Friday, June 6, 2014

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



காலை 5.30 மணிக்கு கண் விழித்த போது கீழ்வானம் சற்றே வெளுத்திருந்தது. வயது 56 ஐக் கடந்து விட்டது. விடலைகளைப் போல விடிந்த பிறகும் தூங்குவது இந்த வயதுக்காரர்களிடம் காண முடியாது. காலைக் கடனை முடித்துவிட்டு நடைபயிற்சி. காலை நடைபயிற்சி மிகவும் உற்சாகமானதாகவே இருக்கும். இதயத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் வேண்டி இருப்பதால் காலை நடைபயிற்சியை பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. அரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தேன். 

இருபது நிமிட நேரம் மட்டுமே நடை பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு பயன் ஏதும் ஏற்படுவதில்லை; நமது ஆற்றலை செலவழித்தால் மட்டுமே நடைபயிற்சியின் பலன் நமக்குக் கிட்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. இருபது நிடம் நடந்த பிறகே நமது ஆற்றல் செலவாகத் தொடங்கும். ஆற்றல் செலவானால்தான் வேர்க்கத் தொடங்கும். குறைந்தது ஒரு மணி நேரம் நடந்தால்தான் நடைபயிற்சியின் முழு பலனும் நமக்குக் கிட்டும் என்றாலும் எனது உடல் நிலையை கணக்கில் கொண்டு  அரை மணி நேர பயிற்சியை மேற்கொள்கிறேன்.

நடை பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் நடைபயிற்சிக்காக இரண்டு கால்களிலும் சாக்சைச் சொருசி, அதன் பிறகு கேன்வாஸ் ஷீவை திணித்து, போதுமான அளவு அழுத்தம் கொடுத்து லேசைக் கட்டுவதும், அதே போல ஷீவையும் சாக்சையும் கழற்றுவதும் ஒரு சுமையாகவேத் தோன்றும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு செய்தாலும் இவ்வேலையை குனிந்து கொண்டுதான் செய்ய வேண்டும். 
 
மணி 6.00.

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டருக்குக் கீழே சென்றுள்ளது. நகரங்களில்தான் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை இது வரை இருந்தது. ஆனால் இன்று கிராமங்களிலும் அதே நிலைதான். முப்போகம் விளையக்கூடிய பகுதிகளில்கூட குடிநீருக்கும் வீட்டு தேவைகளுக்கும்கூட காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே மக்கள் அல்லாடும் போது விவசாயத்திற்கு வழி ஏது?

ஆனால் நாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள ஊராட்சி பொதுக்குழாயில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அன்றாடம் குறைந்தது அரைமணி நேரத்திற்கு தண்ணீர் விடுவார்கள். நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு நாள்கூட தண்ணீர் வற்றியதே இல்லை.
 
நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதால் அங்குள்ள குழாயில் தண்ணீர் வரவேண்டுமானால் மேநீர்த் தேக்கத் தொட்டி நிறைந்தால் மட்டுமே சாத்தியம். பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மாடியில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. எனவே தெரு பொதுக் குழாயில்தான் குடி தண்ணீர் பிடிக்க வேண்டும். நடை பயிற்சி முடித்து வந்த உடனே தேவையைப் பொருத்து இரண்டு குடம் தண்ணீரோ அல்லது மூன்று குடம் தண்ணீரோ பிடிப்பது வழக்கம். இருபது படிகள் ஏற வேண்டி இருப்பதால் குடத்தை தோள் மீது சுமந்துதான் எடுத்துச் செல்வேன். அவ்வாறு எடுத்துச் செல்வது வேலையை சற்றே சுலபமாக்கும். இது எனது அன்றாடப் பணிகளில் ஒன்று. குடத்தைத் தூக்கி தோள்மீது வைப்பதற்கு பலமும் அதே போல தோளிலிருந்து குடத்தை இறக்குவதற்கு லாவகமும் தேவை; இல்லையேல் முதுகு பிடித்துக் கொள்ளும்.

குடத்தை ஏற்கனவே அலம்பி இருந்தாலும் தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு முறை குடத்தை அலம்புவது இயல்பாகிவிட்டது. குடத்தின் கழுத்தை இடது கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக இடப்புறமாக திருப்பியவாறே குடத்தின் வெளிப்பகுதியை வலது கையால் அலம்புவதும் அதே போல குடத்தின் உட்பகுதியில் தண்ணீரை மேலும் கீழுமாக சலக் சலக் என அடித்து அலம்பி கீழே ஊற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை அவ்வாறு செய்வது வழக்கமாகிவிட்டது. இப்படிச் செய்யும் போது குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது செலவாகும். குடத்தை அலசுவதற்கே இவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோமே என்று எண்ணத் தோன்றினாலும் குடத்தை இவ்வாறு அலம்புவது ஒரு அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது. தண்ணீர் பிடிக்கும் வேலையை குனிந்தவாறுதான் செய்ய வேண்டும். தண்ணீர் நிரம்பும் போது மட்டும் சற்றே நிமிர்ந்து நிற்கலாம். இப்படி மூன்று குடம் தண்ணீர் பிடிப்பதற்குள் மூச்சிரைத்துவிடும்.

வீட்டிற்குள் குடிதண்ணீர் குழாய் இணைப்பு வைத்துள்ளவர்களில் ஒரு சிலர் தண்ணீர் நின்றவுடன் குழாயை மூடாமல் விட்டுவிடுவார்கள். மறுநாள் இவர்கள் எழுந்து தண்ணீர் பிடிப்பதற்குள் ஏராளமான நீர் வெளியேறி சாக்கடையில் கலப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். ஒரு முறை இப்படி வீனாகினால்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் சில வீடுகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு ஆத்திரம் வரும். இது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் குழாயை மூடி வைப்பதில்லை.

மணி 6.15.

அடுத்து தேநீர் தாயாரிக்க வேண்டும். அதற்கு முன் இரண்டு டம்ளர் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தேன். சமைப்பதற்கு முன்பு 1/2 மணி நேரம் அரிசி ஊறினால் சோறு மிருதுவாக இருக்கும்; விரைவில் சோறு வெந்துவிடும் என்பதற்காக இந்த முன் ஏற்பாடு.

நேற்று மாலை வாங்கிய பால் 200 மில்லி மீதம் இருந்தது. கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் வால்வை கீழ்புறமாக திருப்பிய பிறகு  கேஸ் அடுப்பின் வால்வை இடது கையால் இடது புறமாக திருப்பிய அதே நேரத்தில் வலது கையால் லைட்டரை அழுத்தி அடுப்பைப் பற்ற வைத்தேன். அலுமினியத்தால் ஆன பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை அதில் ஊற்றிய பிறகு இரண்டு தேக்கரண்டி த்ரீரோசஸ் தேயிலைத் தூளை போட்டு அதே அளவு சர்க்கரையையும் போட்டேன். சிறிது நேரத்தில் தேயிலையோடு பாலும் சேர்ந்து பொங்கியது. அடுப்பை சிம்மிற்கு குறைத்து மீண்டும் வால்வை முழுவதுமாக திறந்தேன். மீண்டும் பால் பொங்கியது. மீண்டும் சிம்மில் வைத்து…......இப்படியாக மூன்று முறை செய்து அடுப்பை அனைத்து விட்டு தேநீரை வடிகட்டி இரண்டு டம்ளரில் ஊற்றி ஒன்றை எனது தாய்க்குக் கொடுத்துவிட்டு மற்றொன்றை நான் எடுத்துக் கொண்டேன். தேநீரை இரண்டு முறை மட்டுமே ஆற்றினேன். இச்செய்முறைப்படி தயாரிக்கப்படும் தேநீரின் சுவை நட்சத்திர வீதிகளில்கூட இருக்காது. இந்த செய்முறையை நான் வட இந்தியாவிற்குச் சென்றிருந்த போது பார்த்து கற்றுக் கொண்டது. தேயிலையை அதிகமாக கொதிக்க வைத்தாலோ அல்லது அதிக முறை ஆற்றினாலோ தேநீரின் சுவை குன்றிவிடும் என்பது எனது அனுபவம். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் பிளாஸ்டிக் கைப்பிடி ஏற்கனவே உடைந்து விட்டது. ஒரு துணியைக் கொண்டு அலுமினிய கைப்பிடியைப் பிடித்துதான் அந்த பாத்திரத்தைக் கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போது துணியை சரியாகப் பிடிக்கவில்லை என்றால் கையில் சூடுபடுவதை தவிர்க்க முடியாது. இன்று எனது வலது கையின் நடு விரலில் சூடு பட்டுவிட்டது. பிறகு அது தீக்கொப்புளமாகவும் ஆகிவிட்டது.

தேநீர் குடித்து முடித்த பிறகு டம்ளரைக் கழுவி அதன் இடத்தில் கவிழ்த்து வைத்தேன். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்திய அலுமினியக் பாத்திரத்தையும் அப்பொழுதே கழுவிவிட வேண்டும். பாத்திரத்தைத் தேய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நாரை விம் பவுடர் மற்றும் சபீனா பவுடர் இரண்டிலும் ஒத்தி எடுத்து கிண்ணத்தை இடது கையால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு வலது கையால் பாத்திரத்தின் உட்பகுதியை அழுத்தி அழுத்தித் தேய்க்க வேண்டும். அழுத்தித் தேய்க்கும் போது பாத்திரத்தையும் லேசாக சுழற்றியவாறே செய்தால்தான் பாத்திரத்தின் முழுபகுதியையும் சுத்தம் செய்ய முடியும். தேய்த்து முடித்த பிறகு தண்ணீரால் அலம்பி உட்பகுதியைப் பார்க்க வேண்டும். ஒரு முறை கழுவினால் முழு கரையும் போகாது. பால் காயும் போது பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் கரை அவ்வளவு லேசில் போவதில்லை. அதற்கு சில கே.ஜி.போர்ஸ் (kgf) அழுத்தம் கொடுத்தால்தான் முழு கரையும் நீங்கும். அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போது வலது கை விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூட்டு என அனைத்து மூட்டுகளும் ஓராயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கிக் கொள்கின்றன. அந்த அழுத்தத்தால் ஏற்படும் வலியை உணரத்தான் முடியுமே ஒழிய விவரிக்க முடியாது. கையோடு வடிகட்டியையும் கழுவி வைத்தேன்.

மணி 6.30.

குளியலறை சென்று ஒரு வாளியில் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் பிடித்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சர்ப் பவுடரைப் போட்டேன். மீண்டும் தண்ணீரைத் திறந்து வலது கையால் வாளியிலிருந்து தண்ணீரை வேகமாக சுழற்றி சுழற்றி பவுடர் முழுவதுமாக கரைந்து நுரை பொங்கும் வரை கலக்கினேன். நேற்று பயன்படுத்திய துணிகளை நுரைபொங்கிய நீரில் அமுக்கினே். இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகிற்று. இந்த வேலையையும் குனிந்தேதான் செய்ய வேண்டும்.

மணி 6.35

குளிர் சாதனப்பெட்டியைத் திறந்து 5 பச்சை மிளகாய், 2 முருங்கைக் காய், 20 வெண்டைய்காய், 4 கேரட், ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் மல்லித்தழை  ஆகியவற்றை வெளியில் எடுத்து வைத்தேன். 4 வெங்காயம், 4 தக்காளி, 10 பல்லு பூண்டு ஆகியவற்றையும்  எடுத்து வைத்துக் கொண்டேன். அகலமான தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். பச்சை மிளகாய்களை இரண்டாக நறுக்கி பிறகு அதை பாதி அளவு குறுக்காக பிளந்து அகலமான தட்டின் ஒரு ஓரத்தில் வைத்தேன். பூண்டை லேசாகத்தட்டி அதன் தோலை உறித்து எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக்கினே். வெங்காயத்தை இரண்டாகப் பிளந்து மேல் தோலை நீக்கி அதன் பிறகு நீள்வாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தேன்.  ஒரு சிறு கத்தியைக் கொண்டு இஞ்சியின் தோலை நீக்கி பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மத்தைக் கொண்டு மேலும் அதை நசுக்கி வைத்தேன். தக்காளியைக் கழுவி நெடுக்குவாட்டில் ஒவ்வொன்றையும் எட்டுத் துண்டுகளாக்கி வைத்தேன். முருங்கைக்காயை சிறு துண்டுகளாக்கினேன். வெண்டைக்காயை நன்றாகக் கழுவி காம்மையும் நுனியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு மற்றதை இரண்டு துண்டுகளாக்கினேன்.

அறுவா மனையின் அடிப்பகுதி இரும்புத் தகட்டினால் ஆனது. தொடர் பயன்பாட்டின் காரணமாக அடிப்பகுதி இத்துப் போனதால் காய்கறிகளை நறுக்கும் போது சற்றே ஆட்டம் கண்டது. இந்த ஆட்டத்தோடுதான் காய்கறிகளை நறுக்கினேன். கொஞ்சம் அவசரப்பட்டாலும் காய்கறி உண்ட பிறகு நம் உடலில் ஊறும் ரத்தத்தை இப்பொழுதே காய்கறிகள் எடுத்துக் கொள்ள நெரிடும். காய்கறி நறுக்கும் போது எச்சரிக்கை மிக மிக அவசியம்.

கேரட்டை நன்றாகக் கழுவி ஒரு கத்தியால் அடிப்பகுதியையும் நுனிப்பகுதியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு கேரட்டின் மேல் தோலை லேசாக சீவி எடுத்தேன். மேல் தோலை லேசாக நீக்கினால் கேரட் வீணாவதை குறைக்க முடியும். இதற்கு அனுபவம் தேவை. இல்லையேல் கத்தி கையைப் பதம் பார்த்தவிடும். அகலமான தட்டு ஒன்றை எடுத்து கேரட் துறுவியை அதன் நடுவில் வைத்து இடது கையால் அதன் கைப்பிடியை பிடித்து அழுத்திக்கொண்டு வலது கையின் கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஒத்துழைப்புடன் மேலிருந்து கீழ்நோக்கி அழுத்தித் தேய்த்து ஒவ்வொரு கேரட்டையும் லேசான நீள் துண்டுகளாக துருவிக் கொண்டேன். கேரட்டின் கடைசித் துண்டை துருவும் போது கவனம் சிதறினால் விரல் நுனி சதையையும் சேர்த்து கூட்டு செய்ய நேரிடும்.

மணி 6.45

அரை மணி நேரம் அரிசி ஊறிவிட்டது. ரைஸ் குக்கரை எடுத்து பிளக்கைச் சொறுகினேன். அரிசியை இரண்டு முறை நன்றாக அலசி பின் குக்கருக்குரிய பாத்திரத்தில் கொட்டி அரிசியின் அளவைப் போல மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை அதற்குரிய மூடியால் மூடி மெயின் சுவிட்சைப் போட்டு அதன் பிறகு ரைஸ் குக்கரின் சுவிட்சை கீழ்பக்கம் அழுத்தினேன். சிவப்பு லைட் எறியத் தொடங்கியது.

5 லிட்டர் குக்கரை நன்றாகக் கழுவி கேஸ் அடுப்பின் இடதுபுற பர்னரில்  வைத்து ஒரு 300 மில்லி அளவு தண்ணீரை ஊற்றினேன். ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீரால் அலசிக் கழுவி குக்கரில் போட்டேன். இரண்டு உருளைக்கிழங்குகளை நன்றாகக் கழுவி ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் நான்கு துண்டுகளாக்கி அவற்றையும் குக்கரில் போட்டு குக்கரை மூடினேன். பர்னரைப் பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் உஸ் என நீராவி வெளியேறிபோது குக்கர் குண்டைப் போட்டு மூடினேன்.

தொடரும்....

No comments:

Post a Comment