Wednesday, December 17, 2014

சனிப் பெயர்ச்சி: கோத்ரா ராசியை விட்டு அயோத்தி ராம ராசிக்குள்….. பொதுப்பலன் (26.05.2014 முதல் 25.05.2019)

”இந்தச் சனியன் எப்ப வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சதோ அப்பத்தலிருந்து குடும்பத்துல பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாப் போச்சு. எதச் செஞ்சாலும் வௌங்கல”

மருமகள்களைப் பார்த்து இத்தகைய வசவுகள் வெளிப்படாத வீடுகளே இருக்க முடியாது. நல்லது நடந்தால் மருமகளை ‘மகாலட்சுமி’ என்பதும் கெட்டது நடந்தால் ‘சனியன் – பீடை’ என்பதும் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது. நல்லது நடக்காததற்கு புறக்காரணங்கள் பல இருந்தாலும் எல்லாவற்றையும் சனியின் மீது போடும் பழக்கம் காலம் காலமாக மக்களிடையே நிலவி வருகிறது. ஒருவரும் சனியை பார்த்ததில்லை என்றாலும் இங்கே மருமகளைத்தான் சனியின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.

“இந்தச் சனியன வெறட்டனாதான் நம்ம குடும்பம் உருப்படும்” என எண்ணுவோரும் உண்டு. சனியன் என்றால் ஒருவித அச்சம் கலந்த உணர்வும், அது தம்மை விட்டு அகன்றுவிட வேண்டும் என்கிற பதை பதைப்பும் மக்களிடையே வெகுவாக ஊறிப் போயுள்ளது. இன்று பெருகி வரும் சமூக நெருக்கடிகளில் தங்களின் வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மக்கள் மீளமுடியாமல் தவிக்கும் போது, சனிப் பெயர்ச்சி என்கிற பூச்சாண்டி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக அமைவது பண்டாரங்களால் சொல்லப்படும் சனிப் பெயர்ச்சிப் பலன்களே.  சனிப் பெயர்ச்சியால் நன்மையா? தீமையா என எனக் கேள்வி எழுப்பி, ஒரு சில நன்மைகளை மட்டும் சொல்லிவிட்டு அதிக அளவில் தீமைகளைப் பட்டியலிட்டால் அப்பாவிகள் அச்சப் படாமலா இருக்க முடியும்? இந்த அப்பாவிகள் பட்டியவில் அதிக இடம் பிடிப்போர் மெத்தப் படித்த நடுத்தர வர்க்கமே  என்பது ஒரு அவலமான உண்மை.

இந்த அச்சம், பரிகாரங்களை நோக்கி மக்களை விரட்டுகிறது. பரிகாரங்களைச் செய்வதன் மூலம் இந்தச் சனியின் பிடியிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக சனி பற்றிய நம்பிக்கை  மக்களை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. பரிகாரங்கள் அதிகரிப்பதால் பரிகாரங்களைப் பரிந்துரைக்கும் பண்டாரங்கள் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறார்கள். சனிப் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன் இது ஒன்றுதான். சனிப் பெயர்ச்சியால் வேறெதுவும் நடப்பதில்லை. ஆக, உண்மையில் சனியால் ஆதாயம் அடைவோர் ஒரு சிலர்; பாதிக்கப்படுவோரோ பலர்.

இந்த ஆண்டு 16.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைந்து இங்கு (விருச்சிகம் ராசிக்குள்) 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்தப் போகிறாராம். அண்டத்திலிருந்து கதிரவன் வீசும் கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ள மனிதன் குளு குளு அறைகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பூமிக் குண்டையே குளு குளு அறைக்குள் அமுக்கி வைத்தாலும் திருநள்ளாரில் கருவறைக்கள்ளே கல்லாக சமைந்து கிடக்கும் சனிபகவான் வீசும் கதிர்வீச்சிலிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாதாம்.

இனி, இந்தக் கதிர்வீச்சினால், அதாவது சனி பகவானின் பார்வையினால் உலக மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைகளை ஒரு பண்டாராம் பட்டியலிட்டுள்ளதை அடுத்த பதிவில் பார்ப்போம்.  

தொடரும்….

தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Post a Comment