புகைப்படம் எடுக்கும் போது மாட்டின் உரிமையாளரும் உடன் இருக்க வேண்டுமாம்.

பசுவதைத் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இது அவசியமாம். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதாம்; வதந்திகளைத் தடுக்க முடியாதாம்.

இனி மாடுகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்ற அறிவிப்பை விரைவில் எதிர்பார்ப்போம்!

ஆதார் அட்டை பெறுவதற்காக தாசில்தார் அலுவலகங்களில் மாடுகளுக்கான தனி கவுன்ட்டர் திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் ஆசாத் நகரில் மாட்டிறைச்சி விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 மாட்டுத் தலைகளும் 150 கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் ரூ.10000 அபராதமும் நிச்சயம்.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் பன்சாரே 82 வயதான ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர். 2015 பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தச் செய்தியும் இல்லை. ஆனால் மாட்டிறைச்சிக்கோ உடனடி நடவடிக்கை.

மேற்கு வங்கத்தில் 72 வயது கன்யாஸ்திரி பாலியல் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் மாநில அரசின் சி.பி.ஐ விசாரணை கோரிக்கையை நிராகரிக்கும் மத்திய அரசு இனி மாட்டிறைச்சி வழக்குகளில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மத்திய அரசு அலுவலகங்களில் மனித மூத்திரத்தைக் கழுவ மாட்டு மூத்திரம் கிடைக்காமல் போய்விடுமோ எனக் கவலைப்படுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இந்துஸ்தான் பேப்பர் கார்பரேசன், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், எச்.எம்.டி வாட்ச்ஸ், திரிவேணி ஸ்ட்ரக்சர்ஸ், துங்கபத்ரா ஸ்டீல் கார்பரேசன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்துவிட்டதாம். ஊழியர்களுக்கான ஊதியம் மட்டும் ஆண்டுதோறும் 10000 கோடி ரூபாய் செலவாகிறதாம். எனவே ஊதியத்தை மிச்சப்படுத்த இந்த ஆலைகளை மூடப்போவதாக மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் சித்தேஷ்வர் அறிவித்துள்ளார்.

மாட்டுக்கு பல்லக்காம். மாநிடனுக்கு பாடையாம். இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு சுங்கம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக சுற்றறிக்கை அனுப்பி அஜால் குஜால் செய்துள்ளது மோடி அரசு.

“ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், அந்தப் பெண் வெள்ளை தோலுடையவராக இருந்திருக்காவிட்டால், காந்கிரஸ் கட்சி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்குமா?”

இவ்வாறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ்சிங் பேட்டி கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது, அதன் பிறகு மன்னிப்பு கேட்டதை வெறுமனே வாய்க்கொழுப்பு என ஒதுக்கிவிட முடியாது. ஆரிய நிறவெறியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.

தொடர்புடைய பதிவுகள்: