Showing posts with label vinesh phogat. Show all posts
Showing posts with label vinesh phogat. Show all posts

Monday, August 19, 2024

வினேஷ் போகத்: 'மல்'யுத்தம் தொடர்கிறது!

கொடுங்கோன்மை மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி, சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்திற்கு வித்திட்ட பிரஞ்சுப் புரட்சி, அதன் நினைவாக எழுப்பப்பட்ட ஈஃபிள் கோபுரம், இரண்டு மாத காலமே நீடித்தாலும்  பொதுவுடைமை பூங்காவின் நுழைவு வாயில் என கருதப்படும்  பாட்டாளி வர்க்கத்தின் பாரிஸ் கம்யூன் என பிரான்சுக்குப் பெருமைகள் பல உண்டு.

உடலையே வில்லாக வலைத்து, உலகையே தன் பக்கம் ஈர்த்த ரொமானியாவின் நாடியா எலனா கொமனச்சிகள் இல்லை; மின்னலைக் கிழிக்கும் ஜமைக்காவின் உசேன் போல்ட்டுகள் இல்லை; தண்ணீரில் தாண்டவமாடி தன்னை விஞ்ச இனி ஒருவன் பிறப்பானா என சவால் விடும் அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்புசுகள் இல்லை.
 
ஆனால், வெற்றிக் களிப்பில் கசிந்த ஆனந்த கண்ணீருக்கும், தோல்வியாலும் துரோகத்தாலும் வழிந்த கண்ணீருக்கும் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பஞ்சமில்லை.
 
கிராம் கணக்கில் எடை போட இது என்ன கோல்டு வியாபாரமா? தங்க மாலையை சூட வேண்டியவள் முதுகில் துருப்பிடித்த நூறு கிராம் ஆணியைச் சொருகினார்கள்.
 
ஆனந்தக் கண்ணீரில் தளும்பு வேண்டிய நம் கண்கள், வெம்பிய நீரையே வெளியேற்றியதால் பருவ மழை காலத்திலும் தேசம் வெம்பியது. ஆடுகளத்தில் அவளை வீழ்த்த முடியாது என உணர்ந்ததாலோ என்னவோ களத்திலிருந்தே அவளை அப்புறப்படுத்த  முனைந்தார்கள். 


இது சதியா, இல்லை தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த பிழையா என்கிற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் பிரிட்ஜ் பூஷனங்கள், பி.டி.உஷாக்களின் முகங்கள் வெளிறிப் போயின. சங்கிகள் சருகாய் மாறின.
 
ஆதாயம் அடைந்தால்  போதும் என தலை கவிழும் எடப்பாடிகளின் வாரிசு அல்ல  அவள். அநீதிக்கு எதிராய்  நெஞ்சை நிமிர்த்தி ஆர்த்தெழும் ஜான்சி ராணியின் அவதாரம் அவள்.
அதனால்தானோ என்னவோ வெறுங்கையோடு ஊர் திரும்பிய அவளை நாடே கொண்டாடி மகிழ்ந்தது.
 
ஆகஸ்ட் 17 சனிக்கிழமை, காலை பத்து மணி, வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட வஞ்சியை வரவேற்க டெல்லி விமான நிலையமே நிரம்பி வழிந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி கிராமத்தை நோக்கி அவள் திறந்த வெளி ஜீப்பில் அழைத்து செல்லப்படுகிறாள். வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் வரிசைகட்டி வரவேற்கிறார்கள்.
மூன்று மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க அவளுக்கு 12 மணி நேரம் ஆகிறது.
 
கோவிலில் தயாரான 750 கிலோ லட்டுக்களை இதுவரை பாதுகாத்து வந்த பத்து வயதே ஆன அன்சஜ் குமார் 'ஒத்த கோடு' நோட்டோடு மேடையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறான்.  விழா மேடையில் வினிஷா போகத்தை வாழ்த்த பலரும் வருகிறார்கள்.
 
கிராமக் காவலாளி சஞ்சய் பத்தாவது ஆளாக ரூபாய் நூறு, ரக்பீர் மாஸ்டர் 500, ஷாலு பாதல் 5100, குன்வார்பீர் சிங் தலைக்கவசமும்  வாளும் வழங்க, நட்டு குழுமம் 21,000 என  நீள்கிறது அன்பளிப்புகள். லட்டுகள் குறையக் குறைய சிறுவனின் நோட்டுப் புத்தகம் பண மழையால் கணக்கிறது. அவன் டேபிள் ட்ராயரில் போடும் பணம் தங்கத்தைப் போல மின்னவில்லை என்றாலும் "அவள் தனி ஆள் இல்லை" என்பதை அது உணர்த்தியது.

 
"அவளுக்கு ஐந்து வயது இருந்தபோது இரவு நேர காவல் வேலை பார்க்கும் என்னைப் பார்த்து 'அங்கிள் நீங்கள் ரொம்ப தைரியசாலி!' என்பாள். ஆனால், இன்று பார்த்தீர்களா யார் தைரியசாலி என்பதை? உலகின் தைரியமான உறுதியான மகள் அவள்தான்எனக் கண்களில் நீர்வழிய தனது உணர்ச்சிகளைக் கொட்டுகிறார் கிராமக் காவலாளி.
 
அவளது அப்பா இறந்த பிறகு குடும்ப பாரத்தைச் சுமக்கத் தனது தாய்க்கு உதவியாக வயல்களில் உழைத்த அவள், உரிமைக்காக போராடுங்கள் என்று பிறருக்கு எடுத்துச் சொல்லுவாள். பிரிட்ஜ் பூசனுக்கு எதிராக அவள் போராடிய போது அந்த உறுதியை அவளிடம் நான் கண்டுள்ளேன் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
 
பயிற்சி முடித்து வந்த சில மல்யுத்த மங்கைகளுக்கு, சாமியான பந்தலுக்கு வெளியே பாலும் லட்டும் தருகிறார்கள். வினேஷைப் போல நீங்களும் வர வேண்டும் என்று அவர்களை வாழ்த்துகிறார்கள்.
 
தங்கம் அவளுடையது, இங்கே உள்ள ஒவ்வொருவரின் கனவும் ஒலிம்பிக்காக இருக்க வேண்டும் என்கிறாள் நேகா சங்க்வான் என்கிற விளையாட்டு வீராங்கனை.
 
தனக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆனதால் தன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், தனது கணவனை அனுப்பி வைத்திருந்தார் அந்த கிராமத்துத் தலைவி. வினேஷ் தொட்ட ஆடையை தனது குழந்தைக்கு அணிவித்தால் அவளைப் போன்றே தனது குழந்தையும் தைரியசாலியாக வரும் என்று அவள் தன் கணவனிடம் தனது குழந்தையின் ஆடை ஒன்றை கொடுத்துனுப்புகிறாள்.
 
சில கிராம்களில் பதக்கம் கை நழுவிப் போயிருக்கலாம். ஆனால் வினேஷின் எடைக்கு எடை வழங்கப்பட்ட நாணயங்கள் அதைவிட பல மடங்கு கணமானது. இவை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.
 
நம்மை ஈர்த்த போகத்என்ற தலைப்பில் இளம் டிஜேக்களின் கரோ சுவாகத்…” என்ற இசை நிகழ்ச்சியில் இளைஞர்களின் ஆட்டமும் பெரியவர்களின் வாழ்த்தும் என இரவிலும் பலாலி விழித்துக் கொண்டிருந்தது!

ஊரான்