Showing posts with label Inter caste marriage. Show all posts
Showing posts with label Inter caste marriage. Show all posts

Tuesday, May 10, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4

VII

அடிமைத்தனம்

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத்துள்ளார். மூன்று உயர் சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால் உயர் சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அதிகரித்தபோது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். 

அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் சத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதி சூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான்.

மாறாக ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்தவரையும் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியும்.

ஒரு சத்திரியர், வேறொரு சத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு அடிமையாகக் கொள்ள முடியாது.

ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், சத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ளலாம்.

ஒரு சூத்திரன், வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமைகளாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணரையோ, சத்திரியரையோ, வைசியரையோ,  சூத்திரரையோ-ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

VIII

கலப்பு மணங்கள்

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கு இடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன.

மனு:3-12: இருபிறப்பாளர்களுக்கு (பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தார்) திருமணம் செய்யும்போது தன் வருணத்திலேயே திருமணம் செய்வது உயர்ந்தது. இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் மேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ள வேண்டியது.

மனு:3-13: சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்குத் தன் சாதியிலும்-சூத்திர சாதியிலும், சத்திரியனுக்குத் தன் சாதியிலும்-வைசிய சூத்திர சாதியிலும், பிராமணனுக்குத் தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர்‌. ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரித்தாலும், பிராமணன் எந்த ஒரு பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன்வருணம், தன் கீழ் வருணமான வைசிய-சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக்கூடாது.

வைசியன் தன் வகுப்பிலும், சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம். ஆனால் சத்ரிய-பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது.

-பக்கம் 38, 39, 40: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-6

ஊரான்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1