Wednesday, 15 April 2026

தேர்தல் எனும் பெருமழையில் அடித்து வரப்படும் சாதியக் கழிவுகள்

முன்னுரை

இது கடும் கோடை காலம். சுட்டெரிக்கும் கதிரவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பூமிப்பந்தே தகித்துக்கொண்டிருக்கிறது.

தாகத்தால் தவிக்கும் பூமி, தனக்கு 'நீர்ச்சத்து குறைபாடு' (Dehydration) ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, புழுக்கள் நெளிந்தாலும் பரவாயில்லை என்று தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீரையே உறிஞ்சிக்கொள்ளும் அவலம் இங்கே அரங்கேறுகிறது. 

ஒரு பக்கம் இயற்கையின் சீற்றம் என்றால், மறுபக்கம் மனிதனின் அலட்சியம். நாய்கள் வீதிகளில் மலம் கழிப்பதைப் போல, மனிதர்கள் சாக்கடை ஓரங்களில் பாலித்தீன் பைகளையும் காலி பாட்டில்களையும் எறிந்துவிட்டுச் செல்லும் அலங்கோலம்.


மழைக்கால வெள்ளமும் சாதிய வெள்ளமும்

மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில், நாம் வீசியெறிந்த பாலித்தீன் பைகளும் சாக்கடைக் கழிவுகளும் எப்படி நீர்ப்பாதைகளை அடைத்துக்கொண்டு நம் வீடுகளுக்குள்ளேயே புகுந்து நாற்றமெடுக்கச் செய்கிறதோ, அதே போன்ற ஒரு நிலைதான் தேர்தல் காலத்திலும் நிகழ்கிறது. 

வீதிகள் தோறும் விரவிக் கிடக்கும் 'சாதியக் கழிவுகள்', தேர்தல் எனும் பெருவெள்ளக் காலத்தில் ஊரெங்கும் அடித்து வரப்படுகின்றன. அவை ஏற்படுத்தும் அந்த 'முடைநாற்றம்' மூக்கைத் துளைக்கிறது.

வேட்பாளர் தேர்வும் சாதியச் சாக்கடையும்

சில தொகுதிகளில் பண முதலைகள் சாதியச் சாக்கடையையே விழுங்கிவிடுவதால், அங்கே மட்டும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செல்வாக்கு செலுத்த முடிகிறது. மற்றபடி, ஒவ்வொரு தொகுதியிலும் எந்தச் சாதியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்களோ, அந்தச் சாதியைச் சேர்ந்தவரைத்தான் அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன.

"ஐயோ... நம் ஆட்களே இந்தத் தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகிறார்களே! இவர்களில் நான் யாருக்கு வாக்களிப்பது?" என்று புலம்பித் திரிகின்றனர் சாதியவாதிகள். இந்த அவலம் தனித் தொகுதிகளிலும் தொடர்கிறது. 

அங்கே பட்டியல் சாதியினர் மட்டுமே போட்டியிட முடியும் என்றாலும், அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர் என உட்பிரிவுகளைப் பார்த்து, "தகுதி-திறமையை" விட "சொந்தச் சாதி" என்ற குறுகிய மனப்பான்மையே மேலோங்கி நிற்கிறது. 

"நீ தவறு செய்தால் நானும் அதையே செய்வேன்" என்று அடம் பிடிக்கும் அவலமல்லவா இது?

கொள்ளையை நியாயப்படுத்தும் சாதிய உளவியல்

தனது சாதிக்காரரை வாக்களித்து வெற்றி பெறச் செய்தவுடன் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. எந்த மக்களின் வாக்குகளால் ஒருவர் வெற்றி பெற்றாரோ, அந்த மக்களை அவர் அடுத்த தேர்தல் வரை கண்டு கொள்வதில்லை. 

கொள்ளையடிப்பதிலும், காசு பார்ப்பதிலும் வல்லவராகி அவர் பெரும் பணக்காரராகி விடுவார். தான் பெரும் கோடீஸ்வரரான பிறகும், உதவி என்று நாடி வரும் தனது சொந்தச் சாதி நலிந்தோரைக்கூட அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.

இங்கேதான் ஒரு விசித்திரமான 'சாதிய உளவியல்' வேலை செய்கிறது. "இவன் இப்படி எல்லாம் கொள்ளையடித்துப் பெரும் பணக்காரன் ஆகிவிட்டானே?" என்று எவராவது கேள்வி எழுப்பினால், "ஏன்... மற்ற சாதிக்காரன் மட்டும்தான் கொள்ளையடித்து பணக்காரன் ஆகவேண்டுமா? எங்கள் சாதிக்காரன் ஆகக்கூடாதா?" என்று எதிர் கேள்வி கேட்டு அந்தக் கொள்ளையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த வக்கிரமான உளவியல்தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே முடக்கிப் போடுகிறது. மாற்றுச் சாதிக்காரன் ஊழல் செய்தால் கூச்சலிடுவதும், தனது சாதிக்காரன் ஊழல் செய்தால் பதுங்குவதும் என்கிற இழிநிலை ஏற்கனவே வந்துவிட்டது.

எச்சரிக்கை: சமூகச் சீரழிவு

இந்த உளவியல் இப்படியே வளர்ந்தால், நாளை தனது சாதிக்காரன் ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தாலோ அல்லது ஒரு கொலையைச் செய்தாலோ, அதையும் நியாயப்படுத்த இந்தச் 'சாதிப் பாசம்' வீதிக்கு வரும்.

முடிவுரை

பெருவெள்ளக் காலத்தில் கழிவுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போவது போல, இந்தச் சாதியச் சாக்கடை நாற்றத்தைச் சந்தனமாகப் பார்க்கும் 'சாதிய மனப்பான்மை கொண்டவர்கள்’ ஒட்டுமொத்தமாக ஒழிந்தால் ஒழிய இந்த மண்ணிற்கு விடிவு இல்லை. அறநெறியற்ற சமூகம் பிணத்தை விடக் கொடியது!

ஊரான்

No comments: