Monday, June 9, 2014

பெண் என்ன செய்தாள்? …………தொடர்-2



மணி 6.50

கொஞ்சம் புளியை எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு புளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தேன். கேஸ் அடுப்பின் வலப்புற பர்னரை பற்ற வைத்து சிறு வானலி ஒன்றை வைத்து கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றினேன். எண்ணெய் சூடானதும் கொஞ்சம் உருட்டு உளுந்தைப் போட்டேன். பர்னரை சிம்மில் வைத்தேன். கொஞ்சம் கடுகைப் போட்டேன். கடுகு பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருந்த பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டேன். அதன்பிறகு தக்காளியை சேர்த்து தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்தேன். பிறகு வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக புரட்டிக் கிளறினேன். வெண்டைக்காயில் லேசாகத் தண்ணீர் விட்டு பர்னரை முழுமையாகத் திறந்து பாத்திரத்தை ஒரு மூடியால் மூடினேன். வெண்டைய்க்காய் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

குக்கரில் நீராவி உஸ்ஸ்ஸ்….. என விசில் சப்தத்துடன் வெளியேறியது. அவ்வாறு மூன்று முறை வெளியேறிய பிறகு குக்கரை இறக்கிவிட்டு அந்த அடுப்பில் மற்றொரு சிறு வாணலியை வைத்தேன். நல்லெண்ணெய் ஊற்றி வெண்டைய்க்காய் பொரியல் செய்வதற்குப் போட்ட அதே பொருட்களை வானலியில் போட்டு அவை வதங்கியவுடன் துருவிய கேரட்டைப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடினேன். குக்கரைத் திறந்து உருளைக் கிழங்கு துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து அதன் தோலை மட்டும் நீக்கினேன். உருளைக் கிழங்கு மிகவும் சூடாக இருந்ததால் கைச்சூட்டைத் தணிக்க அடிக்கடி குளிர்ந்த நீரில் கையை நனைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கொப்புளம் வருவதை தவிர்க்க முடியாது. உருளைனக் கிழங்கை நன்றாக மேலும் சிறு துண்டுகளாக்கி வெந்து கொண்டிருந்த கேரட்டுடன் சேர்த்து நன்றாகக் கிளறினேன்.

கேரட் கூட்டு செய்து கொண்டிருந்த போதே வலப்புற அடுப்பில் சட்டி தீயும் வாடை வந்தது. மூடி இருந்த தட்டை எடுத்துப் பார்த்த போது வெண்டைய்க்காய் பொரியல் சற்றே தீய்ந்து போயிருந்தது. இனி வெண்டைய்க்காய் தேறுமா என எண்ணிக் கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைய்க்காய் பொறியலை இறக்கி வைத்தேன். மல்லித்தழையை சிறுதுண்டுகளாக்கி கேரட் கூட்டு மற்றும் வெண்டைய்க்காய் பொரிலில் தூவினேன்.

மணி 7.00

கேஸ் அடுப்பின் பர்னரை மீண்டும் பற்றவைத்து சாம்பார் வைப்பதற்குரிய பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெயை அதில் ஊற்றினேன். எண்ணெய் சூடானவுடன் நறுக்கிவைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கினேன். பிறகு முருங்கைக்காய்த் துண்டுகளையும் போட்டு கிளறினேன். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாயத் தூள், உப்பு சோ்த்தேன். துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்திருந்ததால் அதைக்கடைய வேண்டிய அவசியம் இல்லாததால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வெந்து கொண்டிருந்த முருங்கைக்காயுடன் சேர்த்தேன். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடிவைத்தேன். இதற்குள் புளி நன்றாக ஊறி இருந்தது. அதை நன்றாகப் பிசைந்து புளிச்சாற்றை கையாலேயே வடிகட்டினேன். இதற்குள் முருங்கைக்காய் சாம்பார் கொதிக்கத் தொடங்கியது. அதனுடன் புளிச்சாற்றைக் கலந்து கரண்டியால் நன்றாகக் கலக்கி மீண்டும் மூடிவைத்தேன்.

காலை 7.10

தெருவில் பால்காரர் வருகிறார் என்பதை அவரது டி.வி.எஸ். ஃபிப்டியின் ஹாரன் சப்தம் உணர்த்தியது. பால் குக்கரை ஏற்கனவே கழுவி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அலசி எடுத்துக் காண்டு படி இறங்கி தெருவுக்குச் சென்றேன். அதற்குள் பால்காரர் தெருவின் மறுமுனையில் உள்ளவர்களுக்கு பால் ஊற்றிவிட்டு எங்களது வீட்டிற்கு முன்பாக வந்து நின்றார். 700 மில்லி பால் வாங்கிக் கொண்டு அட்டையிலும் அதைப்பதிந்து கொண்டு மீண்டும் சமையலறைக்கு வந்தேன்.

இதற்குள் சாம்பார் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு கரண்டியால் சிறிதளவு சாம்பாரை எடுத்து இடது உள்ளங்கையில் ஊற்றி உப்பு சுவை பார்த்தேன் உப்பு சற்றே குறைவாக இருந்ததால் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினேன். மீண்டும் சுவை பார்த்தேன். கொதிக்கும் போதே உப்பு சேர்த்தால்தான் முருங்கைக் காயிலும் உப்பு ஊறி சாப்பிடும் போது சுவையாக இருக்கும். பிறகு சேர்த்தால் அந்த அளவிற்கு சுவை இருக்காது. மற்றொரு பர்னரை பற்ற வைத்து தாளிப்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சிறிது கடுகு, கொஞ்சம், கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த குண்டு மிளகாய்களைப் போட்டு லேசாக ஆட்டி அது பொறிந்தவுடன் சாம்பாரில் கலந்து மூடிவைத்தேன். இப்பொழுது சாம்பார் தயாராகிவிட்டது. சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு பால் குக்கரை அடுப்பில் வைத்தேன்.

இபபொழுது ரைஸ்குக்கரில் சோறும் நன்றாக வெந்திருந்ததால் ரைஸ் குக்கரின் சுவிட்ச் மஞ்சள் லைட்டுக்கு மாறி இருந்தது.

சமையல் தயாரிக்கப் பயன்படுத்திய அறுவாமனை, கேரட் துருவி, தட்டு, கிண்ணம் இவைகளை விம்-சபீனா பவுடர் பயன்படுத்தி நன்றாகக் கழுவி கவிழ்த்து வைத்தேன். ரைஸ் குக்கரிலிருந்து சோறு உள்ள பாத்திரத்தை தனியாக எடுத்து வைத்தேன். ரைஸ்குக்கர் அடுப்பை அதற்குரிய இடத்தில் பாதுகாப்பாக எடுத்து வைத்தேன்.

காலை 7.30 மணி

இப்பொழுது சமையலறையில் பால் மட்டுமே சூடாகிக் கொண்டிருந்தது. கோல்கேட் பிரஷில் பெப்சோடண்ட் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றேன். சர்ப் பவுடரில் ஊறவைத்திருந்த துணிகளை வாளியிலிருந்து எடுத்து மேலும் அரசன் சோப்பைப் போட்டு துணி பிரஷால் தேய்த்து நன்றாகக் கும்மினேன். அவ்வாறு கும்மும் போது ஒரு மக்கைக் கொண்டு தண்ணீரால் அலம்பிக்கொண்டே கும்மினேன். இவ்வாறு செய்யும் போது சோப்பு மற்றும் சர்ப் பவுடரின் நுரை பெரும்பாலும் வெளியேறிவிடும். பிறகு அலசுவதற்கு சுலபமாகவும் இருக்கும்; தண்ணீரும் சற்று குறைவாக செலவாகும். பிறகு துணிகளை நன்றாக அலசிய பிறகு துணிகளை இரண்டு கைகளாலும் பிழிந்து எடுத்தேன். வாளியில் தண்ணீர் நிரப்பி பல்துலக்கி குளித்து முடித்து உடலைத் துவட்டி உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் பால் சூடாகி விசில் சப்தம் வந்தது. பால் வைத்திருந்த அடுப்பை அணைத்துவிட்டு வராண்டாவில் உள்ள கயிற்றில் துணிகளைக் காயப் போட்டேன் காற்றடித்தால் பறக்காமல் இருக்க மறக்காமல் கிளிப்புகளையும் போட்டேன்.

காலை 7.50.

200 மில்லி அளவுக்கு சூடான பாலை எடுத்து ஃபேன் காற்றில் ஆறவைத்தேன். இப்பொழுது காலை உணவை சுவைக்க வேண்டிய நேரம். இரண்டு கரண்டி சோற்றை சாப்பாட்டுத் தட்டில் போட்டு சொஞ்சம் வெண்டைய்க்காய் பொரியல் மற்றும் கேரட் கூட்டு ஆகியவற்றை தட்டின் ஒரு ஓரமாக தனித் தனியாக வைத்துக் கொண்டு சோற்றில் இரண்டு கரண்டி சாம்பாரை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்து காலை உணவை சுவைத்தேன். வெண்டைய்க்காய் தீய்ந்து போயிருந்தது. மற்றவைகளின் சுவை சாப்பிடும்படியாக இருந்ததால் திருப்தியொடு காலை உணவை முடித்தேன். அதற்குள் பாலும் ஆறி இருந்தது. பாலுக்கு புறை ஊற்றி மூடிவைத்துவிட்டு “அம்மா! வெண்டைய்க்காய் பொரியல் மட்டும் கொஞ்சம் தீய்ந்து போச்சு, மற்றதெல்லாம் பரவாயில்லை. காலையிலும் மத்தியானமும் சாப்பிட்டுக்குங்க. தயிரும் இருக்கு போட்டுக்க!” எனக் கூறிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு அலுவலக உடைக்கு மாறி தலைவாரிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் காலை 8.00 மணிக்கு அலுவலகம் நோக்கி விரைந்தேன்.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



No comments:

Post a Comment