முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் உள்ள பிணக்கு தீர்ந்த பாடில்லை.
காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான சச்சரவு முடிவுக்கு வந்தபாடில்லை.
பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்ட முயற்சிப்பதால் தமிழ்நாட்டிற்கும் ஆந்திரத்திற்குமிடையே பிரச்சனை.
நதி நீர்ப் பங்கீட்டில் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பிரச்சனை.
பிழைப்பு தேடி வட இந்தியர்கள் தமிழகம் நோக்கி படை எடுப்பதால் தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்குமிடையே பிரச்சனை.
வட இந்தியாவிலேயே பிகாரிகளுக்கும் மராட்டியர்களுக்குமிடையே பிரச்சனை.
காசுமீரத்துக்கும் இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.
வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.
இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமிடையெ பிரச்சனை.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற உயர் சாதிக்காரர்களுக்குமிடையே பிரச்சனை.
பார்ப்பனர்களுக்கும் பிற சாதிக்கார்களுக்குமிடையே பிரச்சனை.
இப்படி திரும்பும் இடமெல்லாம் இந்தியவெங்கும் பிரச்சனை! பிரச்சனை!!
இப்பொழுது காங்கிரசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிட்டது. இனி யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக தமிழர்கள் காவிரி பிரச்சனை குறித்தோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ அல்லது பாலாறு பிரச்சனை பற்றியோ கவலைப்பட வேண்டாம் என சங்பரிவாரத்தலைவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தமிழக மக்கள் தங்களுடைய பிள்ளைகளை மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாமல் தங்களின் பிள்ளைகளை "அம்மா” வழங்கிய விலையில்லா ஆடு-மாடுகளை மேய்க்க அனுப்பி வைத்தாலே போதும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றாலும் பாண்டவர்கள் வனவாசத்தில் வாசம் செய்ததைப்போல இந்தப் பிள்ளைகளும் ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டே வனத்திலேயே வாசம் செய்து சுதந்திரமாய் சஞ்சரிக்கலாம். வனத்தில் கிடைக்கும்
கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழலாம்.
அதே நேரத்தில் மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் இடம் கிடைத்த பிள்ளைகளோ ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் சமசுகிருத வாரக் கொண்டாட்டங்களில் பங்கேற்று தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுவார்கள். தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிற அதே வேளையில் அவர்கள் சமசுகிருதத்தில் புலமையும் பெறுவார்கள். இப்படி அவர்கள் சமசுகிருதத்தில் புலமை பெற்றுவிட்டால் தேசிய ஒருமைப்பாடு பற்றிய உணர்வு அவர்களின் குருதியில் ஊறிவிடும்.
தேசிய ஒருமைப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஒன்று மட்டுமே இந்தியாவைப் பீடித்திருக்கும் நதிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க வழிவகுக்கும். மற்றபடி இந்தப் பிரச்சகைளைத் தீர்க்க வேறு குறுக்கு வழிகள்
கிடையாது.
அப்பொழுது நாடு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். அதன்பிறகு காடுகளுக்குச் சென்று வனவாசம் மேற்கொண்ட பிற பிள்ளைகள் ஊருக்குத் திரும்பி அமைதியான முறையில் தங்கள் மாடுகளை சமவெளிப் பிரதேசங்களில் மேய்த்துக் கொள்ளலாம். அம்மா கொடுத்த மாடுகள் எல்லாம் கோமாதாக்களாக அவதாரமெடுத்திருக்கும்.
கன்றுக்கு இல்லை என்றாலும் கோமாதாக்களின் பாலை ஒட்டக் கறந்து மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் கோமாதாக்களின் பாலைக் குடித்து தயிரும் நெய்யும் உண்டு கொழுகொழுவென வளர்வார்கள். அவர்களின் உடலும் வனப்பு பெறும்; மூளையும் விருத்தியடையும். இறுதியில் அவர்களின் அறிவுக்கூர்மையாலும் பிறரை எளிதாகக் கையாளும் ஆற்றலாலும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு அனைத்து
பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பிறகு வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறும். அப்பொழுது
இந்தியா வல்லரசாவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
பாண்டவர்களைப் போல பதின்மூன்று ஆண்டு காலத்திற்குள் முடிந்து விடுவதற்கு இது ஒன்றும் கிரேதா யுகம் அல்ல. இது கலியுகம். நூற்றுமுப்பது ஆண்டுகள்கூட ஆகலாம். பொருத்தவன்தானே பூமி ஆள்வான். என்ன அவசரம்! பொருத்திருப்போம். கிரேதா யுகம் நிச்சயம் வரும். இந்தியாவும்
வல்லரசாகும்.
தொடர்புடைய பதிவுகள்:
arumai
ReplyDeleteநன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteநன்றி!
ReplyDelete