Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, September 9, 2024

மொய்: காசைவிட எழுத்து வலிமையானது!

மொய் எழுதலாமா?

"மொய்" - அது திரும்ப அடைக்கப்பட வேண்டிய கடன். கடனை அடைக்கவில்லை என்றால் பிறகு பிணக்குதான்.

எனவே,

"மொய் எழுதாதீர்கள். 'எழுதியதை எழுதுங்கள்'. காசைவிட எழுத்து வலிமையானது".

கடந்த நாற்பது ஆண்டுகளாக, திருமணங்களில் எழுத்தைத் தவிர வேறெதையும் நான் எழுதியதில்லை. 
யாருக்கு தியானம் தேவை?

எங்கே தியானம் போதிக்கப்படுகிறதோ அங்கே சனாதனம் புகுத்தப்படுகிறது என்று பொருள். இப்பொழுது யோகாவையும் சனாதனம் உள் வாங்கிக் கொண்டது.

அறிவாளிகளுக்கு தியானம் தேவைப்படாது. உழைப்பாளிகளுக்கு யோகா தேவைப்படாது. இவை இரண்டும் யாருக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
***

ஞானம்: முட்டாள்களின் பிதற்றல்

ஞானம் என்றாலும், அறிவு என்றாலும் ஒன்றுதான். முன்னது சமஸ்கிருதம், பின்னது தமிழ். 

ஒரே பொருளைத் தரக்கூடிய சொற்களுக்கிடையில் வேற்றுமையைக் கற்பித்து மக்களை மயக்கும் மாயவித்தைக்கு ஒரு சிலர் மயங்கவும் செய்கின்றனர். 

அறிவு எனும் அழகு தமிழ் இருக்க ஞானம் எனும் சனாதன நச்சு எதற்கு? அறிவை விழுங்கு, ஞானத்தை துப்பு.
***

வினை தீர்ப்பவனா? வினை விதைப்பவனா?

விநாயகன் உள்ளிட்ட இந்து மதக் கடவுள்கள் அனைத்தும் பொதுமக்களின் ஆன்மிகத் தேவைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, பார்ப்பனர்களின் வருவாய்க்காக உருவாக்கப்பட்டவை. 

இது புரியாதவரை, புதிய புதிய கடவுள்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொண்டேதான் இருப்பார்கள். 
பொதுமக்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
***

விநாயகர் சதுர்த்திக் கழிவுகளை நீர்நிலைகளில் கலப்பதனால் சுற்றுச் சூழல் கெடாதா?

***
ஆன்மீகத்தால் யாருக்கு ஆதாயம்?

ஆன்மீகத்தால் அல்லல் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சமூக நீதிதான் மக்களை உய்விக்கும் என்ற திராவிடக் கருத்தியலை தமிழர்கள் நம்புகிறார்கள். பொதுவுடமைதான் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வல்லது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள். 

இங்கே, யார் வேண்டுமானாலும், திராவிடக் கருத்தியலை கரிச்சுக் கொட்டலாம். கம்யூனிசத்தை வசை பாடலாம். ஆனால், ஆன்மீகத்தை மட்டும் எவரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். என்னங்கடா உங்க நியாயம்?

திராவிடக் கருத்துக்களால், கம்யூனிசக் கோட்பாடுகளால் பலன் அடைபவர்கள் பாமரர்கள். ஆனால், ஆன்மீகத்தால் பலன் அடைபவர்கள் பார்ப்பனர்கள் மட்டும்தானே? இது ஏன் உனக்கு உரைக்கவில்லை?

***
அவாள்களுக்கு 'ஆன்மீகம்' ஒரு 'வணிகப் பொருள்!' 
'ஆன்மீகம்' அருவமானது. அதற்காக நீ பணத்தை இழக்கிறாய். அவன் பணத்தை ஈட்டுகிறான்.

***
கடவுள் இருக்கிறது என்று நம்புகிற அனைவருமே மன நோயாளிகள்தான். மனநோயாளிகளின் நாடு எப்படி முன்னேறும்?

***
இந்த உலகில் யார் இருக்கலாம்?

இந்த உலகில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் இருக்கலாம். இவர்கள் இந்த உலகின் நவீன கால சிற்பிகள்.

ஆனால், இந்த உலகில் புரோகிதர்கள், குருக்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என்ற போர்வையில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கக் கூடாது. காரணம் இவர்கள் மனித குலத்தின் அழிவுச் சக்திகள்.

ஊரான்

குறிப்பு: கடந்த மூன்று நாள் முகநூல் பதிவுகள்

Tuesday, August 13, 2024

ஆன்மாவும் ஆழ்ந்த இரங்கலும்!

ஒரு மனிதன், தன் வாழ்நாளில் பார்க்கின்ற, கேட்கின்ற, ருசிக்கின்ற, நுகர்கின்ற, உணர்கின்ற அத்தனை தகவல்களையும் தொகுத்துப் பார்த்து, தனக்கான ஒரு கருதுகோளை அல்லது உளவியலை உருவாக்கிக் கொள்கிறான். அதுவே அவனது உளவியலின் சாரம். இதற்கு ஏற்பவே, அவனது சிந்தனையும், ஆளுமையும் வெளிப்படுகிறது. 
 
துயரப்படுவோர் மீதான கழிவிரக்கம், கொடும் குற்றங்களுக்கு எதிரான கோபம், மன நிறைவு தரும் மகிழ்வான தருணங்கள் என ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்துவது அவனது உள்ளார்ந்த உளவியல் சாரத்தைத்தானே?

 
இந்த உள்ளார்ந்த உளவியல் சாரம், அனைவருக்கும் உண்டுதானே? இதுதானே அவனது ஆன்மாவாகவும் இருக்க முடியும். இங்கே பக்தியை மட்டும் ஆன்மாவோடு முடிச்சுப் போடுவது ஒருதலையானது. பக்திமானின் சாரமும் பகுத்தறிவாளனின் சாரமும் தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் சாரம் இருக்கும்தானே?
இப்படித்தான் வாழ வேண்டும் என ஒருவன் தனக்காக வகுத்துக் கொண்ட வழிமுறைதான் ஆன்மீக நெறி என்றால் அது சரிதானே?
 
எனவே, ஆன்மா அல்லது ஆத்மா பக்தியோடு மட்டும் தொடர்புடையதாகப் பார்ப்பது பிழையானது. ஆன்மீகம் என்கிற உளவியல் சார்ந்த மனித சாரம் அனைவரிடமும் குடிகொண்டுள்ளது.
 
ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகு, அந்த மனிதனின் உளவியல் சார்ந்த சாரமும் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், அவன் வெளிப்படுத்திய அவனது சாரம்  பிறரால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
 
ஒருவனுக்குக் கெடுதல் செய்தால், அவனது ஆவி அல்லது ஆன்மா அல்லது ஆத்மா 'உன்னை சும்மா விடாது' என கெடுதல் செய்வோரை எச்சரிக்கும் நோக்கிலும் இந்த ஆன்மா கோட்பாட்டை பலரும் நம்புகின்றனர்.

பிறருக்காய் ஓயாது உழைத்தவர்கள் இதுவரை பட்டது போதும் என்பதனாலோ,
இதுவரை பிறரை பாடாய்ப் படுத்தியது போதும், இனியும் படுத்த வேண்டாம் என்பதனால்தானோ என்னவோஒருவரின் உயிர் பிரிந்த பிறகு,
அவர் எவராயினும், ‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என ஆழ்ந்து இரங்குகிறதோ நம் மனம்?
 
ஒரு மனிதனின் உளவியல் சாரத்தைத்தான் நான் ஆன்மாவாக அல்லது ஆத்மாவாக புரிந்து கொள்கிறேன். ஆன்மா நம் கண்ணுக்குப் புலப்படாதது, ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகும், அது உலவிக் கொண்டிருக்கிறது அல்லது பிரிதொரு உடலில் மீண்டும் தஞ்சமடைகிறது அல்லது அடைக்கலமாகிறது என்கிற புனைவு பொருத்தமற்றது என்றே நான் கருதுகிறேன்.
 
புறத்தே இருந்து பெறப்படும்  உள்ளீடுகள் மாறும் பொழுது அல்லது வேறுபடும் பொழுது ஒரு மனிதனின் உள்ளார்ந்த உளவியல் சாரமும் வேறுபடத்தானே செய்யும். ஆன்மா நிலையானது என்பதும் இங்கே நிலையற்றதாகிறது. இங்கே, பழைய ஆன்மா முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய ஆன்மா தோன்றுவதும் இயல்புதானே? எனவே, ஆன்மா அழிவற்றது என்ற கருதுகோளும் இங்கே அடிபட்டுப் போகிறது.
 
வாகனங்கள் பரபரக்கும் சாலையைக் கடந்து செல்ல பரிதவிக்கும் ஒரு மூதாட்டியைக் கரம் பிடித்து மறுபக்கம் சேர்ப்பவனுக்கோ ஆத்ம திருப்தி.
 
பசியால் வாடும் ஏழைகளின் பசியாற்றுவதில் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கோடி கோடியாய் கொள்ளை அடித்ததில்
நலிந்தோரின் துயர் துடைக்க
கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதில் ‘வள்ளல்களுக்கும்’
ஆத்ம திருப்திதானே?
 
கொடுஞ் செயல் புரிவோனை, தடுக்கத் துணிவில்லை என்றாலும் நாக்கப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டு விட்டால் சிலருக்கு ஆத்ம திருப்தி.
 
கெட்டழியும் இச் சமூகத்தை சீராக்கத் துடிக்கும் இளைஞனின் நெஞ்சக் குமுறல் அவனது ஆத்மாவின் வெளிப்பாடுதானே?
 
பார்ப்பதையெல்லாம் பதிவாய்ப் போடுவதில் எனக்குள் எழுவதும் ஒரு ஆத்ம திருப்திதானே?
 
துணிந்தவனின் ஆன்மா ஆக்கபூர்வமானது. கோழைகளின் ஆன்மா கதைக்கு உதவாதது.
 
உங்களிடம் இருப்பது எத்தகைய ஆன்மாவோ?

ஊரான்

Tuesday, July 5, 2011

வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா?

நம்மை சுருக்கெனக் கடிக்கும் எறும்பை நசுக்கிக் கொல்கிறோம்; மிதிக்க வரும் யானையை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறோம். நமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து விலங்குகளையும் நமது பலத்தால் கொன்றுவிடுகிறோம். இல்லை என்றால் விலங்குகளால் நாம் கொல்லப் படுவோம்.பலமானவைகள் மட்டுமே உயிர் வாழ முடியும். பலவீனமானவைகள் அனைத்தும் அழிந்து போகும். இது இயற்கை விதி.

விலங்குகளைப் பொருத்தவரை உயிர் வாழ்வதற்காகப் போராடுவதைத் தவிர வேறு நோக்கங்கள் கிடையாது. உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் விலங்குகளுக்கு உணவு தேவை. தன்னைவிட பலமான எதிரி விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளவும் பாதுகாப்பான வசிப்பிடம் தேவை. சில விலங்குகள் தாங்களாகவே தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன. ஒரு சில விலங்குகள் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கொள்கின்றன. ஆக விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ்வதற்காக அன்றாடம் போராடித்தான் ஆக வேண்டும். அவைகளுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மனிதனுக்கும்தான். அதனால்தான் போராடுதல் (struggle) விலங்குகளின் தலையாயப் பொதுப் பண்பு என பிரபல ஹோமியோபதி மருத்துவர் இராஜன் சங்கரன் வரையறுக்கிறார்.  

ஆனால் மனிதன் என்கிற விலங்கு மட்டும் உயிர் வாழ்வதற்காக மட்டும் போராடுவதில்லை. அதற்கும் மேலே ஏறாளமான ஆசாபாசங்களை வளர்த்துக் கொண்டு அவைகளுக்குாகப் போராடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விலங்குகளுக்கு, உணவும் பாதுகாப்பான இடமும் இருந்துவிட்டால் வாழ்க்கை வளமானதுதான். ஆனால் மனிதனுக்கோ தேவைகள் ஏறாளம். எவ்வளவு போராடினாலும் பலருக்கு வாழ்க்கை வளமாவதில்லை. எனவே மேலும் மேலும் போராட்டத்தை தீவிரப் படுத்துகிறான். இன்றைய உலகமயச் சூழலில் தேவைகள் அதிகரித்துள்ள அதே வேளையில் அவைகளைப் பெருவதற்கான போராட்டங்களும் மூர்க்கத் தனமாக மாறி வருகின்றன. அதனால்தான் கொலை, கொள்ளை, வரதட்சணை போன்ற கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிறார்கள். இந்த முயற்சியேகூட போராட்டத்தின் ஒரு வடிவம்தானே. என்னதான் போராடினாலும் வழுக்கி விழுந்து எழ முடியாதவர்களே ஏராளம். எழ முயல வேண்டுமானால் மீண்டும் போராடித்தான் ஆகவேண்டும்.

போராடிப் போராடி அலுத்துப் போன மக்களுக்கு வாழ்க்கை என்றுமே பூந்தோட்டமாக இருந்ததில்லை. மக்களின் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற விவேகானந்தரைப் போல ஆன்மீகத்தை நாடுவதுதான் ஒரே வழி என சமீபத்தில் ஒரு பட்டி மண்டபத்தில் நடுவராக வீற்றிருந்த சுகி.சிவம் தீர்ப்பு எழுதி முடித்து வைத்தார். பட்டி மண்டபத் தீர்ப்புகள் மேல் முறையீடுகள் ஏதும் இல்லாத இறுதித் தீர்ப்பாயிற்றே! யார் கேள்வி கேட்க முடியும்?  

அரங்கில் குழுமியிருந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்தான். இந்தியா ஒன்றும் நாத்திக நாடல்லவே. ஆன்றாடம் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு தங்கள் துன்பம் நீங்காதா என முறையிடும் மக்கள் நிறைந்த ஆன்மீக நாடுதானே இந்தியா. ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபட்டும் இவர்களின் வாழ்க்கை ஒன்றும் பூந்தோட்டமாக மாறவில்லையே!

சுகி.சிவம் சொல்கின்ற ஆன்மீகம் விவேகானந்தரின் ஆன்மீகம் போல என்றால் அனைவரும் காவித் துண்டை போர்த்திக் கொண்டு ஆன்மீகம் வளர்க்க கிளம்பிவிட்டால் பிறகு யார் பயிர் வளர்ப்பார்கள்? யார் சோறு போடுவார்கள்? யார் ரோடு போடுவார்கள்? ஒரு வேளை காற்றை சுவாசித்து உயிர் வாழும் கலையைக் கற்றுக் கொடுப்பார்களோ! இப்பொழுதே அதைக் கற்றுக் கொடுத்தால் பட்டினியால் மாண்டு போகும் ஒரிசாவின் ஏழைகளைக் காப்பாற்றலாமே!

வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றியமைத்துக் கொண்டவர் விவேகானந்தராம்.  உண்மையான ஆன்மீகவாதியாக, அதாவது சாமியாராக மாறிவிட்டால் வாழ்க்கை எப்பொழுதுமே பூந்தோட்டமாம்.

பொதுவாக சாமியார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆகவே குடும்பம் இல்லை. கணவன் மனைவிக்கு இடையிலான போராட்டம் இல்லை. பிள்ளை குட்டிகள் இல்லை என்பதால் மழலையர் பள்ளிக்குப் படையெடுக்கும் வேலை இல்லை. உயர் கல்வி பயில சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டியதில்லை. பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் மூட்டை மூட்டையாக வரதட்சணையும் சீர் செனத்தையும் சேகரிக்க வேண்டியதில்லை.

விண்ணை முட்டும் விலைவாசியை சமாளிக்க வேண்டியதில்லை. ஏன் என்றால் செல்லும் இடமெல்லாம் வாய் ருசிக்க ஓசியிலேயே வயிறு முட்டத் தின்றுவிடுவதால் உணவுக்கான போராட்டம் இல்லை. நியாய விலைக் கடைக்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கும் மஞ்சள் பையை எடுத்துச் சென்று கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. பால் விலை ஏறினால் இவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? பாலைத்தான் சுண்டக் காயச்சி பாதாம் கலந்து கொடுத்து விடுகிறார்களே! பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏறினால் இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? 

பேருந்து நிலையத்துக்கும், இரயிலடிக்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் 'சொய்ங்' என விண்ணில் பறந்து நகரங்களைக் கடப்பவர்கள், சாலைப் புழுதியில் சிக்காமல் குளு குளு மகிழுந்தில் உடல் கலைப்பின்றி பயணிப்பவர்கள்.

வரவு செலவு திட்டம் போட்டா இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்? சம்பளக்காரன் மாதாந்திர வரவு செலவு கணக்குப் போட வேண்டும். தவறினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். சம்பளக்காரன் நடுத் தெருவுக்கு வந்தால் சமூகம் ஏளனமாய்ப் பார்க்கும். ஆனால் சாமியார்கள் நடுத் தெருவுக்கு வந்தால் பண மழை கொட்டும். 

சாலை வசதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைவகள் கூட கிடைக்காததால் மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடைப்பதில்லை. ஆன்மீகத்தை நாடிவிட்டால் இவை எல்லாம் கிடைத்து விடுமா? வாழ்க்கை பூந்தோட்டமாக மாறிவிடுமா? அவ்வளவு ஏன்? குறைந்த பட்சம் கொசுத் தொல்லையிலிருந்தாவது மக்களை விடுவிக்க முடியுமா? இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் இதற்கும் ஒரு முல்லா கதையை கை வசம் வைத்திருப்பார்கள். கதை சொன்னால்தான் நம்மாளு கவுந்து விடுகிறானே!

சொற்பொழிகளும் ஆசிர்வாதங்களும்தான் இவர்களின் மூலதனம். இம்மூலதனம் 'ரெக்கரிங் டெபாசிட்' போல குட்டி போடுவதால் இவர்களின்  வாழ்க்கை எப்பொழுதும் பூந்தோட்டம்தான்.'ஷேர் மார்க்கெட்டில்' பணம் போட்டவன்கூட திவாலாகிவிடுகிறான். ஆனால் என்றுமே திவாலாகாத தொழில் ஆன்மீகம் ஒன்றுதான். ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தை போதிப்பவர்கள் சொகுசாய் வாழ்கிறார்கள். இல்லாத ஒன்றை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதுதான் ஆன்மீகம். பட்டிமண்டபங்கள் நடத்தி, சொற்பொழிவுகளைப் பொழிந்து ஆன்மீகத்திற்கு புத்துயிரூட்ட சுகி.சிவம் போன்ற நவீன ஆன்மீகவாதிகள் சுற்றுலா செல்கிறார்கள்.

ஆன்மீகத்தை வளர்க்கவே விவேகானந்தர் அன்று ஊர் ஊராய் பிரசங்கம் செய்தார். அதே வேலையை இன்று சுகி.சிவம் போன்ற ஆன்மீக விற்பனையாளர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்றைய ஆன்மீகம் மிகவும் 'மாடர்னானது'; ரொம்பவும் 'காஸ்ட்லியானது'. ஆயிரங்களை காலில் வைத்தால்தான் சாமியார்கள் கையை உயர்த்துவார்கள்;சுகி.சிவம் போன்றவர்கள் 'மைக்கை' பிடிப்பார்கள்.  ஆன்மீகமே சும்மா கிடைக்காத போது வாழ்க்கை மட்டும் சும்மா கிடைத்துவிடுமா?

சாமான்யனுக்கு வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான்.