Wednesday, September 23, 2015

விஷ்ணுப்பிரியா உயிர்த்தெழுவாரா?

“தீண்டாதவர்களின் பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சனையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது. மீட்கப்பட வேண்டிவர் தீண்டாதவர்தான் என்றே எப்போதும் கருதப்படுகிறது. நற்பணிக் குழு ஒன்றை அனுப்புவதானால் அதைத் தீண்டத்தகாதவர்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். தீண்டாதவர்களைத் திருத்திவிட முடிந்தால் தீண்டாமை மறைந்து போகும். தீண்டத்தக்கவருக்கு எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவர் மனத்திலும், நடத்தையிலும், ஒழுக்கத்திலும் நலமாயிருக்கிறார், அவர் ஆரோக்கியாய் இருக்கிறார், அவரிடம் எந்தக் கேடும் இல்லை.

இவ்வாறு கருதுவது சரிதானா? சரியோ, தவறோ இந்துக்கள் இந்தக் கருத்தைத்தான் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாதவர்களின் பிரச்சனைக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ள உதவுகிறது என்ற பெரிய சிறப்பு இந்தக் கருத்துக்கு உள்ளது” (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:  பேச்சும் எழுத்தும்: தொகுதி 9).

தீண்டாமை குறித்த சாதி இந்துக்களின் மனநிலையை வேறு யாராலும் இதைவிட சிறப்பாக படம் பிடித்துக் காட்ட முடியாது. அம்பேத்கரின் இந்த தீர்க்கமான கூற்று உண்மைதான் என்பதை விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை நமக்கு உணர்த்துகிறது.

இளவரசன் மரணம், கோகுல்ராஜ் படுகொலை, விஷ்ணுப்பிரியா தற்கொலை என தீண்டத்தகாத சாதிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று, சாதியப் படிநிலையில் உயர் நிலையில் உள்ள ஐயர் - ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர் முதல் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ள சூத்திரச்சாதி வரை பலரும் ஓலமிடுவதைக் கேட்கிறோம். விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என ஓலமிடும் பார்ப்பன பா.ஜ.க முதல் சூத்திரவாள் ராமதாஸ்வரை தாழ்த்தப்பட்டவர்களின் இந்த நிலைக்குத் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமைதான் காரணம் என்பதை என்றைக்காவது உணர்ந்துள்ளார்களா? 

தீண்டத்தகாதவர்களுக்காக கரிசனப்படுவதைவிட தீண்டத்தகுந்த சாதி இந்துக்கள் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமையால்தான் இளவரசன்களும், கோகுல்ராஜ்களும், விஷ்ணுப்பிரியாக்களும் மாண்டு போகிறார்கள்; இவர்களின் கொலைக்கும் – மரணத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை குற்ற உணர்வோடு முதலில் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதற்குக் காரணம் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும், நடைமுறைகளும்தான் என்பதை உணர வேண்டும். இந்துமத நம்பிக்கைளையும், நடைமுறைகளையும் அன்றாட வாழ்விலிருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே தீண்டாமையை கடைபிடிக்கும் கருத்தியலிலிருந்தும், நம்பிக்கைகளிலிலிருந்தும் சாதி இந்துக்கள் தங்களைத் துண்டித்துக் கொள்ள முடியும். இது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும் சாதி இந்துக்களை சமூகப் போராளிகளாக, புரட்சியாளர்களாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கைவிட வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. 

'தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது என்கிற அம்பேத்கரின் ஆதங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், படிநிலைச் சாதி அமைப்பு முறையையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இந்து மதத்தை புதைகுழிக்கு அனுப்ப வேண்டும். அதுவரை விஷ்ணுப்பிரியாக்கள் உயிர்த்தெழ முடியாது.

தொடர்புடைய பதிவுகள்:

4 comments:

  1. விஷ்ணுப்பிரியா
    முற்றுப்புள்ளியா
    தொடர்கதையா
    கடவுளே
    இப்ப - நீ
    எங்கே இருக்கின்றாய்!

    ReplyDelete
    Replies
    1. முற்றுப் புள்ளி வைக்க முயலுவோம்.

      Delete
  2. விஷ்ணுப்பிரியா உயிர்த்தெழுந்தாலும்..ஆதிக்க சாதி வெறியர்கள்.. மீண்டும் தங்கள கொடூரமான வெறியை காட்டுவார்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆதிக்க சாதி வெறியர்களை எதிர்கொள்கிற வகையில் அதற்கெதிரான சக்திகள் பலம் பெற வேண்டும்.

      Delete