Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, May 23, 2023

அன்று "அம்மா"! இன்று "ஆவின்"!

இராட்டிணக் கிணறுகளை
ஆழ்துளைக் கிணறுகள் விழுங்கி
ஆண்டுகள் உருண்டோடின.
தாமரை தவழ்ந்த குளங்களெல்லாம்
கர்நாடகா போல என்றோ
தரைமட்டமாகின.

தெளிந்த நீர் ஓடைகளையும் 
தெவிட்டாத ஆற்று ஊற்றுகளையும்
கழிவுகள் கபளீகரம் செய்ததால்
காகங்கள் கூட கரைகின்றன-
நன்னீருக்காக!
ஏரிகளிலும் சாக்கடைகள் சங்கமிப்பதால்
பயிர்களுக்கே பங்கம் வந்துவிட்டன.

தாகம் என்று கதவைத் தட்டினால்
தெரிந்தவர் என்றால் செம்பு நிறைய
தெரியாதவர் என்றால் 'கைகள்' நனைய
தாகம் தீர்த்தக் காலம் ஒன்றிருந்தது!
இன்று,
ஆர்.ஓ-கேன் எல்லாமே காசு ஆன பிறகு! 
யார்தான் தருவர் சும்மா?

அதனால்தானே, 
பயணம் என்றால் பாட்டிலோடு
பயணிக்கிறோம்!
பாதி பயணத்தில் தீர்ந்து போனால் 
புது பாட்டிலைத் தேடுகிறோம்!

நாம் நாவை நனைக்கும் வேளையில்
சிற்றூர்களில் சிறு முதலாளிகளும்
பெருநகரங்களில் கார்ப்பரேட் முதலாளிகளும்
பண மழையில் நனைகின்றனர்.

ஆசை யாரைத்தான் விட்டது?
ஜார்ஜ் கோட்டைகள் 
என்றோ விழித்துக் கொண்டன.
அன்று "அம்மா"
இன்று "ஆவின்" 
எதுவாயினும் ஏற்புடையதல்ல!
பொது இடங்களில் - இலவசமாய் 
குடிநீர் வழங்க 
ஆவண செய்வதே 
அரசின் கடமை!

ஆனால்,
"அம்மா" குடிநீர் இருந்தபோது 
வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள்
"ஆவின்" குடிநீர் வருவதைக் கண்டு
ஆர்ப்பரிப்பரிக்கின்றனர் - சிலர்
அரசியல் ஆதாயம் தேட!

ஊரான்





Tuesday, March 17, 2015

காந்திக்கு அரோகரா! அரை டிரவுசர்களால் ‘லோல்படும்’ இந்தியா! - 3

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலோ போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முந்தைய தொடர்ச்சி... 

54. துரியோதனின் தம்பிகள் பிறந்தது ஸ்டெம் தெராபி தொழில் நுட்பத்தால் – நோபல் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்திருந்தால் ஸ்டெம் தெராபி விஞ்ஞானியையாவது படித்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டோமே!

55. விநாயகர் - ஆண் உடலையும் யானைத் தலையையும் இணைத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிறந்தவராம்: இங்கேயும் ஒரு விஞ்ஞானியை மிஸ் பண்ணிட்டோமே!

56. இராமாயணத்தில் புட்பக விமானம் ஓடியதாம் – ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தியவன் எவனோ! அவனை அடையாளம் காட்டினால் புண்ணியமாகப் போகும். என் ‘அப்பாச்சி’க்கு ஒரு நட்டு தேவைப்படுது!

57. இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்: அப்பதானே சீமந்தமும், தொட்டிலாட்டுதலும், பெயர் குறித்து சூட்டுதலும், கல்யாணம் பண்ணவும், கருமாதி பண்ணவும், இன்ன பிற இத்தியாதி இத்தியாதி சடங்குகள் பெருகும். தட்டில் தட்சணைகள் கூடுமல்லவா!

58. நிர்பயா பற்றிய ஆவணப் படத்திற்குத் தடை – துரௌபதையை துகிலுரித்துக் கொண்டே அவளுக்கு கோவில் கட்டிய கதையாகவல்லவா இருக்கு! கௌரவமான துரியாதனர்களை அறியாதவர் உண்டோ!

59. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன் மற்றும் புலியூர் முருகேசன் மீது தாக்குதல் - சாதிப்பெருமை காத்தால்தானே இந்துப் பெருமையை காக்க முடியும்.

60. தாலி வேண்டுமா? வேண்டாமா? விவாதம்: புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்,  தாலி பற்றிய விவாதத்தை நடத்தக்கூடாது என இந்து மக்கள் கட்சியினர் மிரட்டல்  மற்றும் அலுவலகத்தின் மீது இந்து இளைஞர் சேனாவினர் குண்டு வீசித் தாக்குதல். தாலி போனால் அவன் சோலியோ காலி. சும்மா இருப்பானா?

61. மகாராஷ்டிரா அரசு மாட்டிறைச்சிக்குத் தடை. அரியானாவிலும் இதே தடை. அவன் ஐந்து ஆண்டு சிறை என்றான். இவனோ மாட்டைக் கொல்வது கொலைக்குற்றம் என்கிறான். சிறையோ பத்தாண்டுகள் என்கிறான். மவனே! மாடு வளர்த்தே, உன் கதி அதோ கதிதான். தானா செத்தாலும் காக்கத் தவறிய குற்றத்திற்காக உன் மீது 302. (அதனால்தான் அம்மா ஆடு கொடுக்குறாங்களோ! என்னே கரிசனம் உன்னைக் காக்க! என்ன இருந்தாலும் அம்மா அம்மா தாண்டா!) ஆனால் தப்பிக்க ஒரே வழிதான் உண்டு மகனே! அதுதான் பிராயச்சித்தம் என்கிற பரிகாரம். பழைமையான சாஸ்திர விதிப்படி மந்திரஞ்சொல்லி பசு கொல்லப்பட்டிருந்தால் அதை புசிக்கலாம்; யாகத்திற்காக கொல்லப்பட்ட பசுக்கள் உயர்ந்த நிலையை அடைவதால் யாகம்  செய்து பசுவைக் கொன்றால் அது கொலை ஆகாது; (மனு: 5-36, 39, 40). என்ன! யாகம் செய்ய அய்யரைத் தேடனும். நாள் குறிக்கோனும். மந்திரம் சொல்லி யாகம் வளர்க்க கொஞ்சம் வராகன் செலவாகும். அவ்வளவுதான்.

62. மாட்டிறைச்சிக்கான தடையை இந்தியா முழுதும் அமுல்படுத்த மாநில அரசுகளுக்கு மிரட்டல். இனி மான்கறி கிடைத்தாலும் கிடைக்கலாம்; ஆனால் மாட்டுக்கறிக்கு வாய்ப்பே கிடையாது. எச்சரிக்கை: மாட்டுக்கு வயதாகி மண்டையைப் போட்டாலோ அல்லது நோயினால் மண்டையைப் போட்டாலோ மறவாமல் ‘டெத் சர்டிபிகேட்டை’ வாங்க மறவாதீர்கள். என்ன செய்ய? ‘டெத் சர்டிபிகேட்டுக்கு’ கொஞ்சம் செலவாகும்தான். இல்லை என்றால் கம்பி எண்ண வேண்டி வரும்!

63. மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை. வெறும் கட்டடம். எப்பொழுது வேண்டுமானாலும் இடிக்கலாம் - சு.சாமி, பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர்.

64. பிப்ரவரி 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது நான்கு கிருஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்.

65. அரியாணா மாநிலம் கைம்ரி கிராமத்தில் மார்ச் 14, 2015 ல் கிருஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல். 

66.இப்போதைக்கு கடைசிச் செய்தி: கோவா அரசின் விடுமுறை பொதுப்பட்டியலில் காந்தி ஜெயந்தி இடம் பெறவில்லை. தட்டச்சேற்றும் போது தவறிவிட்டதாக இப்பொழுது தாஜா பண்ணினாலும் இது ஒரு முன்னோட்டமே! காந்திக்கு அரோகரா!

பத்து மாத கால முன்னோட்டமே இப்படி எனில் இனி வரும் 50 மாத காலமும் இதே நிலை தொடருமேயானால் மேலை நாட்டுக்காரன் செவ்வாயில் குடியிருப்பான். நாமோ நாமக்கட்டிகளிடம் நாண்டுக்கிட்டு கிடப்போம்!

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Saturday, March 14, 2015

அரை டிரவுசர்களால் 'லோல்'படும் இந்தியா! - 1

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலே போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
  1. காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தன்
  2. கோட்சேவுக்கு கோவில்
  3. காந்தியைக் கொன்ற டிசம்பர் 30 ல் கோட்சேவின் திரைப்படம் வெளியீடு
  4. காந்தி பிறந்த நாளில் குப்பை கூட்டுதல் – காந்தியைப் பெருமைப்படுத்தவா?
  5. இந்தியாவை இராமணின் பிள்ளைகள் ஆள வேண்டுமா? இல்லை முறைகேடாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா?
  6. பகவத் கீதை தேசிய நூலாக்கப்படும் – பிறப்பால் ஏற்றத்தாழ்வை பாதுகாக்கவா?
  7. அடுத்த கல்வி ஆண்டு (2015-16) முதல் 5ம் வகுப்பிலிருந்து பகவத் கீதை – அரியானா அரசு
  8. கிருஸ்துமஸ் தினத்தில் வாஜ்வாய்க்கு பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் – பரிசுகள்: ஏசு பிறந்த நாளை மறக்கடிக்கவா?
  9. இந்திராகாந்தி பிறந்த நாளில் – கக்கூஸ் கட்டுதல்: காங்கிரசை பெருமைப்படுத்தவா?
  10. வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது – இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள்?
  11. சமஸ்கிருத வாரம் – பிணத்திற்கு உயிரூட்டும் முயற்சி – உயிரோடு இருக்கும் பிற தேசிய இன மொழிகளை புதை குழிக்கு அனுப்பவா?
  12. சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் – குருநாதனுக்கே ஆப்பு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?
  13. அரசுசார் நிறுவனங்கள்: சமூக வலைதலங்களில் இந்திப் பயன்பாடு: இந்தி மட்டும் தெரிந்தவன் ஏற்கனவே பானி பூரி விக்கிறான். மற்ற மொழிக்காரனெல்லாம் அவன் கடையில் டம்ளர் கழுவலாம்?
  14. நதிகளும், நகரங்களும் புனிதமாக்கப்படும்: புனிதம் பேசினால்தானே தட்டிலே தட்சணை விழும்.
  15. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களை  இந்து மதத்திற்கு மாற்றும் - வீடு திரும்பல் (கர்வாப்சி): அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகளையும் இந்தியாவிற்கு கர்வாப்சி செய்தால் பாரத தேஷம் ஷேமமாக இருக்கும்.
  16. மதமாற்ற தடைச்சட்டம் – குறிப்பாக இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க: விழுகின்ற தட்சணை குறையக் கூடாதல்லவா?
  17. இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான். சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது. அம்பிகளைத் தவிர வேறு யாருமே சிறுபான்மையினர் அல்ல.
  18. கச்சத் தீவு - தமிழக மீனவர் பிரச்சனை – மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என பா.ஜ.க வினர் பேச்சு – செயற்கைக் கோள் உதவியுடன் கம்ப்யூட்டரிலேயே மீன் செல்லும் பாதையைக் கண்டறிந்து சிலோன்காரன் கடலில் ஒரு கல்லை தூக்கிப் போட்டு மீன்களை இந்தப்பக்கமாக அச்சமூட்டி வரவைத்து மீன்களை அள்ளிக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
  19. காவிரி நீர் / முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு தீர்வு கேட்டால் நதிகள் தேசிய மயம் என போகாத ஊருக்கு வழி சொல்லுதல்; இல்லை எனில் மௌனம் சாதித்தல்
  20. ராஜபக்சே வெற்றி பெற மோடி வாழ்த்து – பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா!
  21. திருக்குறளுக்கு வட இந்தியாவில் விழா – வள்ளுவனையும் மனுவின் மற்றொரு அவதாரமாக்கவா?
  22. மனுதர்மத்தை நிலைநாட்டிய ராஜ ராஜ சோழனுக்கு 1000 மாவது சதய விழா:  உச்சிக் குடுமிகளை வாழவைத்தவனாயிற்றே!
  23. நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி – நிதி ஒதுக்கீடு: அமெரிக்காவுக்கு அடிவருட.
  24. கூடங்குளம் விரிவாக்கம் – அந்நியனின் அணுக் கழிவுகளை நம் தலையில் கொட்டத்தான்!
  25. அணு ஒப்பந்தம் - அமெரிக்கா நிவாரணம் தராது
  26. மீத்தேன் வாயு எடுக்க அனுமதி – கும்பகோணமே கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்த பிறகு தஞ்சையாவது! நஞ்சையாவது!
  27. அம்மா வழக்கு: மேல்முறையீடு - விரைந்து முடிக்க முனைதல்: முக்கிப் பார்த்தார்கள். பரிவாரங்களுக்கு ஸ்ரீரங்கன் கொடுத்ததோ ஆட்டுப் பீக்கைதான். ஆட்டுப் பீக்கை எப்ப விட்டையாவது. இப்போதைக்கு கோமாதாவின் கோமியமே போதும் என நினைத்ததாலோ!
தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

Saturday, August 9, 2014

கட்டமைப்பை அவன் செய்வானாம்; கால அட்டவணையை இவன் போடுவானாம்!

“பாதுகாப்புத் துறையில் 49 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு”.

இனி தளவாட உற்பத்தி பல்கிப் பெருகும். கார்கில்களும் பெருகும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் 'வீரர்கள்' உங்கள் வீட்டிலும் இருப்பார்கள்.

”தொலைத் தொடர்புத் துறையில் ஒரு இலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு”.

ஓய்வுத் தொகையை வைத்துக் கொண்டு வெங்காயம் கூட வாங்க முடியாது. இனி ‘அம்மா’ உணவகங்களிலும் ‘அண்ணா’ உணவகங்களிலும் கூட்டம் அலை மோதும். கூட்ட நெரிசலை சமாளிக்க ‘மாத்தா’ உணவகங்கள் ‘பாரத’மெங்கும் விரிவடையும்.

“காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு”.

“உஷார்! உஷார்! உயிருக்கு ஆபத்து!” என கூவிக் கொண்டே இனி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் உங்கள் வீட்டுக் கதவை தட்டப் போவது நிச்சயம்.

”இரயில்வே துறையில் கட்டமைப்புப் பணிகளில் 100 சதவீதம் நேரடி 
அந்நிய முதலீடு”.

இரயில்வேயில் கட்டமைப்பை அந்நியன் எடுத்துக் கொண்டால் எஞ்சி
இருப்பது கால அட்டவணை மட்டும்தானே. கட்டமைப்பை அவன் செய்வானாம்; காலஅட்டவணையை இவன் போடுவானாம்!

Thursday, July 17, 2014

கிரேதா யுகம் நிச்சயம் வரும்! இந்தியாவும் வல்லரசாகும்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் உள்ள பிணக்கு தீர்ந்த பாடில்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான சச்சரவு முடிவுக்கு வந்தபாடில்லை.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்ட முயற்சிப்பதால் தமிழ்நாட்டிற்கும் ஆந்திரத்திற்குமிடையே பிரச்சனை.

நதி நீர்ப் பங்கீட்டில் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பிரச்சனை.

பிழைப்பு தேடி வட இந்தியர்கள் தமிழகம் நோக்கி படை எடுப்பதால் தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்குமிடையே பிரச்சனை.

வட இந்தியாவிலேயே பிகாரிகளுக்கும் மராட்டியர்களுக்குமிடையே பிரச்சனை.

காசுமீரத்துக்கும்  இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமிடையெ பிரச்சனை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற உயர் சாதிக்காரர்களுக்குமிடையே பிரச்சனை.

பார்ப்பனர்களுக்கும் பிற சாதிக்கார்களுக்குமிடையே பிரச்சனை.

இப்படி திரும்பும் இடமெல்லாம் இந்தியவெங்கும் பிரச்சனை! பிரச்சனை!!

இப்பொழுது காங்கிரசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிட்டது. இனி யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக தமிழர்கள் காவிரி பிரச்சனை குறித்தோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ அல்லது பாலாறு பிரச்சனை பற்றியோ கவலைப்பட வேண்டாம் என சங்பரிவாரத்தலைவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் தமிழக மக்கள் தங்களுடைய பிள்ளைகளை மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாமல் தங்களின் பிள்ளைகளை "அம்மா” வழங்கிய விலையில்லா ஆடு-மாடுகளை மேய்க்க அனுப்பி வைத்தாலே போதும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றாலும் பாண்டவர்கள் வனவாசத்தில் வாசம் செய்ததைப்போல இந்தப் பிள்ளைகளும் ஆடு-மாடுகளை  மேய்த்துக் கொண்டே வனத்திலேயே வாசம் செய்து சுதந்திரமாய் சஞ்சரிக்கலாம். வனத்தில் கிடைக்கும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழலாம்.

அதே நேரத்தில் மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் இடம் கிடைத்த பிள்ளைகளோ ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் சமசுகிருத வாரக் கொண்டாட்டங்களில் பங்கேற்று தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுவார்கள்தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிற அதே வேளையில் அவர்கள் சமசுகிருதத்தில் புலமையும் பெறுவார்கள். இப்படி அவர்கள் சமசுகிருதத்தில் புலமை பெற்றுவிட்டால் தேசிய ஒருமைப்பாடு பற்றிய உணர்வு அவர்களின் குருதியில் ஊறிவிடும்

தேசிய ஒருமைப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஒன்று மட்டுமே இந்தியாவைப் பீடித்திருக்கும் நதிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க வழிவகுக்கும். மற்றபடி இந்தப் பிரச்சகைளைத் தீர்க்க வேறு குறுக்கு வழிகள் கிடையாது.

அப்பொழுது நாடு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். அதன்பிறகு காடுகளுக்குச் சென்று வனவாசம் மேற்கொண்ட பிற பிள்ளைகள் ஊருக்குத் திரும்பி அமைதியான முறையில் தங்கள் மாடுகளை சமவெளிப் பிரதேசங்களில் மேய்த்துக் கொள்ளலாம். அம்மா கொடுத்த மாடுகள் எல்லாம் கோமாதாக்களாக அவதாரமெடுத்திருக்கும்.

கன்றுக்கு இல்லை என்றாலும் கோமாதாக்களின் பாலை ஒட்டக் கறந்து மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் கோமாதாக்களின் பாலைக் குடித்து தயிரும் நெய்யும் உண்டு கொழுகொழுவென வளர்வார்கள். அவர்களின் உடலும் வனப்பு பெறும்; மூளையும் விருத்தியடையும். இறுதியில் அவர்களின் அறிவுக்கூர்மையாலும் பிறரை எளிதாகக் கையாளும் ஆற்றலாலும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பிறகு வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறும். அப்பொழுது இந்தியா வல்லரசாவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

பாண்டவர்களைப் போல பதின்மூன்று ஆண்டு காலத்திற்குள் முடிந்து விடுவதற்கு இது ஒன்றும் கிரேதா யுகம் அல்லஇது கலியுகம். நூற்றுமுப்பது ஆண்டுகள்கூட ஆகலாம். பொருத்தவன்தானே பூமி ஆள்வான். என்ன அவசரம்! பொருத்திருப்போம். கிரேதா யுகம் நிச்சயம் வரும். இந்தியாவும் வல்லரசாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!