Friday, 17 April 2026

இந்திய ஜனநாயகம்: வாக்குச் சடங்கா? மக்கள் அதிகாரமா?

முன்னுரை

“மக்களால், மக்களுக்காக, மக்களுக்கே நடத்தப்படும் ஆட்சி” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை வரையறை. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை பேசப்படும் இந்தியாவில், அந்த ஜனநாயகம் உண்மையில் மக்களின் முழுமையான பிரதிபலிப்பா என்ற கேள்வி எழுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு சென்று விரலில் மை வைப்பதோடு ஒரு குடிமகனின் ஜனநாயகப் பங்கு முடிந்துவிடுகிறதா? அல்லது அதன் பின்னரும் மக்களுக்குத் தொடர்ச்சியான அதிகாரம் இருக்க வேண்டுமா?

இந்தக் கேள்விக்கு விடை தேடும்போது, இந்திய தேர்தல் முறையிலும் ஜனநாயகக் கட்டமைப்பிலும் உள்ள சில அடிப்படை குறைபாடுகள் தெளிவாகத் தெரிய வருகின்றன.


1. பெரும்பான்மை எனும் மாயை

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறை First-Past-The-Post voting எனப்படுகிறது. இந்த முறையில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஆனால் அது உண்மையான பெரும்பான்மையை பிரதிபலிப்பதில்லை.

ஒரு தொகுதியில் பலர் போட்டியிடும் சூழலில் ஒருவர் வெறும் 20% வாக்குகளைப் பெற்றால்கூட வெற்றி பெற முடியும். இதன் பொருள், அந்தத் தொகுதியில் உள்ள 80% மக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்றாலும் அவர் அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்துக்குச் செல்கிறார் என்பதாகும். இது “பெரும்பான்மை ஆட்சி” என்ற ஜனநாயகக் கருத்தையே கேலி செய்யும் நிலையை உருவாக்குகிறது.

இதற்கு மாற்றாக பல நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional representation) முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் மக்கள் தனிநபர்களுக்குப் பதிலாக அரசியல் கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். ஒரு கட்சி பெறும் மொத்த வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப அதன் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த முறை இன்று ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுகிறது. இதனால் ஒவ்வொரு வாக்காளரின் விருப்பத்திற்கும் மதிப்பு கிடைக்கிறது. 20% வாக்கு பெற்று 100% அதிகாரம் செலுத்தும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

2. திரும்ப அழைக்கும் உரிமை

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களின் ஆதரவை நாடி, வெற்றி பெற்ற பிறகு ஐந்தாண்டுகள் மக்களைக் கண்டுகொள்ளாத பிரதிநிதிகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இதற்குக் காரணம், ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டால் அடுத்த தேர்தல் வரை அவர்களை பதவியில் இருந்து நீக்க மக்களுக்கு வழியில்லாததே.

இதற்கு தீர்வாக உலகின் சில நாடுகளில் திரும்பப் பெரும் உரிமை (Right of recall) எனப்படும் முறை உள்ளது. ஒரு பிரதிநிதி ஊழல் செய்தாலோ அல்லது தனது கடமைகளைச் செய்யத் தவறினாலோ, ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் கையெழுத்திட்டு அவரை பதவியிலிருந்து நீக்க முடியும்.

இந்த முறை சுவிச்சர்லாந்து மற்றும் அமெரிக்கா வின் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த உரிமை மக்களிடம் இருந்தால், எந்த ஒரு பிரதிநிதியும் தேர்தலில் வென்றவுடன் மக்களை மறந்துவிடத் துணிய மாட்டார். மக்களுக்குப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகும்.

3. அதிகாரம் யாரிடம்?

இந்திய ஜனநாயகத்தின் இன்னொரு முக்கியமான குறைபாடு, சட்டம் இயற்றும் அதிகாரமும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் வெவ்வேறு அமைப்புகளிடம் இருப்பதுதான். இதைத்தான் இரட்டை ஆட்சி முறை என்பார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது நிரந்தர நிர்வாக அமைப்பான அதிகார வர்க்கம் (Bureaucracy).

இதனால் ஒரு திட்டம் செயல்படாதபோது பொறுப்பை நிர்ணயிப்பது கடினமாகிறது. அதிகாரிகள் அரசியல் தலையீட்டை காரணமாகக் கூறுவார்கள்; அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டுவார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
சில இடங்களில், குறிப்பாக அமெரிக்காவின் சில மாநிலங்களில், மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற நிர்வாகப் பதவிகளையும் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் அவர்கள் நேரடியாக மக்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

இத்தகைய முறை அல்லது நிர்வாக அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அமைப்பு இந்தியாவில் உருவானால், அரசியலுக்குள் வரும் நபர்கள் ஆழமான அறிவும் நிர்வாகத் திறனும் கொண்டவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து இன்று மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே பல மக்கள் இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மக்கள் இயக்கங்களின் நீண்டகால விமர்சனம்

இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் இந்தக் குறைபாடுகள் புதிதாக முன்வைக்கப்படும் கருத்துகள் அல்ல. “தேர்ந்தெடுக்கவும் – திரும்ப அழைக்கவும்” என்ற கோட்பாட்டையும், சட்டம் இயற்றும் அதிகாரமும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் மக்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கடந்த பல ஆண்டுகளாக புரட்சிகர மற்றும் இடதுசாரி இயக்கங்கள் முன்வைத்து வருகின்றன.

குறிப்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் தேர்தல் ஜனநாயகத்தின் வரம்புகளை சுட்டிக்காட்டி, தேர்தல் புறக்கணிப்பு இயக்கங்களின் போது இந்தக் கருத்துகளை மக்களிடையே பரவலாக எடுத்துச் சென்றுள்ளன. நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களிலும் அரசியல் கலந்துரையாடல்களிலும் இந்த விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

ஆனால் தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கேற்காமல் இருந்ததால், இந்தக் கோரிக்கைகளை சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் எழுப்பும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்குச் செல்லும் பல அரசியல் கட்சிகள், தேர்தல் முறையின் அடிப்படை குறைபாடுகளைப் பற்றி பெரும்பாலும் கவலைப்படுவதில்லை.

ஒரு புதிய அரசியல் சிந்தனை தேவை

இந்த நிலைமையில், ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில், சமூக நீதியும் மக்கள் அதிகாரமும் பற்றிய தெளிவான அரசியல் நிலைப்பாடுகளை கொண்ட இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்தக் கேள்விகளை மீண்டும் தீவிரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தேர்தல் முறையில் மாற்றம், மக்களின் நேரடி கண்காணிப்பு, நிர்வாகப் பொறுப்பின் தெளிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அரசியல் திட்டம் உருவாகும் போது மட்டுமே ஜனநாயகம் உண்மையில் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

முடிவுரை

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் 'திருவிழா' அல்ல. வாக்குச் சீட்டு மக்களின் அதிகாரத்தின் தொடக்கம் மட்டுமே; அதன் முடிவு அல்ல.

வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம், தவறு செய்தால் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை, நிர்வாக அதிகாரத்தின் தெளிவான பொறுப்புப் பகிர்வு – இந்த மூன்று மாற்றங்களும் இணைந்தால்தான் ஜனநாயகம் அதன் முழுமையான வடிவத்தை அடையும்.

மேற்கண்ட மாற்றங்களே உண்மையான மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான பாதையைத் திறக்கும்.

மக்கள் மத்தியில் ஒரு புதிய ஜனநாயக விவாதம் தொடங்கட்டும்! 

ஊரான் 

No comments: