Showing posts with label வைசியர். Show all posts
Showing posts with label வைசியர். Show all posts

Thursday, May 5, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1