மக்களாட்சி தத்துவத்தில் குடிநீர், சாலை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை ஒரு குடிமகனுக்கு உறுதி செய்வது அரசின் கடமை. ஆனால், இன்றைய அரசியலில் இவை 'கடமைகள்' என்பதைத் தாண்டி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் லாபகரமான 'மூலதனமாக' மாற்றப்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய அவலம்.
தேவையே சந்தையாகிறது
மக்களுக்கு எது மிகவும் அவசியமோ, அங்கிருந்துதான் ஊழல் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது 'புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்' என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
மக்கள் தாகத்தைத் தீர்ப்பதைவிட, அந்தத் திட்டத்தின் ஒப்பந்தங்களில் தங்களுக்குக் கிடைக்கப்போகும் ‘பங்கு’ என்ன என்பதில்தான் அதிகார வர்க்கத்தின் கவனம் உள்ளது.
நிரந்தரத் தீர்வை விரும்பாத நிர்வாகம்
ஒரு சாலையைத் தரமாகப் போட்டால் அது பத்து ஆண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், அது அதிகாரிகளுக்கு நட்டம். ஒவ்வொரு பருவமழைக்கும் சாலைகள் சிதைய வேண்டும்; அப்போதுதான் 'சீரமைப்புப் பணி' என்ற பெயரில் மீண்டும் நிதி ஒதுக்க முடியும். மக்களின் அன்றாடத் துயரம் (சாலைப் போக்குவரத்துப் பாதிப்பு) அதிகாரிகளின் வருடாந்திர வருமானமாக மாறுகிறது. மக்களின் ‘அவசியம்’ தீர்க்கப்படாமல் இருக்க வேண்டிய ஒன்றாகவே இங்கே பராமரிக்கப்படுகிறது.
சாக்கடையிலும் சந்தனம் தேடும் அரசியல்வாதிகள்
இராணிப்பேட்டையில் உள்ள பிஞ்சி ஏரியை சீரமைத்து அதை ஊட்டி அல்லது கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு இணையான இடமாக மாற்றப் போவதாக புல்டோசர்களை இறக்கி புரட்டிப் போட்டார்கள். குறைந்தபட்சம் காட்பாடி கழிஞ்சூர் ஏரி அளவுக்காவது செய்திருக்க முடியும். ஆனால் பிஞ்சியில் இன்று புழுக்கள்தான் நெளிகின்றன. இந்தப் புனரமைப்பில் அவர்கள் சுருட்டியது எவ்வளவு என்பது யாருக்காவது தெரியுமா?
இடம்மாறும் மேம்பாலங்கள்
விஷாரத்தில் இருந்து வரும் வாகனங்கள், வேலூர் புறவழிச் சாலையை இணைக்கும் இடத்தில் மேம்பாலம் இல்லாததால் அன்றாடம் விபத்துகள், உயிர்ப்பலிகள். மக்களைக் காக்கவேண்டிய இந்த மேம்பாலம், ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பிரபல அரசியல்வாதியின் வி.பி.பேலஸ் எனும் ஒரு கல்யாண மண்டபத்தைக் காப்பதற்காக இடம் மாறிப் போனது. இங்கே மக்களின் அவசியத்தைத் தங்களின் அவசியமாக மாற்றிக் கொண்டார்கள்.
கல்வி மற்றும் மருத்துவத்தின் வணிக மயம்
அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் வலுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சி. ஆனால், அவற்றை நலிவடையச் செய்து, தனியார் மயம் நோக்கி மக்களைத் தள்ளுவதன் மூலம் கிடைக்கும் 'கமிஷன்கள்' மிகப்பெரியது. உயிருக்குப் போராடும் ஒரு நோயாளிக்கு மருத்துவமனை ஒரு 'அவசியம்'. அந்த அவசியத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் காப்பீட்டுத் திட்டங்களிலும், கட்டுமானங்களிலும் லாபம் பார்ப்பதே இன்றைய அதிகார நடைமுறையாக உள்ளது.
வாக்கு வங்கி அரசியலும் 'அவசியமும்'
தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகளாகத் தரப்படும் குடிநீர் இணைப்பும், மின்சார வசதியும் மக்களின் உரிமைகள் அல்ல; அவை 'விலைப்பேசப்படும் பொருட்கள்'. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் ஐந்து ஆண்டுகள் மக்களைத் தவிக்க விடுவதும், தேர்தல் வரும்போது அதே தேவைகளைச் சற்று அசைப்போட்டு வாக்குகளைப் பெறுவதும் ஒரு திட்டமிட்ட அரசியல் முதலீடு.
முடிவுரை
"மக்களின் இயலாமையும், அறியாமையும் நீங்க வேண்டும்" என்ற உன்னத நோக்கம் கொண்டவர்களுக்கு, இந்தச் சூழல் மிகுந்த மனவேதனையைத் தரும். குடிமக்களின் அத்தியாவசியத் தேவைகள் அதிகாரத்தின் மூலதனமாக இருக்கும் வரை, சமூகம் உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது.
மக்களுக்குத் தேவை தர்மங்கள் அல்ல; தார்மீகமான உரிமைகள். இந்த உரிமைகளுக்காகப் போராடும் போர்க்குணமிக்க குரல்களே இந்தச் சங்கிலியை உடைக்கும் ஆயுதம்!
ஊரான்

No comments:
Post a Comment