Showing posts with label smh. Show all posts
Showing posts with label smh. Show all posts

Saturday, May 11, 2024

நான் கடவுளைக் கண்டேன் ...2

பைரவா! இது உனக்கே நல்லா இருக்கா?

கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும், மெத்தை வீடுகளிலும் அன்றும் மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களாலும், வேளாண்மை மற்றும் பிற தொழில்களில் கூடுதல் வருவாய் காரணமாகவும் இன்று கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மெல்ல மெல்ல மறைந்து கான்கிரீட் வீடுகள் முளைத்து வருகின்றன. 


வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அன்றெல்லாம் ஓரிடத்தில் படுத்துறங்குவது இயல்பாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ ஒவ்வொவரும் தனியாக இருக்கவே விரும்புகின்றனர். நடுத்தரவர்க்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டுக் கூறாக இது மாறி உள்ளது.

எங்களது வீட்டிலும், மாடியில் ஒரு அறை தேவைப்பட்டதால் அதற்கான வேலைகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருந்தன. டிசம்பருக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்பதால் 26 ஆம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் கடைக்குச் சென்று கட்டட வேலைக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு வழக்கமாக நான் பயணிக்கும் ஸ்கூட்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். 

சாலையின் வலது பக்கம்
விளையாட்டு மைதானம். சில இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் வசிக்கும் வீட்டு வசதி வாரிய வளாகக் குடியிருப்பில் தெரு நாய்களுக்குப் பஞ்சமில்லை. தெரு நாய்கள்தான் அந்தந்தத் தெருவுக்கான பாதுகாவலர்களும் கூட. வீட்டை நெருங்கும் தருவாயில் விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு நாய் திடீரென குறுக்கே வர, அதன் மீது ஸ்கூட்டி மோதி நான் கீழே விழுகிறேன். 

நான் விழுந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் ஓடி வந்தனர். நான் எழ முயற்சிக்கிறேன், முடியவில்லை. அதன் பிறகு என்னைக் கைத் தாங்கலாகப் பிடித்து பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார வைத்தனர். வலது கையை தூக்க முடியவில்லை, திருப்ப முடியவில்லை. கை, கால்கள் உள்ளிட்ட சில இடங்களில் சிராய்ப்புக் காயங்கள்.

உடனே குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு அம்மா எலுமிச்சை ஜூஸ் போட்டு கொண்டு வந்து தருகிறார். ஒரு இளைஞர் பக்கத்தில் உள்ள கடையில் இருந்து மாசா மாம்பழச்
சாரு வாங்கித் தருகிறார். ஒரு முதியவர் மூக்குத்திப்பூண்டு (இதை தலைவெட்டிப் பூண்டு என்றும் சொல்வதுண்டு) இலையைக் கசக்கி அதன் சாற்றை சிராய்ப்புக் காங்களின் மேல் விடுகிறார். பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான் என்றாலும் இவர்களின் இந்த உதவி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. அடிபட்ட வலி கூட மறந்து போனது.

அதே தெருவில் மிக அருகில்தான் எனது வீடு. இதைக் கேள்விப்பட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியும் எனது மகனும் ஓடி வந்தனர். ஒரு ஆட்டோவைப் பிடித்து உடனடியாக பெல் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் என்னை பரிசோதித்து பார்த்த பிறகு, செவிலியர்கள் காயத்திற்கு மருந்து போட்டனர். 

Radial head replacement surgery

எக்ஸ்ரே  எடுத்துப் பார்த்ததில் வலது கை முட்டியில் எலும்பு உடைபட்டிருப்பதாகச் சொல்லி இராணிப்பேட்டையில் உள்ள எஸ்எம்எச் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கே வலது கை முட்டியை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரேடியல் ஹெட்டில் (fracture on radial head) இரண்டு இடத்தில் உடைந்திருந்தது; எனவே, அதை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்க, மூட்டு எலும்பின் (radial head) தலையை வெட்டி எடுத்து விட்டு செயற்கைத் தலையைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். 

இது நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன. எனது கையைப் பார்த்தால் அடிபட்ட கை போல தெரியாது. இயல்பாகத்தான் தெரியும். ஆனால் பழைய மாதிரி அதனுடைய வலு இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.

மேலும் இரு சம்பவங்கள்... அடுத்து....

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்