Sunday, September 7, 2014

திருமலையில் மொட்டைக்கு மூடு விழா!

பிரச்சனைகள் ஒன்றா! இரண்டா! பட்டியலிடுவதற்கு? குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்; பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும், அதன் பிறகு நல்லதொரு வேலை கிடைக்க வேண்டும்; வேலை கிடைத்தால் மட்டும் போதாது, காலா காலத்தில் திருமணம் நடக்க வேண்டும்; சொந்த வீடு வேண்டும் என பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை-ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிரச்னைகளோ ஏராளம்.

இன்றைய மாறி வரும் உலகமயச்சூழல், பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. என்ன செய்ய? பிரச்சனைகள் தீர வேண்டாமா? காணிக்கை செலுத்தினால் பிரச்சனைகள் தீரும் என்கிற நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறது ஒரு கூட்டம். காணிக்கை செலுத்தினால்தான் காரியம் நிறைவேறும் என கட்டாயப்படுத்துகிறது மற்றொரு கூட்டம்.

காணிக்கைகள்தான் எத்தனை? எத்தனை?

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை நமது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் நமக்கு தேவைப்படும் சான்றிதழ்களையும் உரிமங்களையும் பெற அரசு ஊழியர்களுக்கு செலுத்துவது ‘கவர்’ காணிக்கை.

விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க கல்லூரி தாளாளர்களுக்கு செலுத்துவது நன்கொடை காணிக்கை.

சத்துணவு ஆயா முதல் நீதி காக்கும் நீதியரசர் வரை கவர்மெண்ட் வேலைக்காக அரசியல்வாதிகளுக்கு செலுத்துவது அன்பளிப்பு காணிக்கை. சாலை போடவும், பாலம் கட்டவும் காண்ட்ராக்ட் எடுத்தால் சதவீத கணக்கில் அதிகாரிகளுக்கு செலுத்துவது ‘கமிஷன்’ காணிக்கை. ஆட்சிகளையே கவிழ்க்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது இந்த ‘கமிஷன்’ காணிக்கை.

ஒன்வேயோ, ஓவர் ஸ்பீடோ! இன்சூரன்சோ, ஆர்.சி.புக்கோ! எதுவாய் இருந்தால் என்ன? மாட்டிக்கொண்டால் ஒயிட் சர்ட்டிடம் செலுத்துவது ‘டிராபிக்’ காணிக்கை.

எக்குத் தப்பாய் ஏதாவது செய்துவிட்டு ஏட்டுவிடம் மாட்டிக் கொண்டால் ஸ்டேசனுக்கு செலுத்துவது ‘ஜாமின்’ காணிக்கை.

காலையில் எழுந்து வேலைக்குச் சென்று நல்லபடியாய் மாலையில் வீடு திரும்ப மரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டால் அதற்காக ஐயரிடம் செலுத்துவது அர்ச்சனை காணிக்கை.

காரியவாத காணிக்கை!

மேற்சொன்ன காணிக்கைகள் எல்லாம் பெரும்பாலும் நிர்பந்தத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ செலுத்தப்படுபவை. இந்த காணிக்கைகள் - செலுத்தியதுகூட பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நினைத்த காரியம் கைகூடினால், தானே முன்வந்து ஏழுமலையானுக்கு விரும்பி செலுத்துவது முடி காணிக்கை. முடி காணிக்கை - மனமுவந்து செலுத்துவது; வெளிப்படையானது; மறைக்கமுடியாதது.

மற்ற காணிக்கைகளில், காணிக்கை செலுத்தினாலும் காரியம் கைகூடாமல்கூட போகலாம்; ஏமாற வாய்ப்புகள் அதிகம். ஆனால் முடி காணிக்கை, காரியம் கைகூடினால் மட்டுமே செலுத்தப்படும். இது ஒரு காரியவாத காணிக்கை! மற்ற காணிக்கைகள் ஃப்ரீ பெய்டு என்றால் முடி காணிக்கை போஸ்ட் ஃப்பெய்டாக்கும்!


இந்த முடி காணிக்கைக்கும் இப்போது கேடு வந்தவிட்டது. திருமலையில் மொட்டையடிக்க ஆள் பற்றாக் குறையாம். முடி காணிக்கை செலுத்த திருமலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுவதால் இனி பக்தர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே மொட்டையடித்து, அந்த முடியை திருமலையில் உள்ள உண்டியலில் சேர்ப்பிக்கும் புதிய நடைமுறையை   கொண்டுவரப் போவதாக அறிவித்தள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்பதற்காகத்தான் திருப்பதியில் மொட்டை போட வேண்டிக் கொள்கிறான் பக்தன். ஊரிலேயே மொட்டை போட்டு முடியை மட்டும் எடுத்து வா என்றால் அது அவனது உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாகாதா?

இதுநாள்வரை மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதியா?” எனக் கேட்போம். இனி மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதிக்கா?” என்றுதான் கேட்க வேண்டும்.


சரி! அப்படியே மொட்டை அடித்து முடியை எடுத்து வருவதாக வைத்துக் கொண்டாலும் ஒரு குடும்பமே மொட்டை போட்டு முடியை மட்டும் மூட்டை கட்டி எடுத்துச் சென்றால் அதற்கான லக்கேஜை யார் தருவார்கள்? வரும் வழியில் முடி மூட்டை திருடு போனால் வெறுங்கையோடு ஏழுமலையானை தரிசிப்பது நியாயமாகுமா?

அதைப்பற்றி எல்லாம் ஏழுமலையானுக்கே கவலை இல்லை. முடியை நேரடியாகக் கொண்டவர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி டிமாண்ட் டிராப்டோடு முடியை பார்சலில் அனுப்பி வை என்பான். கட்டணம் இன்றி காணிக்கை செலுத்த முடியாதே! முடியிலேயே கோடிகளைப் பார்ப்பவனால் வேறு எப்படி யோசிக்க முடியும்! 

4 comments:

  1. Dear Comrate,

    Pl understand the problem thoroughly before publish. shortage of barber is the main problem.

    if you really interest to solve the problem , you can serve as a barber at least one person labor problem you can solve or you can give some good idea. (blaming others is the very easy job in india)

    Seshan

    ReplyDelete
  2. //முடியிலேயே கோடிகளைப் பார்ப்பவனால் வேறு எப்படி யோசிக்க முடியும்!//

    சிரித்து, சிந்தித்து, மூடத்தனங்களிலிருந்து விடுபடத் தூண்டும் தரமான பதிவு.

    ReplyDelete
  3. அருமையான பதிவு... உண்மையில் நாவிதர்கள் பற்றாக்குறை என்பதை ஏற்க முடியாது.. ஏனெனில் திருப்பதியைப் பொறுத்தவரையில் 100/200 நபர்கள் அவர்களின் வழிவந்தவர்கள் மட்டுமே முடிகாணிக்கை பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.. அவர்களின் வாரிசுகள் தற்சமயம் படித்து நல்ல வேலைக்கு சென்றுவிட்டதால் இந்தநிலை. அதுவே... புதிதாக நாவிதர்களை அல்லது இந்த வேலை செய்ய விருப்பம் உள்ள இளைஞர்களை நாடுமுழுவதிலிருந்து தேர்தெடுத்துப் பாருங்கள்... தேவைக்கு அதிகமாகவே நபர்கள் கிடைப்பார்கள்.. பிரச்சினையும் எளிதில் தீரும்... உணர்வுகளை மதித்தே ஆகவேண்டும்....

    சிவபார்க்கவி

    ReplyDelete
  4. this is the first time i visit your website sir. rompa nalla eluthuringa... keep on writing sir.

    ---
    mahesh
    tirupati
    www.sudarvizhi.com

    ReplyDelete