Sunday, July 20, 2014

நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

இன்று வாரச்சந்தை. பழமும் மீனும் வாங்கி வரலாம் என காலை 11 மணிக்கு சந்தைக்குச் சென்றேன். மீன் கடை காலியாக இருந்தது. நான் அவரது வாடிக்கையாளர் என்பதால் என்னைப் பார்த்ததுமே-  

"சார்! இன்னைக்கு மீன் சரியா வரல சார்!" என்றார். 

"சரி! அடுத்த வாரம் வாங்கிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு தக்காளி வாங்கலாம் என வழக்கமாக தக்காளி வாங்குபவரிடம் சென்றேன். அவரிடம் வழக்கமாக இருப்பதைவிட சரக்கு மிகக் குறைவாக இருந்தது. தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கும் - பத்து ரூபாய்க்கும் விற்கும் போது விலை எல்லாம் கேட்பது கிடையாது. நேரே கடைக்குச் சென்று ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டு அடுத்த பொருளை வாங்க வேறு கடைக்குச் சென்று விடுவேன்.

கடந்த பதினைந்து நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருப்பதாலும், தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பதாலும் 'தக்காளி வாங்கலாமா? வேண்டாமா?' என்கிற கேள்வி வேறு என்னுள் எழுந்தவாறே இருந்தது. சந்தையில் முதல் தர தக்காளியைக் காணமுடியவில்லை. நான் வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடமும் இரண்டாம் தர தக்காளிதான் இருந்தது. 

விலை கேட்டேன். "கிலோ 50 ரூபாய்" என்றார். வாங்குவதற்கு மனம் இடம் தரவில்லை. சாி! சந்தையை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம், வேறு கடையில் 30 ரூபாய்க்கு கிடைக்கலாமில்லையா என்கிற  நப்பாசையில் வேறு சில கடைகளில் விசாரித்தேன். அங்கேயும் 50 ரூபாய்தான். மீண்டும் அவர் கடைக்கே வந்தேன். "எல்லா எடத்திலேயும் ஐம்பது ரூபாய்தான்" என்று அவர் முணு முணுத்தது சந்தையின் இரைச்சலில்கூட என் காதில் விழத்தான் செய்தது. பிறகு ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டேன். வேறு கடைகளில் வாங்காமல் இவர் கடையிலேயே வாங்கியதற்குக் காரணம் எடை குறித்த நம்பிக்கைதான்.

இலவசமாக கருவேப்பிலை - கொத்தமல்லி வாங்கிய காலம் போய், பிறகு ஒரு ரூபாயாகி,  பிறகு மேலும் இரண்டு ரூபாயாகி, அதன் பிறகு ஐந்து ரூபாயாகி, தற்போது பத்து ரூபாயாகிவிட்டது.  கொத்தமல்லி - கருவேப்பிலை - இஞ்சி - பச்சை மிளகாய் - புதினா இவை ஐந்தையும் வாங்கினால் ரூபாய் ஐம்பது காலியாகிவிடும். வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாதே. ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஐம்பது ரூபாய் காலி. அடுத்து காய்கறிகள் வாங்கலாம் என்றால் கத்தரியிலிருந்து பாகற்காய்வரை எல்லாமே கிலோ ரூபாய் நாற்பதிலிருந்து ரூபாய் எண்பது வரை. காய்கறிகளுக்காக ஒதுக்கும் வாராந்திரத் தொகையோ 200 ரூபாய்தான். இந்த இருநூறை வைத்துக் கொண்டு என்ன வாங்குவது? என்ன சமைப்பது? ஒன்றும் விளங்கவில்லை. குழப்பம்தான் மிஞ்சியது.

'ஒண்ணும் வேணாம் வா!. வீட்ல வெரமிளகாய் இருக்கு. முட்டை வாங்கிக்கலாம். அரைக்கீரை, மொளக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை, புளிச்சக்கீரை  என ஒவ்வொன்றிலும் ஒரு கட்டு வாங்கினால்கூட  கட்டு பத்து ரூபாய் என்றாலும் ஐம்பது ரூபாய்க்குள் முடிந்துவிடும். ஒரு டசன் முட்டை வாங்கினால் ஒரு ஐம்பது ரூபாய். ஒரு வாரத்தை சமாளித்துவிடலாம்!' என சென்ற வார சந்தையில் இரு பெண்மணிகள் பேசிக்கொண்டதாக எனது துணைவியார் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஏற்கனவே வீட்டில் கீரைகள் இருப்பதால் அதை வைத்தே சமாளித்துக் கொள்ளலாம் என்பதால் ஏதாவது ஒரு பழம் மட்டும் வாங்கலாம் என யோசித்து 'கொய்யா சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு நல்லது' என பலரும் சொல்வதால் அரை கிலோ கொய்யாவை வாங்கி பையில் வைப்பதற்கள் "கொய்யா வெல அதிகம். அரை கிலோ முப்பது ரூபாய்!" என்றார் கடைக்கார பெண்மணி. எடை நாணயம் கருதி இவரிடமும் நான் விலை கேட்பது கிடையாது. 

"என்ன ஏதாவது திருவிழா வருதா?" என்று கேட்டேன். 

"ஆமா! கிருத்திகை வருதே!" என்றார். கஷ்ட காலம் என்றால் 'அப்பா! முருகா!' என்பார்கள் பக்தர்கள். விக்கிற வெலவாசி கஷ்டத்துல கொய்யா வாங்கலாம் என்றால் 'இப்ப அந்த முருகனே கஷ்டத்தைக் கொடுக்கிறானே!' என எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கீரைகளை அதிகம் சாப்பிடுங்கள் உடம்புக்கு நல்லது என இனி மருத்துவர்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

9 comments:

 1. don't write this rather think and work to get more money

  ReplyDelete
 2. நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பவராக இருப்பின் நீங்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைப் பற்றி விளக்கினால் நாங்களும் அதன்படி அதிகப் பணம் சம்பாதித்து கீரையிலிருந்து மீண்டு உங்களைப் போல வாழலாமே!

  ReplyDelete
 3. மிக மிக சரி. சம்பாதிக்க முடிந்தால் சம்பாதிக்க மாட்டோமா ? என்ன ஒரு அறிவுரை சொல்கிறார். நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சரி.
  கார்த்திக் அம்மா

  ReplyDelete
 4. Replies
  1. விலைவாசி பற்றி அறியாதவராகவோ அல்லது விலைவாசியின் சுமையை உணராதவராகவோ நீங்கள் இருந்தால்தான் இப்படி கருத்து சொல்ல முடியும். வலைப்பூ பதிவர்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக "ஏம்ப்பா நீ" போன்ற சொற்பிரயோகங்கள்! .........தங்களைப் பற்றி வாசகர்களே முடிவு செய்யட்டும்.

   Delete
  2. மன்னித்துக் கொள்ளுங்கள்.

   Delete
  3. பரவாயில்லை. கருத்து மோதல்கள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் வார்த்தை மோதல்களை தவிர்க்கலாம். நன்றி!

   Delete
 5. ஊரான்,

  உங்கள் எழுத்தின் பின்னே இருக்கும் மெலிதான துயரத்தின் வலியை உணராத ஒரு அனானி போய் அதிக பணம் சம்பாதித்து கொண்டு வா என்று சொல்லியிருப்பது சக மனிதனின்வேதனைகளை புரிந்துகொள்ளாத ஒரு அகம்பாவம் பிடித்தவரின் கருத்தாகவே நான் காண்கிறேன். என்ன ஒரு மனிதாபிமானம்!

  ReplyDelete
  Replies
  1. நமது இன்ப துன்பங்களை சக மனிதர்களோடு அன்றாடம் நேரில் பகிர்கிற அதே வேளையில் வலை உலகிலும் பகிர்கிறோம். இதன் மூலம் அறியாவற்றை அறியவைப்பதோடு நாமும் பலவற்றை அறிகிறோம். ஆனால் அரட்டைக்காகவே வலை உலகில் உலாவும் அனானிகளிடம் நாம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாதே!

   Delete

There was an error in this gadget