Wednesday, April 24, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 3

உணவுத் தீண்டாமை

முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, பூண்டு, டர்னிப் போன்ற காய்கறி உணவுகள் மீதும்; வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் மீதும்; பால், தேநீர், மோர், ஊறுகாய், உப்பு, சர்க்கரை, இனிப்பு, தேன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் மீதும்; மாட்டுக்கறி, பன்றிக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை போன்ற மாமிச உணவுகள் மீதும் ஒருவருக்கு விருப்பமும்-வெறுப்பும் இருப்பது அவரின் தனிப்பட்ட பொதுத் தன்மைகளாக (generalities) வரையறுக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வகை உணவை ஒருவர் விரும்புவதும் (desire) அல்லது வெறுப்பதும் (aversion) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உணவை உட்கொண்டால் அது அவருக்கு உடல் ரீதியிலான தொந்தரவுகளை அதிகப்படுத்துவதும் (aggravation) அல்லது தொந்தரவுகளை மட்டுப்படுத்துவதும் (amelioration) அந்த தனிப்பட்ட நபருக்கானதாக மட்டுமே பார்க்க வேண்டும். அதையே எல்லோருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. அந்த நபரைப் பொருத்தவரையில் இங்கே உணவில் உயர்ந்தது – தாழ்ந்தது என்கிற ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.

ஒரு பகுதியின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப அங்கே விளையும் காய்கறிகள் தானியங்கள் பழங்கள் போன்ற பயிர் வகைகளைப் பொருத்தும், வாழும் – வளர்க்கப்படும் பறவைகள் விலங்குகளைப் பொருத்தும் அவ்வட்டார மக்களின் உணவு முறை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சம் ஏற்படும் காலங்களில் உணவுக்கு இவர்கள் வேறு பகுதிகளை நாட வேண்டி இருப்பதால் அதற்கேற்ப உணவு முறையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது போன்ற காலங்களில் உணவில் இது பிடிக்கும் அது பிடிக்காது என்கிற பேச்சுக்கே இடமில்லை. கிடைத்ததை உட்கொண்டால்தான் உயிர் வாழ முடியும். எனவே உணவு முறையை திர்மானிப்பதில் இயற்கை பெறும் பங்காற்றுகிறது.

'நான் கேப்பக் கூழ், களி எல்லாம் சாப்பிடுவதில்லை. ஏன்! ரேசன் அரிசியைக்கூட வாங்குவது கிடையாது' என ஒருவன் சொல்லும் போது 'நான் என்ன கஞ்சிக்குச் செத்தவனா?' என்கிற எகத்தாளம் வந்து விடுகிறது. பின்பு அவன் வறியவனாகிவிட்டால் கேப்பக் கூழும், களியும், ரேசன் அரிசியும் அவனது அன்றாட அத்தியாவசிய உணவாகிவிடுகிறது. வசதி வந்தால் கூழ் கேவலமானதாகவும் வறுமை தொற்றிக் கொண்டால் அதே கூழ் அமிர்தமாகவும் மாறிவிடுகிறது.

'நான் அசைவம் சாப்பிட மாட்டேன்’ என்று ஒருவன் சொல்வதற்கும் ‘நாங்க கவிச்சியே சாப்பிட மாட்டோம்’ என்று மற்றொருவன் சொல்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. நான் என்பது ஒரு தனிப்பட்ட நபரோடு முடிந்து போகிறது. ஆனால் நாங்க என்று வரும்போது அது தங்களது சாதியை பிரதானப்படுத்துகிறது. சாதியைப் பிரதானப்படுத்தும் போது, ஒரு சைவ உணவுக்காரன் தன்னை உயர்ந்தவனாகவும், அசைவம் உண்பவனை இழிவானவனாகவும் பார்க்கிறான். பார்ப்பனர்கள் அவ்வாறு தங்களைக் கருதிக் கொள்வதால்தான் அக்கம் பக்கத்தில் பார்ப்பனர்கள் யாரும் வசிக்கவில்லை என்றாலும்கூட தங்களது வீட்டை வாடகைக்கு விடும் போது ‘சைவம் உண்போர் மட்டுமே அணுகவும்’ என விளம்பரப் படுத்துகிறார்கள்.

கறி சாப்பிடும் பிற சாதிக்காரர்களை பார்ப்பனர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ அதைவிட சற்றுக்  கூடுதலாகவே மாட்டுக்கறி உண்ணும் தாம்த்தப்பட்டவர்களை பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் பார்க்கின்றனர். அதனால்தான் உண்ணும் போது என்னவென்று தெரியாமல் உண்டுவிட்டு பிறகு தெரியவரும் போது உடனே வாந்தி எடுக்கிறான் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரன். உணவுத் தீண்டாமையின் உச்ச வடிவம் இதுதான்.

மொழித் தீண்டாமை

சென்னையிலிருந்து கன்யாகுமரி வரை வாழும் தழிர்களுக்குத் தாய் மொழி ஒன்றுதான். ஆனால் வட்டார வழக்கிற்கேற்ப சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் என பேசும் தொணியில் மட்டும்தான் வேறுபாடு இருக்கும்; சொற்கள் என்னவோ ஒன்றுதான். ஆனால் பார்ப்பனர்கள் தமிழகத்தின் - ஏன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அவர்களது பேச்சுத்தமிழ் வட்டாரத் தொணிக்கேற்ப இருக்காது. மாறாக அவர்களுக்கான அவாள் லேங்குவேஜில்தான் இருக்கும்.

அதனால்தான் ‘ஜலம்’, ‘சாதம்’, ‘ஆத்து’ போன்ற சொற்களை ‘எங்க லேங்குவேஜ்’ என்று பெருமையாகச் சொல்கிறாள் அந்தப் பார்ப்பனச் சிறுமி. இந்த அவாள் மொழி, வழக்கிழந்து போன சமஸ்கிருதத்தின் நீட்சியாகக்கூட இருக்கலாம். உங்க லேங்குவேஜைவிட எங்க லேங்குவேஜ் உயர்ந்தது என்கிற மொழித் தீண்டாமை இங்கே ஒளிந்திருக்கிறது. அக்கிரகாரத் தெருக்களில் தொடங்கும் இத்தகைய மொழித் தீண்டாமை கோவில் கருவறை வரை நீள்கிறது. அதனால்தான் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது.

“நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்”, என்பதும் “எங்க லேங்குவேஜ்”, என்பதும் பிற சாதிகளைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற ஒரு உயர் சாதி மனப்பான்மையின் வெளிப்பாடு. இதை ஒரு பார்ப்பனச் சிறுமி தானாக வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக அவளது குடும்பம் மற்றும் பார்ப்பனச் சாதி உறவுகள் மூலமாக அவளுக்குச் சொல்லப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட ஒன்று.

இப்படித்தான் குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் மெல்ல மெல்ல சாதி ரீதியிலான பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் அவர்களது மனதில் விதைக்கப்படுகின்றன.

தொடரும்.....
தொடர்புடைய பதிவுகள்

8 comments:

  1. தெளிவான பதிவு. மொழி தீண்டாமை , இதுவரை யாரும் இதை பற்றி பேசியதில்லை. அவர்கள், மற்ற ஜாதியினரின் மொழியை கிண்டல் செய்வதை , பள்ளியில் இருந்து அலுவலகம் வரை காண முடியும்.

    ReplyDelete
    Replies
    1. தூர நின்று பார்க்கும் போது எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ஓரளவு தெரிந்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆனால் நெருங்கிப் பழகும் போதுதான் சாதியை உயர்த்திப் பிடிப்போரின் உண்மை முகம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. சொந்த அனுபவங்களிலிருந்துதான் எனது படைப்புகளை நான் எழுதி வருகிறேன்.

      நன்றி!

      Delete
  2. பார்ப்பனிய மொழியோ வேறு மொழியோ இப்போ இங்கிலீஷ் பேசுகிறவன்தான் உயர்ந்தவன்....

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலம் தெரிந்தவன் தன்னை உயர்ந்தவனாகக் கருதிக் கொள்வதற்கும் பார்ப்பனிய மொழி பேசுபவன் அவ்வாறு பேசுவதை பெருமையாகக் கருதுவதும் ஒன்றல்ல. முன்னதில் ஆங்கிலம் படிப்பதன் மூலம் அவனும் தன்னை உயர்ந்தவனாக கருதிக் கொள்ள முடியும். பின்னதில் பார்ப்பனரல்லாத ஒருவன் பார்ப்பன மொழியில் பேசினாலும் அவனை உயர்ந்தவனாகக் கருதமாட்டார்கள். முன்னது தகுதியால் தீர்மானிக்கப்படுவது. பின்னது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது.

      Delete
  3. 1st i would like to thank Mr.Jothiji, Thirupur for introduced your blog.
    Very nice approach and clear vision of explaining things. Great.

    ReplyDelete