Saturday, June 14, 2014

பெண் என்ன செய்தாள்? …………தொடர்-3


75 வயதான எனது தாய்க்கு கண்புரை அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்கள்தான் ஆகி இருந்தன. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணில் சொட்டு மருந்து விட வேண்டும். கண் இமையை ஆட்காட்டி விரலால் கீழாக அழுத்தி மேலே பார்க்கச் சொல்லி சொட்டு மருந்தை விட வேண்டும். ஒரு மாத காலத்திற்கு சமையல் வேலைகள் செய்வது மற்றும் கண்ணில் தூசு படும்படியான வேலைகளை செய்வது கண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரை பராமரிக்க வேண்டி நானே சமைக்கிற வேலைகளை மேற்கொண்டேன்.

விவசாய வேலை காரணமாக கிராமத்தில் வசிக்கும் எனது சகோதரிகளும் தாயை கவனித்துக்கொள்ள வர முடியவில்லை. அப்படியே வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் அவர்களால் தொடர்ச்சியாக இருக்கவும் முடியாது. நகர்ப்புற ஆண்களுக்கு ஓரளவுக்காவது சமைக்கத் தெரியும். சமைக்கத் தெரியவில்லை என்றாலும் ஹோட்டல்களை நாடிக் கொள்ளலாம். ஆனால் கிராமப்புற ஆண்கள் மனைவியின் சமையலைத்தான் நம்பி ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. அதனால் கிராமப்புற பெண்கள் வெளியூர் சென்றாலும் உடனே ஊர் திரும்பிவிட வேண்டும்.

உறவினர்களின் அடுத்தடுத்த திருமணங்களில் பங்கேற்க எனது துணைவியாரும் வெளியூருக்குச் சென்று திரும்ப முடியாத சூழ்நிலை. எனவே  நான்தான் எனது தாயை பராமரித்தாக வேண்டும். ஏற்கனவே நான் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போதெல்லாம் உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்லாமல் எனக்கான உணவை நானே சமைக்க முற்பட்டதால் ஓரளவுக்கு சமைக்கத் தெரியும்.

முதல் ஒரு சில நாட்களில் பெரும்பாலும் தயிர் சோறு மட்டுமே. இல்லை என்றால் எலுமிச்சை அல்லது தக்காளி சோறு மட்டுமே. தொட்டுக்க மாம்பழம் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கேரட், கீரை உள்ளிட்ட காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள அறிவுருத்தி மருத்துவ மனையிலிருந்து ஒரு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள். எனவே கொஞ்சம் சத்தான உணவையும் சேர்ப்போமே என்பதால்தான் இன்று சோறு, பொரியல், கூட்டு, சாம்பார் என கூடுதலாக சமைக்க முயன்றேன்.

மீண்டும் மாலையில் தேனீர் தயாரித்தல், பிறகு சமையல், பாத்திரங்களைக் கழுவுதல் என அதே பாணியிலான வேலைகள் தொடர்ந்தன. இப்படி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களை சமாளித்துள்ளேன்.

இத்தகைய வேலைகளினூடாக மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை எனது கைகளை நன்றாகக் கழுவிக் கொண்டு தாயின் கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டு வந்தேன். இதற்காக நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து செல்வேன். நான் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு கண்ணுக்கு மருந்து போடுவதையும் பார்த்த எனது தாய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை? அவர்களாகவே சொட்டு மருந்து போட முயற்சி செய்து பிறகு பழகிக் கொண்டார்கள். நெருக்கடிகள் வரும் போது முடியாத வேலைகளைக்கூட முயன்றால் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு கண்கூடான உதாரணம்.

இன்றைய சமையலின் போது காலையில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 2 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்திருக்கிறேன். சமையல் வெறும் உடல் உழைப்பு கோரும் வேலை மட்டுமல்ல; அதிக நுணுக்கத்தையும், அதே வேளையில் பொருமையையும் கோரும் வேலை என்பதை உணர முடிந்தது. கொஞ்சம் கவனம் சிதறினால்கூட வெண்டைக்காய் பொரியலுக்கு ஏற்பட்ட கதிதான் மற்றதற்கும் ஏற்படும். பிறகு மீண்டும் ஒரு முறை புதிதாக சமைக்க நேரிடும்.

சமையல் வேலை மட்டுமல்ல, துணி துவைப்பது, வீடு - வாசலைப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது என ஒரு பெண்ணுக்கான வேலை முடிவற்றதாய் அன்றாடம் தனது வாழ்நாள் முழுதும் தொடர்கிறது.

வெளியில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் கணவனின் களைப்பைப் போக்க மனைவி உதவுகிறாள்; ஆனால் வீட்டிலேயே உழைத்து ஓய்ந்து போகும் மனைவியின் களைப்பை அவளாகவே போக்கிக் கொள்ள முயல்கிறாள். இதுதான் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களில் பெண்களின் நிலை.

வீட்டு வேலைகளை மட்டுமே செய்கின்ற பெண்களுக்கே இத்தகைய சுமை என்றால் கணவன்-மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். கணவன்-மனைவி இருவருமே கூலி வேலைக்கோ அல்லது வயல் வேலைக்கோ அல்லது அலுவலக வேலைக்கோ செல்லும் குடும்பங்களில் காலை உணவையும் பகல் உணவையும் காலையில் மனைவிதான் சமைக்க வேண்டும். முடியாத சூழலில் பழையதை வைத்து பகல் பொழுது வரை சமாளித்து விடுவார்கள்.

வேலை முடிந்து இருவரும் மாலையில் வீடு திரும்பிய பிறகு கணவன் ஓய்வெடுக்கவோ அல்லது பொழுது போக்கவே சென்று விடுவான். ஆனால் மனைவியானவள் சமையல் வேலை செய்தாக வேண்டும். எட்டு மணி நேர வேலைக்குப் பிறகு எந்திரங்களுக்குக்கூட ஓய்வு தருகிறார்கள். வாராந்திர – மாதாந்திர பராமறிப்பின் போதும் ஓய்வு தருகிறார்கள். ஆனால் பெண்ணுக்கான ஓய்வோ மரணத்தோடு சேர்ந்தே வருகிறது.

அன்றாடம் உழைக்கும் இத்தகையப் பெண்களை மனையாள் என்றார்கள். பிறகுஹவுஸ் ஒய்ஃப்என ஆங்கிலத்தில் கௌரவமாகச் சொன்னார்கள். அதையே இப்பொழுதுஹோம் மேக்கர்என மெருகேற்றிச் சொல்கிறார்கள். பட்டங்கள்தான் மாறினவே ஒழிய பெண்ணானவள் வீட்டில் சும்மா இருப்பவள் என்கிற கருத்து மட்டும் இன்னமும் நீடிக்கிறது என்பதே உண்மை.

மேட்டுக் குடி பணக்காரக் குடும்பங்களில் சமைப்பதற்கும், வீட்டு வேலைகளுக்கும் சம்பளத்திற்கு ஆட்களை வைத்துக் கொள்வதால் அக்குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மேற்கண்ட சுமை எதுவும் இருப்பதில்லை; அதனால் அந்தச் சுமையின் வலியை அவர்கள் உணர்வதற்கே வாய்ப்பில்லை.

ஆண்கள் செய்யும் வேலைகளை பெண்கள் செய்யும் போது மட்டுமே பெண்ணுக்கு பெருமை சேர்க்கின்றனர். இதற்கு கிரண் பேடிகளையும், கல்பனா சாவ்லாவையும் உதாரணம் காட்டுகின்றனர். ஆனால் ஆண்களால் செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத வேலைகளை பெண்கள் அன்றாடம் செய்தாலும் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

நடைபாதைக் கடை முதல் நட்சத்திர விடுதிகள் வரை ஆண்கள்தானே சமைக்கிறார்கள்; அதுவும் சுவையோடு சமைக்கிறார்களே! ஆண்களும் சமையலின் சுமையை உணரத்தானே செய்கிறார்கள் என்று பேசுவோரும் உண்டு. தொழில் ரீதியான இத்தகைய ஆண்களின் சமையல் அனுபவத்தை பெண்களின் குடும்பச் சுமையோடு ஒப்பிடவே முடியாது. இரண்டும் தன்மையில் வேறு வேறானவை.
  
பெண்கள் பற்றிய வரலாறோ வேறுவிதமாக இருக்கிறது. ஆண்கள் செய்யும் வேலைகள் மட்டுமல்ல ஆண்களால் செய்ய முடியாத வேலைகளில் பெண்களே முன்னிலை வகித்துள்ளனர்; வகிக்கின்றனர். இதை ஆண்களால் ஒருக்காலும் ஈடு செய்யவே முடியாது.

மானிடர்களின் காலம் தொடங்கியது தொட்டு, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான சமுதாயத்திலும் எல்லா இடங்களிலும் எப்போதும் பெண்கள் இடைவிடாது தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளனர்இப்படித் தொடங்குகிறது ரோஸலிண்ட் மைல்ஸ் அவர்களின்பெண் என்ன செய்தாள்?”  என்கிற சிறு நூல்.

வரலாற்றில் எல்லா இடங்களிலும் பெண்கள் தமது குழந்தைகளைப் பராமரித்தனர். கால் நடைகளில் பால் கறந்தனர், வயல்களில் உழவு வேலை செய்தனர், துணிகளை வெளுத்தனர், ரொட்டி சுட்டனர், வீட்டைச் சுத்தம் செய்தனர், துணிகளைத் தைத்தனர், நோயுற்றவர்களைப் பராமரித்தனர், மரணப்படுக்கையிலிருந்தவர்களின் அருகில் அமர்ந்து கண்ணீர் வடித்தனர், இறந்தவர்களைப் புதைத்தனர்; பெண்களின் இந்த அரும் பணிகள் இன்றும் உலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன” 

பெண்களின் பணிகள் நின்று போனால் அடுப்பங்கரை மட்டுமல்ல இந்த அகிலமும் சேர்ந்தே இருண்டு போகும்.
  
முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:
பெண் என்ன செய்தாள்? …………தொடர்-2
பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1

 விலை ரூ.25
வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்

No comments:

Post a Comment