முன்னுரை
சிறைக்கூடங்களின் இரும்புக் கதவுகளைக்கூடத் தகர்க்கும் வல்லமை கொண்ட புரட்சியாளர்கள் பலர், கண்ணுக்குத் தெரியாத 'பண்பாட்டு விழுமியங்கள்' எனும் மெல்லிய நூலிழைகளால் சிறைப்பட்டுப் போகிறார்கள். சமூகத்தின் அவலங்களைச் சுட்டெரிக்கக் கிளம்பும் நெருப்புப் பிழம்புகள், சில சடங்குகளின் முன்னால் அணைந்து போவது ஒரு மாபெரும் சமூக முரண்.
1. அடையாளங்களின் அரசியல்
மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் ஒரு பொட்டு, கழுத்தில் தொங்கும் தாலி - இவையெல்லாம் வெறும் அலங்காரங்கள் அல்ல; இவை பெண்ணை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்கி வைக்கும் சனாதன அடையாளங்கள். பருவப் பெண்ணாக இருக்கும்போது பெட்டியில் முடங்கிக் கிடக்கும் இந்த 'அடையாளங்கள்', ஒரு பெண் இல்லத்தரசி ஆனவுடன் அவளோடு ஒட்டிக்கொள்கின்றன. 16 கஜ சேலைகள் மறைந்தாலும், இந்த அடையாளங்கள் மறைவதில்லை என்பதுதான் வேதனை.
2. சமூகத்தின் கேள்விக்கணைகளும் துவண்டுபோகும் துணிச்சலும்
களத்தில் இறங்கிக் காவலர்களைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் பெண்கள் கூட, சமூகத்தின் "கேள்விக்கணைகளால்" வீழ்த்தப்படுகிறார்கள். நெற்றியில் பொட்டும், கழுத்தில் தாலியும் இல்லை என்றால் உடனே சமூகம் கேட்கும் கேள்வி: "நீ என்ன பெந்தகோஸ்தாவா?".
இந்த ஒற்றைக் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் அல்லது 'நான் புரட்சியாளர்' என்று உரக்கச் சொல்லும் துணிச்சலைத் திருமண வாழ்க்கையின் சமூக அழுத்தம் மங்கச் செய்கிறது. 'நான் யார்?' என்பதை மக்கள் அறியாதவரை, சனாதனம் நம்மைத் துரத்திக்கொண்டேதான் இருக்கும்.
3. இயற்கை வேறு; அடையாளம் வேறு
ஆண்மைக்கும் பெண்மைக்குமான உயிரியல் வேறுபாடுகள் இயற்கையானவை. ஆனால், 'பெண்மை' என்பதற்குச் சமூகம் வகுத்துள்ள செயற்கையான அடையாளங்கள் பெண்களை முடக்கும் சனாதனச் சதி. அடுத்தவர்களுக்காக உன்னை நீ மாற்றிக்கொள்ளும் அந்த நொடியே நீ அடிமையாகிவிட்டாய் என்று பொருள்.
4. திருமணமும் தடம் புரளும் பயணமும்
பெண்ணடிமைத்தனத்தை விரட்டப் புறப்பட்ட பெண்கள், திருமணத்திற்குப் பிறகு நெற்றியில் ஒட்டும் பொட்டிலும், கழுத்தில் தொங்கும் தடித்த செயினிலும் (தாலி) தடம் புரள்கிறார்கள். இது மாற்றுப் பண்பாட்டை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் ஒரு மாபெரும் சருக்கல்.
தொகுதி மறு வரையறை தொடர்பான ஒரு பேட்டியின் போது பிரியங்கா காந்தியைக் கவனித்தேன். அவர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்தான், ஆனால் நெற்றியிலும் கழுத்திலும் எதுவும் இல்லை. ஆனால் நக்சல்பாரியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு முன்னணிப் போராளிப் பெண்ணின் புகைப்படத்தை அண்மையில் முகநூலில் கவனித்தேன். திருமணத்திற்கு பிறகு அவர் கழுத்தில் புதிதாக ஒரு செயின் தொங்குகிறது. காதுகளில் டோலாக்கு வேறு. இதுவே இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. விமர்சனங்கள் இல்லாமல் மாற்றங்கள் நிகழாது.
முடிவுரை
நீ எதுவாக இருக்க நினைக்கிறாயோ, அதுவாகவே இருப்பதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது.
சடங்குகளுக்காகவும், சமூகத்தின் கேள்விகளுக்காகவும் உங்கள் கொள்கைகளை அடகு வைப்பது புரட்சியாளர்களுக்கு அழகல்ல.
பண்பாட்டுச் சிறைகளை உடைப்போம்; மனிதன் மனிதனாக வாழும் உண்மையான விடுதலையை நோக்கிப் பயணிப்போம்.
ஊரான்
சனாதனத்தை எதிர்க்கின்ற அனைவருக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

No comments:
Post a Comment