Monday, May 9, 2011

எது தொழில் தர்மம்?

அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர் எனக் கருதப்படுவதால் கனிமொழி மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு எடுத்த அரசியல் முயற்சிகள் பலனளிக்காததால் கடைசியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியிடம் தஞ்சம் புகுங்துவிட்டார் கனிமொழி.

குற்றச்சாட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவருமே தங்கள் வசதியைப் பொருத்து மிகச் சிறந்த வழக்கறிஞரை நாடுவது வாடிக்கையான ஒன்றுதான். குற்றம் சுமத்தப்பட்டதனாலேயே ஒருவர் குற்றவாளி என்று முன்கூட்டியே சொல்லமுடியாதுதான்.குற்றம் எதுவாக இருப்பினும்,குற்றம் சுமத்தப்பட்டவருக்கு முன்னிலையாவது நியாய அநியாயம் பற்றிக் கவலைப்படாத வழக்கறிஞர்களைப் பொருத்தவரை அது தொழில் தர்மம்தான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியலை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் தனது கட்சி எதற்காகப் போராடுகிறதோ அதற்கு எதிராகச் செயல்பட்டால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையாகாதா?அதன்படி அலைக்கற்றை முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி போராடும் போது அக்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி கனிமொழிக்காக முன்னிலையாவது கட்சியின் தர்மத்துக்கு எதிரானதாகாதா?

தொழில் தர்மப்படி நடந்து கொண்டால் இலட்சங்களும் கோடிகளும் கொட்டும். கட்சி தர்மப்படி நடந்து கொண்டால் சுண்டலுக்கே திண்டாட்டம் வந்துவிடும். ஆகையினால்தான் தொழில் தர்மம் என்ற போர்வையில் இவை நியாயப் படுத்தப்படுகின்றன. பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசனிடம் கேட்டால் அது அவருடைய தொழில் தர்மம் என்று மழுப்புகிறார்.  "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பார்களே, அதுபோல தொழில் தர்மத்தையும் பேசுகிறார்; ஊழலுக்கு எதிரான கட்சியின் கொள்கையையும் பேசுகிறார். கசாப்புக்காக வாதாடினாலும் இல.கணேசன் இப்படித்தான் பதில் அளிப்பாரோ! 'பாரத மாதாவையே' அம்மனமாக்கிவிட்டார்கள். பிறகென்ன தொழில் தர்மம் வேண்டிக்கிடக்கு?


வழக்கறிஞராகிவிட்டால் ஒருவருக்கு நியாய அநியாயங்களில் சொந்தக்கருத்து இருக்காதா? இருக்கக்கூடாதா? கண்டிப்பாக இருக்கும்; இருக்க வேண்டும். தனது வீட்டில் கொள்ளையடித்த ஒரு திருடனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாரா? தனது மகனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாரா? தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு காமுகனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாதா? திருடனும், கொலைகாரனும், காமுகனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழக்கறிஞரைத்தானே நாடுவான். அது அவனது தேவை. பணம் வந்தால் போதும் என நினைக்கின்ற வழக்கறிஞர் வேண்டுமானால் தொழி தர்மம் என்ற போர்வையில் இக்கயவர்களுக்கு வாதாடலாம். அப்படி ஒருவர் வாதாடினால் அது வேசித்தனம் இல்லையா?

6 comments:

  1. இதையேதான் நானும் சொன்னேன்:)

    ReplyDelete
  2. எதுவுமே தப்பில்லாத போது,இது மட்டும் விதிவிளக்கா

    ReplyDelete
  3. "தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு காமுகனுக்கு ஒரு வழக்கறிஞர் வாதாட முன்வருவாரா?"

    ராம் ஜெத்மலானிக்கு தொழில் தர்மம் தான் முக்கியம் கண்டிப்பா வருவாரு
    :-)

    ReplyDelete
  4. //'பாரத மாதாவையே' அம்மனமாக்கிவிட்டார்கள்// சூப்பர்

    ReplyDelete