இருப்பதை வதைக்கும் கோடை… இல்லாததை உயிர்ப்பிக்கும் மழை.
சித்திரையில் ஏர் உழுத நாட்கள் நினைவாகிப் போயின. மாடுகள் காணாமல் போனது மட்டும் அல்ல… மண் வாசனையே இப்போது நினைவாகி விட்டது.
கொல்லையில் சனி மூலையில் கற்பூரம் ஏற்றி, கதிரவனை வணங்கி ஏர் உழுத காட்சிகளும், வெல்லம் கலந்த ஊறவைத்த அரிசியை அசைபோட்ட அந்தப் பண்பாட்டு விழுமியங்களும் இன்று வெறும் நினைவுகளாகவே மாறிப்போயின.
கோடை மழை எட்டிப் பார்க்காததால் புரட்டிப் போட்ட மண்புழுதியின் வாசம்கூட நமக்கு மறந்துபோனது.
கடந்த ஆண்டு மழை பொய்த்தது. இந்த ஆண்டோ ஒரு துளி கூட விழவில்லை.
குளங்கள் வற்றின. ஏரிகளில் படிந்த பாசிகள் வெடித்துக் கிடக்கின்றன; கிணறுகள் தரைதட்டின.
வெக்கையைத் தணிக்க உதவிக்கரம் நீட்டும் புங்கையும் வேம்பும் மட்டுமே இன்னும் பசுமை படர்ந்து குளிர்ச்சி தருகின்றன.
ஆனால்… பயிர் பச்சைகளின் நிலை?
பொதுவாக நான் கிராமத்திற்குச் சென்று வந்தால் ஒருவித குதூகலம் என்னிடம் வெளிப்படும். ஆனால், இம்முறை சென்றபோது கண்ட காட்சிகள் நெஞ்சைப் பிழிந்தன:
இரண்டு மாதங்களுக்கு முன் உயிரோடு இருந்த பப்பாளிச் செடிகள் இன்று கருகி மண்ணோடு கலந்துவிட்டன. காய்த்துக் குலுங்கிய பப்பாளிகள் கூட வெம்பிப் போய் உயிரற்ற உடல்களாக மாறிவிட்டன.
கொளுத்தும் வெயிலில் 'நீரிழப்பால்' (Dehydration) துவண்டு விழும் மனிதர்களைப் போல, வாழைகள் துவண்டு உடைந்தன.
வாழ்ந்து முடித்த முதியவர்களின் இழப்பைக்கூட எளிதாகக் கடந்துவிடலாம். ஆனால், குடும்பத்தைக் காக்க வேண்டிய
வளரும் பருவக் காளை ஒன்று சாய்ந்த துக்கம் போல, குருத்து வதங்கி விழும் தென்னைகளைப் பார்க்கும்போது, அது ஒரு மரணம் போலத் தோன்றுகிறது.
ஆசையாய் வளர்த்த திராட்சைக் கொடியையும் இப்போது காணவில்லை.
இத்தனை அவலங்களுக்கு இடையிலும், ஆழ வேர் பிடித்து, மண்ணின் ஈரத்தை உறிஞ்சி உயிர்ப்புடன் இருந்த ஒரு மாஞ்செடியில்... தொங்கிய மாங்காய்களைக் கண்டபோது நெஞ்சில் லேசாய் ஈரம் பாய்ந்தது.
விபத்தில் சிக்கிய இளைஞனைக் காப்பது போல், குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த செடிகளைக் காக்க,
காசு கொடுத்து டேங்கர் லாரியில் நீர் வாங்கி உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இது எத்தனை நாளைக்கு?
“வானம் கருக்காதா?” என்ற ஏக்கத்தில்
செடிகளும்…நெஞ்சும்…
ஒன்றாகத் துடிக்கின்றன.
ஊரான்




No comments:
Post a Comment