Wednesday, 29 April 2026

கருத்துக்கணிப்புகளும் மக்களின் மனநிலையும்: எதார்த்தத்தை உணருமா முற்போக்கு முகாம்?

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அரசியல் தரப்புகள் மட்டுமல்ல, பொதுமக்களின் எதிர்பார்ப்பும் மே 4-ஐ நோக்கி திரும்பியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தரும் தரவுகள் சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்க, "மயிர் பிளக்கும்" தொலைக்காட்சி விவாதங்களுக்கு அப்பால் மக்கள் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் உள்ளார்ந்த மனக்கசப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முற்போக்கு சக்திகள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.


தனிநபர் விமர்சனங்கள் தீர்வாகுமா?

இன்று அரசியல் களத்தில் எதிர்த்தரப்பினரை வசை பாடுவதன் மூலமாகவோ அல்லது தரம் தாழ்த்திப் பேசுவதன் மூலமாகவோ மாற்றுச் சக்திகளை வீழ்த்தி விட முடியாது. அவ்வாறு பேசுவது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே இருக்குமே தவிர, தேர்தல் களத்தில் அது வாக்குகளாக மாறுவது அரிது.

எதிர்தரப்பை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டுமானால், மக்களின் எண்ணக் குமரல்களுக்குச் சரியான "வடிகால்கள்" என்ன என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

நிர்வாகச் சீர்கேடும் மக்களின் அதிருப்தியும்

உள்ளாட்சி முதல் மாநில ஆட்சி வரை அதிகாரத்தின் முழுப் பிடியும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்தும், மக்களிடையே ஒருவிதமான சலிப்பும் அதிருப்தியும் நிலவுவதற்குக் காரணம் — அடிப்படைத் தேவைகளில் நிலவும் பாராமுகமே. 
இந்த அதிருப்தி, அரசியல் மாற்றமாக மாறும் முன் அதை யார் கேட்கப் போகிறார்கள்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட செல்வச் சேர்க்கை நடைபெறுகிறது என்ற மனநிலை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பல ஆண்டுகளாக பதவியைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் சொத்து குவித்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 

அரசு அலுவலகங்களில் புரையோடிப் போயுள்ள லஞ்ச ஊழல் முறைகேடுகள், அது எந்த ஆட்சியாக இருந்தாலும் தொடர்கதையாகவே இருப்பது தமிழக ஜனநாயகத்தின் சாபக்கேடு.

நீர் மேலாண்மையில் பல ஆண்டுகால அலட்சியம்

தற்போது பெய்து வரும் கோடை மழையில் கூட வடிகால் வசதியின்றி விளைநிலங்கள் பாழாவதும், வீடுகளுக்குள் நீர் புகுவதும் நிர்வாகத்தின் தோல்வியையே பறைசாற்றுகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சனை ஒரு பெரும் நிர்வாகத் தோல்வி அல்லவா? இதனால் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் செய்ய வேண்டிய அவலச் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

இது வெறும் ஒரு கிராமத்தின் பிரச்சனை அல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் மேலாண்மை குறித்த கேள்வியாகும்.

முற்போக்கு சக்திகளுக்கான எச்சரிக்கை

பாஜக அல்லது அதனுடன் தொடர்புடைய அரசியல் சக்திகள் தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது என்று விரும்பும் ஜனநாயக சக்திகள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். கொள்கை ரீதியாக மதவாத சக்திகளை எதிர்ப்பதில் ஆளுங்கட்சியை ஆதரிப்பதில் தவறில்லை; ஆனால், மக்களின் அன்றாடத் துயரங்களை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதை முற்போக்கு இயக்கங்கள் தட்டிக்கேட்பதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி வெற்றிக்காக வீடு வீடாக, தெருத்தெருவாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எப்படி மக்களைச் சந்தித்தோமோ, அதுபோலவே மக்களின் பிரச்சினைகளுக்காகவும் களம் காண வேண்டியது கட்டாயம். இல்லை என்றால், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரத்தை எட்டிப்பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

முடிவுரை

மே 4-ஆம் தேதி முடிவுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இன்றைய கருத்துக்கணிப்புகள் உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: அதிகாரம் என்பது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வடிகாலாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தில் உள்ளவர்களின் சுகபோக வாழ்க்கைக்கான கேடயமாக இருக்கக் கூடாது.

மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது; அதை மாற்றும் செயலில் இறங்கும் அரசியல் தான் நம்பிக்கையை உருவாக்கும். அதுவே முற்போக்கு அரசியலின் இன்றைய அவசரத் தேவை.

ஊரான்



No comments: