Saturday, July 2, 2011

பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?

விஜய் தொலைக்காட்சியில் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை மையமாக வைத்து கோபிநாத்தின் “நீயா நானா?” நிகழ்ச்சி வாரம் தோறும் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் இவர்கள்தான் இந்தியாவோ எனக் கேட்கத் தோன்றும் அளவுக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அன்றாட ஆசாபாசங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணிவேராக அலசி எடுத்து வருகிறார் கோபிநாத். மயிர் வரை நீண்டுவிட்ட இந்த மயிர்பிளக்கும் வாதம் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எனத் தெரியவில்லை.

நிகழ்சியில் பங்கேற்போருக்கு பெரும்பாலும் தமிழில் பேச வராது. தங்களின் 'வளமான வாழ்க்கைக்கு' உதவாது என்பதால் தமிழை இரண்டாம் மொழியாகக்கூட படிக்க விரும்பாத இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தாய்த் தமிழையே வேண்டாம் என்பவர்கள் பெற்ற தாயை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களுக்காகத்தான் முதியோர் இல்லங்கள் திறந்து கிடக்கின்றனவே! இவர்களின் பிரச்சனைகள்தான் கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும் போலும்!

உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வசிக்க இடமின்றி வாடும் பெரும்பான்மையான இந்திய உழைப்பாளிகளின் பிரச்சனையை அலசினால் அதை யார் பார்ப்பார்கள்? பசிக்காக அல்ல-ருசிக்காக உண்பவர்கள்;  தேவைக்காக அல்ல-பகட்டைக் காட்ட மானம் போனாலும் கவலையில்லை என 'பேஷனுக்காக' ஆடை அணிபவர்கள்;  வசிப்பதற்காக அல்ல-கனவுலகில் மிதப்பதற்காக வாழ்விடங்களைத் தேடுபவர்கள்; இவர்கள்தான் ”நீயா நானா!” நிகழ்ச்சியின் மாந்தர்கள்.

இவர்களை ஒன்று கூட்டி கால் நகம் முதல் உச்சஞ் தலை மயிர் வரை அலசி ஆராய்வதில் இவருக்கு நிகர் இவரே. இவர் இந்த வாரம் (26.06.2011) எடுத்துக்கொண்ட தலைப்பு "பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?"

இங்கே பெண் மனம் என்பது ஏழை எளிய பெண்களுக்கானதல்ல. இவர்களுக்கு ஏது அழகும் அறிவும் என ஒதுக்கிவிட்டாரோ! அதனால்தான் மருந்துக்குக்கூட ஏழை எளிய பெண்கள் யாரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை போலும்!

அறிவின் கர்வத்தில் உள்ளவர்கள் ஒரு அணியாகவும், அழகின் கர்வத்தில் இருப்பவர்கள் மற்றொரு அணியாகவும் அறிவையும் அழகையும் அலசி எடுத்தார்கள். அழகு முக்கியமல்ல என வாதாடியவர்கள் அறிவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட அழகுக்கே முக்கியத்துவம் கொடுத்து அலங்காரத்தோடு வந்திருந்தார்கள்.

இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 'லேடீஸ் பேக்' இல்லாமல் வெளியே செல்லமாட்டார்கள். பிறகெதற்கு இந்த மயிர் பிளக்கும் வாதம்? நீயா நானாவின் 'ரேட்டிங்' ஏற வேண்டாமா? 


ஆண்களைக் கவரும் கவரிமான்

பொதுவாக அழகியல் குறித்த அடிப்படையான புரிதலுக்குப் பதிலாக, அழகு இரசிப்பதற்கானது, நுகர்வதற்கானது என்கிற கருத்தாக்கமே நிலவுகிறது. பெண்ணானவள் பிறரை குறிப்பாக ஆண்களைக் கவரும் கவரிமான் என்பதைத்தாண்டி இவர்களின் அழகியல் கண்ணோட்டம் செல்வதில்லை. வாடிக்கையாளர்களைக் கவர ஒரு விலைமாது செய்யும் அலங்காரத்திற்கும், ஒரு ஆண் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும் அலங்காரத்திற்கும் சாரம்சத்தில் வேறுபாடு கிடையாது. அழகின் கர்வத்தில் இருந்த ஒரு சிலர் இதை பகிரங்கமாகவே பகிர்ந்து கொண்டார்கள். உணர்ந்தோ உணராமலோ பெண்கள் இத்தகைய மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

பிறர் புகழ வேண்டும்,  பாராட்ட வேணடும் என்கிற ஏக்கமே இவர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த ஏக்கம் (longing for opinion of others) மனதளவில் ஒரு நோயக்குறி என்பதை ஹோமியோபதி மருத்துவம் தெளிவுபடுத்துகிறது. உருவ அழகுக்கு முக்கியத்துவம் தரும் அனைவருக்குமே-ஆண்கள் உட்பட-இது பொருந்தும்.

சாமான்யப் பெண்கள் யாரும் அழகுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதைத்தான் “கிராமங்களில் யாரும் அழகைத் தூக்கி சுமப்பதில்லை.” என சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சந்திரா முன்வைத்தார்.

முழங்காலுக்கு மேல் புடவையைத் தூக்கிச் செருகி நாத்து நடும் பெண்கள்; வயல்களில் அவர்கள் நேர்த்தியாய் நட்டுள்ள நாத்துகள்; இங்கே அழகென இரசிப்பது அப்பெண்களின் உமைப்பால் உருவான நெல் வயல்களைத்தானே தவிர அவர்களின் முழங்கால்களை அல்ல. ஆனால் இதைக்கூட ஆபாசமாக்கி நாத்து நடும் பெண்களை அசிங்கப் படுத்துபவர்கள் திரைப்படக் கயவர்கள்.

ஒற்றை மயிருக்கு ஒப்பாரி வைக்கும் ஒய்யாரப் பெண்களே! கட்டு தூக்கியதால் ஒட்டுமொத்தக் கூந்தலும் ஒட்டிக் கொண்டு சிக்கெடுக்கும் விவசாயப் பெண்டிரை நீங்கள் கண்டதில்லையோ!

உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை உழைப்பே அவர்களுக்கு அழகு சேர்க்கிறது. உழைக்காதப் பெண்களுக்கோ அவர்களின் கூந்தல் மயிர் ஒன்று உதிர்ந்தாலே அழகும் சேர்ந்தே உதிர்கிறது.  

”அழகாய் இருக்க யாருக்குதான் ஆசை இல்லை?” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.  நமது ஆக்கங்களும், சேவையும் பயனுள்ளதாய் இருந்தால் நாம்தான் இவ்வுளகில் அழகானவர்கள். உழைப்பால் உருவாகும் அழகு உலகம் உள்ளவரை போற்றப்படும். உருவத்தால் எழுப்பப்படும் புற அழகு முப்பதுகளிலேயே முடிந்துவிடும்.

இயற்கையான நமது உள்மனது எதை அழகு எனப் பார்க்கிறது? நேர்த்தியாக கட்டப்பட்ட கட்டடங்கள், சீனாவில் உள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம், தாஜ்மகால் உள்ளிட்ட ஏராளமான மனிதனின் படைப்புகளைக் கண்டு வியந்து அவற்றின் அழகை இரசிக்கிறோம். மனித உழைப்பே இத்தகைய அழகுக்கு காரணம் என்பதால்தான் நம்மை அறியாமலேயே “என்னமா அழகா கட்டியிருக்காம் பாரு!” என்கிறோம். நேர்த்தியான மனிதப் படைப்புகள் அனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு இதுதான். இது இயல்பாய் எழுகிற மன உணர்வு. இங்கே நாம் அழகெனப் பார்ப்பது உழைப்பைத்தான்.

உருவத்தால் கவர்ச்சியாய்த் தோன்றாத பலர் அவர்களது சேவை மற்றும் சாதனைகளால் நமக்கு அழகானவர்களாய்த் தோன்றுகிறார்கள். சேவைக்கும் சாதனைகளுக்கும் அடிப்படையாய் இருப்பது உழைப்பு மட்டும்தான். இப்படி இயல்பாய் உழைப்பையே அழகெனப் பார்க்கும் நம் மனம் தோற்றப் பொலிவில் மயங்கலாமா?

கோபிநாத்துகளும் இதைப் புரிந்து கொண்டால் சரி!

தொடர்புடைய பதிவுகள்:
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

5 comments:

  1. கோபிநாத்துகள் எந்தக்காலத்தில் புரிந்து கொண்டார்கள்

    ReplyDelete
  2. Appo ponnai sight adichathe illai neenga. appadithane? Ponnai paarthal thathuvama thonum umakk? Nalla eluthuraingayya pathivu :(

    ReplyDelete
  3. ஆண்-பெண் ஈர்ப்பு என்பது பருவ வயதில் இயல்பாய் எழுகிற ஒரு உணர்வு. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இது பொதுவானது. வயதின் முதிர்ச்சிக்கு ஏற்ப அது மங்கி மறையக்கூடியது. இயல்பாய் இருக்கிற இத்தகைய உணர்வை ஒப்பனைகள் மூலம் விலங்குகள் செயற்கையாய் ஏற்படுத்திக் கொள்வதில்லை. இங்கே இனப் பெருக்கம் என்கிற அவசியத் தேவைக்கு அப்பால் பாலியல் ஈர்ப்பு செல்வதில்லை. ஆனால் மனித இனம் என்ன செய்கிறது என்பதை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்.

    ReplyDelete
  4. //சாமான்யப் பெண்கள் யாரும் அழகுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதைத்தான் “கிராமங்களில் யாரும் அழகைத் தூக்கி சுமப்பதில்லை.” என சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சந்திரா முன்வைத்தார்.// அடிப்படையில் எல்லாப் பெண்களும் தாங்கள் அழகாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். கிராமப்புற பெண்களோ உழைக்கும் பெண்களோ இதற்கு விதிவிலக்கல்ல.

    ReplyDelete