Saturday, July 18, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

”வரான் பார் திருட்டுப் பய!”

”கொலைகாரப் பய போறான் பாரு!”

”அவன் ஒரு 420 பா!”

திருட்டுப்பய, கொலைகாரன், 420(ஏமாற்றுப் பேர்வழி), இதற்கெல்லாம் விளக்கம் தரத் தேவையில்லை. எல்லாச் சாதிகளிலும், அனைத்து மதங்களிலும் இவர்களைக் காணலாம். இவர்கள் மக்களுக்குத் தீங்கானதையே செய்கிறார்கள் என்பதை இந்தச் சொற்களே புரியவைத்துவிடுகின்றன.

“அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள கடத்துறானுங்க!” 1983-ல் இராமநாராயனனின் இயக்கத்தில் வெளியான "சீறும் சிங்கங்கள்!" திரைப்படத்தில் வி.கே.இராமசாமி பேசும் வசனம் இது.

ஆனால் அது என்ன சண்டாளன்? யார் அது?

இந்தக் கேள்விகளை சில நண்பர்களிடம் கேட்டேன்.

”துரோகி!” என்றார் ஒருவர்.

”தெரியாது!” என்றார் மற்றொருவர்.

”சண்டாளன் என்றால் கீழ் சாதிக்காரன்!” என்றார் மூன்றாமவர். அவரது தொணியே அவர் ஒரு உயர் சாதிக்காரர் என்பதை உணர்த்தியது.

இவர்கள் எல்லாம் ஐம்பதைக் கடந்தவர்கள். அதனால்தானோ என்னவோ சண்டாளன் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு அதன் பொருளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதெல்லாம் பிறரை திட்டுவதற்கு சண்டாளன் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஆண்கள் என்றால் சண்டாளன் என்றும் பெண்கள் என்றால் சண்டாளச்சி என்றும் திட்டுவார்கள்.

இதன் பொருள் அப்போழுதெல்லாம் தெரியாது. வி.கே.இராமசாமி வசனம் பேசும்போதுகூட புரியவில்லை.

சண்டாளன் என்றால் கீழ்சாதிக்காரன் என்று ஒரு நண்பர் சொன்னாரே! அது உண்மையாக இருக்கக்கூடும் என்பதை அவரது தொணியே உணர்த்தியதால் இது குறித்த விவரங்களைத் தேடினேன்.

“பிராமணன் சாப்பிடும் போது சண்டாளன் அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாது!” (மனு: 3-239),

“சண்டாளனுடன் ஒருமித்து வசிக்கக்கூடாது!” (மனு: 4-79),

“ஒரு பிராமணன் உடல் நலமில்லாத போது தனது மனைவி உடனிருக்கையில் வேறு சாதி மனைவியைக் கொண்டு தனக்கு பணிவிடை செய்து கொண்டால் அவன் சண்டாளனாகி விடுகிறான்!” (மனு: 9-87),

”சண்டாளனுக்கு ஊருக்கு வெளியேில் வீடிருக்க வேண்டியது. அவனுக்கு உலோக பாத்திரம் கிடையாது. அவன் தீண்டின பாத்திரங்களை சுத்தி செய்தாலும் பரிசுத்தமாகாது. நாய் மற்றும் குரங்கு மட்டுமே அவனது சொத்து” (மனு:10-51).

”சண்டாளன் பிணத்தின் துணியை உடுத்த வேண்டும். உடைந்த சட்டியில் அண்ணம் புசிக்க வேண்டும். இரும்பு பித்தளை இவைகளால் செய்யப்பட்ட பூஷணங்களை (அணிகலன்கள்) அணிய வேண்டும். அவன் எப்போழுதும் தொழிலுக்காக திரிந்து கொண்டிருக்க வேண்டும்.” (மனு: 10-52).

”தருமகாரியஞ் செய்கிற சமயத்தில் சண்டாளனைப் பார்க்கவும் அவனோடு பேசவும் கூடாது.” (மனு: 10-53).

”சண்டாளர்களுக்கு நேரே உணவு போடக்கூடாது. வேலையாளைவிட்டு உடைந்த பாத்திரங்களில் உணவை போட்டு வைக்க வேண்டும்.” (மனு: 10-54).

“சண்டாளர்கள் பிணங்களை எடுக்க வேண்டும், அவர்கள் அடையாள அட்டையோடுதான் ஊரில் சஞ்சரிக்க வேண்டும்.” (மனு: 10-55),

“பிணங்களின் ஆடைகள் மற்றும் படுக்கை இவைகளை சண்டாளர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும்.” (மனு: 10-56),

“நல்ல வேடத்தில் இருந்தாலும் இவன் செய்கிற தொழிலால் சண்டாளன் ஈனனென்றே அறியப்படுகிறான்.” (மனு: 10-57).

“யாகம் செய்வதற்காக சூத்திரனின் பொருளை ஒரு பிராமணன் வாங்கினால் அவன் இறந்து மீண்டும் பிறக்கும் போது சண்டாளனாகத்தான் பிறப்பான்.” (மனு: 11-24).

“ஒரு பிராமணன் தெரிந்தே ஒரு சண்டாளப் பெண்ணை புணர்ந்தாலோ, அவள் கொடுத்த உணவை சாப்பிட்டாலோ, அவளிடத்தில் தானம் வாங்கினாலோ அந்தப் பிராமணன் சண்டாளனாகி விடுகிறான்.”(மனு: 11-175).

யார் இந்தச் சண்டாளன்?

”சூத்திரனுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் இந்தச் சண்டாளன்.” (மனு: 10-12).

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கு அடிமை சேவகம் செய்பவனே சூத்திரன். ஒரு மேல்சாதி பிராமணப் பெண்னை ஒரு கீழ்சாதி சூத்திரன் காதலிப்பதா? அவனுக்கு ஒரு வாரிசா? என ஆத்திரமடைந்த மனு அந்த வாரிசுகளை சண்டாளர்கள் என அடையாளப்படுத்தி ஊருக்கு வெளியே விரட்டி அடித்தான்.

மாதவிலக்கில் உள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பிணத்தையோ அல்லது ஒரு பறையனையோ – இங்கெ பறையன் என்று குறிப்பிடுவது சண்டாளனைத்தான் - ஒரு பிராமணன் தொட்டுவிட்டால் அவன் தீட்டாகிவிடுகிறான். தெரியாமல் தொட்டுவிட்டால் தலைக்கு முழுகினால் அவனிடமிருந்து தீட்டு நீங்கிவிடுகிறது. (மனு: 5-85).

ஒரு பிராமணன் ஒரு பறையனையோ அல்லது அசுத்தமானவர்களையோ பார்த்துவிட்டால் அப்பொழுதெல்லாம் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். (மனு: 5-86).

இப்படி நீள்கிறது சண்டாளர்கள் அதாவது பறையர்கள் பற்றிய மனுவின் வரையறை.

சண்டாளர்கள் குறித்து – அதாவது பறையர்கள் குறித்து - மனுவால் வரையறுக்கப்பட்டு, பார்ப்பனர்களால் பரப்பப்பட்டு மக்களிடம் ஒரு வாழ்க்கை முறையாக பண்பாடாக நிலை பெற்றுவிட்ட சேரி மக்களின் நிலையை அறிய நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியதில்லை. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பிப் பாருங்கள். திண்டாமையின் உண்மை முகம் தெரியும்!

தொடரும்…

குறிப்பு: இந்தக் கட்டுரை ”இந்துவாக இருப்பது பெருமையா? இழிவா?என்பதன் தொடர்ச்சி. இந்தத் தலைப்பை ”தீண்டாமையை புகுத்தியன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!” என மாற்றி அமைத்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

4 comments:

  1. சாதிக்குள் ஒரு சாதி... தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. சாதிகளின் உருவாக்கமே சாதிகளுக்குள் ஏற்பட்ட கலப்புதான்.

      Delete
  2. நன்றி. தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கங்கள்.

    ReplyDelete