Monday, November 16, 2015

தோழர் கோவன் விடுதலை!




சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தோழர் கோவனுக்கு பிணை கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.
இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் நீட்சியாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து அதிகபட்சம் இந்த பாடல் இரட்டை அர்த்தத்தோடு இருக்கிறது என்பதை மட்டுமே வாதிட முடிந்தது. இதில் தேசத்துரோகம் என்ன என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
தோழர் கோவனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். நீதிமன்ற வேலைகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்தனர். தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம் இத்தகைய பிணையை அளித்திருக்கிறது.
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
செய்தி ஆதாரம்: வினவு
நன்றி!
தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Post a Comment