Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Wednesday, August 21, 2024

திருக்குறள்: முக்காலத்திற்கும் ஏற்றதா? அப்படியானால்...?

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". -குறள்.

இதில் எதைக் கற்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்ன? நல்ல நூல்களைத்தான் கற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள
நல்லவைகள்படிதான் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே பொழிப்புரை எழுதிக் கொள்கிறோம்.

எதைக் கற்றாலும் அதற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் என்பதுதானே இந்தக் குறளின் பொருள். 

அப்படியானால், மத்தியப் பிரதேச கிராமங்களில் சிறுவர்கள் கற்பதும், அதற்குத் தக அவர்கள் நடப்பதும் சரியன்றோ?

"ம.பி கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்! 

மத்திய பிரதேசம் ராஜ்கர், மாவட்டத்தில் காடியா, குல்கேடி ஹல்கேடி ஆகிய கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளைப் பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸ்காரரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சி அளிக்கப்படுகிறது." 

இது இந்து தமிழ் திசை நாளேட்டில், ஆகஸ்டு 21, 2024 அன்று வெளியான செய்தி. 


பயிற்சி பெற்ற இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கண்ட திருட்டுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்றதைத்தானே இவர்கள் செயல்படுத்துகிறார்கள் "நிற்க அதற்குத் தக" என்பது இங்கும் பொருந்தும்தானே? இப்படியும் பொழிப்புரை எழுதலாம்தானே?

நேர்மையாய் வாழ வழியற்ற நிலைமை இருப்பதனால்தானே இப்படி மாற்று வழிகளில் வாழ மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முறையற்ற வழியில் பணம் பறிக்கும் பயிற்சி அங்கு மட்டுமா அளிக்கப்படுகிறது? அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் கையூட்டு பெறும் பயிற்சியை எங்கே கற்றுக் கொண்டார்கள்? யார் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது? இதையும் சேர்த்து அல்லவா நாம் பரிசீலிக்க வேண்டும்.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்கள் அனைத்துமே சமுதாயம் மிகவும் கெட்டுச் சீரழிந்திருந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. சமுதாயத்தை மாற்றி அமைக்கத் துணியாமல் உபதேசங்களை மட்டும் அன்று அழகாய் வடித்துக் கொடுத்தார்கள்.

அதே உபதேசங்கள் இன்றும் போதிக்கப்படுகின்றன. குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள். அப்படியானால், சமுதாயம் கெட்டுச் சீரழிந்த சமுதாயமாகவே தொடரட்டும்,  ஊதேசங்களை மட்டுமே நாம் போதித்துக் கொண்டே பழம் பெருமை பேசிக்கொண்டே இருப்போம். சமுதாயம் எக்கேடு கெட்டுச் சீரழிந்தால் என்ன என்கிற கவலை இன்றி, அதை மாற்றி அமைக்கின்ற போர்க்களத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் வெறும் உபதேசங்களை மட்டுமே போதிப்பது மேதைத்தனம் பொருந்திய கோழைத்தனம் அல்லவோ? 

பழைய உபதேசங்களுக்கு பொழிப்புரை எழுதுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் புது பொழிப்புரை எழுதாதவரை, ஞானிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், உபதேசங்களும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்! 

ஊரான்

Tuesday, June 29, 2021

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

திராவிட என்ற சொல் மனுஸ்மிருதியிலேயே (கி.மு 150 முதல் கி.பி 100) இருக்கும் போது, இராபர்ட் கால்டுவெல்தான் (1856) முதன் முதலில் திராவிட என்ற சொல்லைப் புகுத்தித் தமிழனின் அடையாளத்தைத் திசை திருப்பிவிட்டார் என்று தற்போது பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகின்றனர். திராவிட என்ற சொல் மீது அவர்களுக்கு ஏன் கடுங் கோபம்?; தம்பிகளுக்கும்தான்!

“பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயன முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொன்ன சத்திரிய சாதிகள் இவ்வுலகில் வரவர சூத்திரத்தன்மையை அடைந்தார்கள் (மனு: 10-43)”

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள் (மனு: 10-44)”

10-43: But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of sudras;

10-44: (VIZ) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

(ஆங்கிலத்தில் உள்ள Kodas தமிழில் ஔண்டரம் என்றுள்ளது. தமிழில் உள்ள கசம் ஆங்கிலத்தில் இடம்பெறவில்லை)

மனு கூறியபடி மேற்கண்ட பன்னிரண்டு நாடுகளின் மன்னர்களும் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. பார்ப்பனர்களை வணங்கி அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தவில்லை.  அதனால் அவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டார்கள். இங்கே எடப்பாடி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்தப் பன்னிரண்டு நாடுகளும் எந்தெந்தப் பகுதி என்பதை வரலாற்றில் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடியவைதான். திரவிடம் என்றால் பார்ப்பன எதிர்ப்போடு தொடர்புடைய சொல் என்றப் புரிதலைத்தான் மனு நமக்குக் கொடுக்கிறான்.

எனவே, திரவிடம் என்றாலும் பௌண்டரம், ஔண்டரம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம், யவனம் என்றாலும் ..... பார்ப்பன எதிர்ப்பு - வேத மறுப்பு என்பதுதான் அதன் சாரம். இந்தப் புரிதலில்தான் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்ட பெரியார் அன்று இச்சொல்லைப் பயன்படுத்தி திராவிடர் கழகம் என்று தான் தொடங்கியக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கக்கூடும். அப்படியானால் தரதம் என்றோ யவனம் என்றோ வைத்திருக்லாமே என்றுகூடத் தோன்றலாம். திராவிடம் தென்னிந்தியாவை-தமிழர்களைக் குறிப்பதால் பெரியார் திராவிடத்தைத் தெரிவு செய்துள்ளார்.

பின்னாளில் திராவிட என்ற பெயரைத் தாங்கி பல கட்சிகள் தோன்றின. அதனாலேயே அக்கட்சிகள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டவை என்று பொருளாகி விடாது. மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள பலர் பிழைப்புவாதிகளாக, ஊழல்வாதிகளாக சீரழிந்து விட்டால் இதைத் திராவிட என்ற சொல்லோடு முடிச்சுப் போட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என புதுப் பொருள் விளக்கம் கொடுத்து திராவிட என்ற சொல்லின் பரிமானத்தைக் கொச்சைப் படுத்துகின்றனர். மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள அனைவருமே பார்ப்பன எதிர்ப்பைக் கடைபிடிப்பவர்களா என்ன?

*****

பார்ப்பனர்களை வணங்காமல், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி நடத்திய மன்னர்கள் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுல்ல அவர்களில் பலர் பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர்.

அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதம் ஓதினவர்களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பார்ப்பனர்களை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டியது (மனு: 7-37)

தான் நியாயம் அறிந்திருப்பினும், பார்ப்பனர்களிடத்தில் நியாயத்தை வணக்கமாய் கேட்க வேண்டியது. பார்ப்பனர்களை வணங்கி ஆட்சி நடத்தினால் ஒரு போதும் மன்னன் அழியமாட்டான். (மனு: 7-39)

பார்ப்பனர்களை வணங்காமல் ஆட்சி நடத்தாததால் அனேக மன்னர்கள் சதுரங்க சேனையுடன் அழிந்து போனார்கள், நாட்டை விட்டு காட்டுக்கு ஓடிப் போனார்கள். (மனு: 7-40)

அந்த வணக்கமில்லாததால் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் ஆட்சியை இழந்து அழிந்த போனார்கள். (மனு: 7-41)

மேற்கண்ட மன்னர்களின் கதைகளை பாகவத புராணம், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளில் காண முடியும்.

பார்ப்பனர்களை வணங்கியதால் பிருது, மனு இவ்விரு அரசர்கள் ஆட்சியையும், குபேரன் செல்வத்தையும், விசுவாமித்திரன் பார்ப்பனத் தன்மையையும் அடைந்தார்கள். (மனு: 7-42)

7-37: Let the king, after rising early in the morning, worship Brahmanas who are well versed in the three fold sacred science and learned (in polity), and follow their advise.

7-39: Let him, though he may already be modest, constantly learn modesty from them; for a kind who is modest never perishes;

7-40: Through a want of modesty many kings have perished; together with their belongings; through modesty even hermits in the forest have gained kingdoms.

7-41: Through a want of humility Vena perished, like wise king Nahusha, Sudas, the son of Pigavana, Shumukta and Nemi.

7-42: But the humility Prithu and Manu gained sovereignty, Kubera the position of the Lord of wealth and the son of Dadhi the rank of a Brahmana.

இங்கு பார்ப்பனர்களை வணங்கியதற்கு எடப்பாடியும்,  வணங்காமைக்கு அண்ணா – கலைஞர் - ஸ்டாலின் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*****

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு பார்ப்பனர் என்பதால் திராவிடர்கள் என்றாலும் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான் என்ற ஒரு வாதத்தையும் அப்பாவித்தனமாக சிலர் முன்வைக்கின்றனர். இது உண்மையா?

“இந்தியப் பார்ப்பனர்கள் இருவேறு வகைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு திராவிடர்கள் என்றும் மறு பிரிவு கவுடர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

திராவிடர் என்ற வகைப் பிரிவு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த ஐந்தும் சேர்ந்து பஞ்ச திராவிடர் எனப்படும். இவ்வைந்து உட்பிரிவுகளின் பெயர் பின்வருமாறு:

1.மகாராஷ்டிரர்

2.ஆந்திரர்

3.(முறைப்படியான) திராவிடர் (தமிழ் பார்ப்பனர்கள்)

4.கர்னாடகர்

5.குர்ஜரர்”  

இந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உட்சாதிகள் உண்டு. கவுடர்கள் வகையிலும் இதுபோன்று பல்வேறு உட்பிரிவுகளும் உட்சாதிகளும் உண்டு. இப்படியாக பார்பனர்களில் பாகவதர், பண்டிட், பரத்வாஜ், திரிவேதி, ஜெட்லி, பதக், தத்தா, வைத்தயா, பாண்டே, துபே, மிஸ்ரா, பட், முன்ஷி, சுக்லா, வாஜ்பேயி, தீட்சிதர், உபாத்யா, ஆச்சார்யா என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகள் உண்டு.

ரிக்வேதிகள், கிருஷ்ண யஜூர்வேதிகள், சுக்ல யஜூர்வேதிகள்-மத்தியாந்தினார்கள், சுக்ல யஜூர்வேதிகள்-கன்வார்கள், சாமவேதிகள், அதர்வர்கள், வைணவர்கள், வீர வைணவர்கள், ஸ்ரீ-வைணவர்கள், பாகவதர்கள், ஷக்தர்கள் ஆகிய பார்ப்பன சாதிகள் தமிழ்ப் பார்ப்னர்களில் அடங்குவர். இன்று நமக்குத் தெரிந்த ஐயர், ஐயங்கார் உள்ளிட்டவை எப்படி சாதிகளாக அறியப்படுகின்றன என்று தெரியவில்லை. ஒரு வேளை அவை மேற்கண்ட சாதிகள் ஏதாவதின் தமிழாக்கமோ என்னவோ?

“பஞ்ச திராவிடர்கள் என்பது விந்திய மலைக்குக் கீழ்ப்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். பஞ்ச கவுடர்கள் என்பது விந்திய மலைக்கு மேற்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். வேறு விதமாகச் சொன்னால் பஞ்ச கவுடர் என்பது வடக்கத்திய பார்ப்பனர்களையும், பஞ்ச திராவிடர் என்பது தெற்கத்தியப் பார்ப்பனர்களையும் குறிக்கும்”.

எனவே, திராவிடம் என்றால் அது தென்னிந்தியாவோடு தொடர்டையது என்பது மட்டும் தெளிவு.

மலேசியத் தமிழன், ஈழத் தமிழன் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிப்பது போல திராவிடப் பார்பனர்கள் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவே. திராவிடப் பார்ப்பனர்கள் என்றாலும் தென்னிந்திய அல்லது தமிழ்ப் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான்.  

*****

பார்ப்பன எதிர்ப்பை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட என்ற பெயர் தாங்கி உள்ள கட்சிகளில் மட்டுமல்ல பொதுவுடைமை உள்ளிட்ட பிற கட்சிகளிலும் ஏராளமாக உள்ளனர். பார்ப்பன எதிர்ப்பைக் கைக்கொள்பவர்கள் அனைவருமே  திராவிடர்கள்தான்.

திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் தமிழை-தமிழனை சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்று கூப்பாடு போடுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? திராவிட என்ற சொல்லைக் கைவிடுவது பார்ப்பன எதிர்ப்பைக் கைவிடுவதற்கு ஒப்பாகும்.

ஆம்! இந்தப் புரிதலில் நான் திராவிடன்; நீங்கள்?

ஊரான்

ஆதார நூல்கள்: 

1. மனுதரும சாஸ்திரம், 
2.. டாக்டா அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 10

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் கடைசி அசுரனா?

Thursday, December 12, 2019

அடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா?


அண்ணா பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழா 04.12.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. உறவினர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதால், நானும் அந்நிகழ்வில் ஒரு பார்வையாளராகப் பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் அவ்விழா நடைபெற்றது. 1,251 மாணவர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்ததால், அந்த அரங்கம் அவர்களுக்கே போதுமானதாக இல்லை. உடன் வந்த உறவினர்கள் விழாவைக்கான அரங்கத்திற்கு வெளியே திரை அமைத்திருந்தார்கள். அந்த இடமும் நெருக்கடியாக இருந்ததால் கூட்டம் அலைமோதி முண்டியடித்துக் கொண்டுதான் திரையில்கூட நிகழ்ச்சியைக் காண முடிந்தது.
திரையில் பட்டமளிப்பு விழா

1,251 பேருக்கு ஆளுநர் நேரில் பட்டம் வழங்கினார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் 71 பேருக்கு மட்டுமே தனது கையால் பட்டம் வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் விழா முடிந்த பிறகு, ஏற்கனவே மொத்தமாக தங்கள் கைக்கு வந்துவிட்ட பட்டத்தை துணை வேந்தர் சூரப்பாவின் கையில் கொடுத்து, அவர் கையால் பட்டம் பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர். இதைப் பார்த்த போது துணைவேந்தரே இவர்களுக்கு நேரில் பட்டமளிப்பது போன்றதொரு பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்தியது. 71 பேர் மட்டுமே நேரில் பட்டம் பெறும் ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்கு என பெரும் தொகையை செலவு செய்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு ஏன் வரவேண்டும்?

அண்ணா நினைவிடம்
சரி! செய்த செலவுக்கு மெரினாவுக்காகவாவது சென்று வரலாம் என அங்கு சென்றோம். முதலில் அண்ணா நினைவிடத்தையும், அதற்கு உள்ளேயே ஒரு ஓரமாக மிகச்சிறிய இடத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு தி.மு.க வோடு அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் இருந்தாலும் கலைஞர் நினைவிடத்தின் அருகில் நான் சென்ற போது என்னை அறியாமலேயே என் கண்கள் சற்றே கலங்கின. பார்ப்பனர்கள் ஒருவனை மூர்க்கமாக  எதிர்க்கிறார்கள் என்றால், அவனும் ஏதோ ஒரு வகையில் உன் தோழனே என ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்குள்ள கலைஞரின் பொன் மொழிகள் சிலவற்றை உற்று நோக்கிய போது “மூளை! மூளை! அவ்வளவும் மூளை!” என ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தன்னுடன் வந்தவர்களுடன் பேசிக் கொண்டது, கலைஞர் மிக ஆழமாகவே மக்கள் மனிதில் இடம் பிடித்துள்ளார் என்பதை உணர்த்தியது!
கலைஞர் நினைவிடம்
வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றோம். அங்கு பராமறிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது ஜெயலலிதாவின் நினைவிடம் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படுவதைக் காண முடிந்தது. அண்ணா - கலைஞர் நினைவிடத்தையும், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடத்தையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவும் கலைஞரும் அண்ணன் - தம்பி போலவும், (உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாகத்தானே கருதப்படுகின்றனர்) எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கணவன் - மனைவி போலவும் (அங்கு வைக்கப்பட்டிருக்கும் WAY TO DR.MGR & AMMA SAMADHI என்ற அறிவிப்பைப் பார்க்கும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது) ஒரு தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது என்ன பங்காளிகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவரா? இல்லை கலைஞர் சமாதியை மிதித்தவன் நேராக ஜெயலலிதாவின் சமாதியை மிதித்துவிடக்கூடாது என்பதற்கான தீண்டாமைச் சுவரா? அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா நால்வருமே தமிழக முதல்வராக இருந்தவர்கள்தானே! பிறகு எதற்காக இந்த தடுப்புச்சுவர்?
ஜெயலலிதா நினைவிடம்

அண்ணா - எம்ஜி.ஆர் - ஜெயலலிதா மூவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களது நினைவிடத்தின் பிரம்மாண்டத்தையும், கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் அவரது நினைவிடத்தின் அமைப்பையும், பார்த்த போது
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
என்கிற எம்.ஜி.ஆரின் “என் அண்ணன்” திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!" எனத் தொடங்கும் பாடலில் உள்ள வரிகள்தான் நினைவுக்கு வந்தது.


எம்ஜி.ஆர் நினைவிடம்
மெரினாவில் சமாதிகளே கூடாது என்பதுதான் எனது கருத்து. இருப்பவற்றையும் இடித்துத்தள்ளி, சமாதிகளுக்கு முடிவுகட்டவில்லை என்றால், நாற்பது ஆண்டுகளில் நான்கான சமாதிகள் அடுத்த நூறு ஆண்டுகளில் பதினான்காகும். அப்பொழுது மெரினாவும் புதைக்கப்பட்டிருக்கும்.

மெரினா என்றால் கடலில் கால் நனைக்காமலா? “யாரும் கடலில் இறங்க வேண்டாம். கடல் நீரில் கால் நனைக்க வேண்டாம். நனைத்தால் நோய் தொற்று வரும்!” என மெரினாக் காவல் நிலையம் எச்சரித்திருந்ததாக கேள்விப்பட்டோம். அருகில் சென்ற போது கடலிலிருந்து வீசிய கெட்டநாற்றம், இந்த எச்சரிக்கை உண்மைதான் என்பதைப் புரிய வைத்தது. ‘கடலில் பெருங்காயம் கலப்பதைப் போல’ என்கிற சொலவடை இங்கே பொய்யாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் சென்னை நகரின் மொத்தக் கழிவும் வங்கக்கடலில் சங்கமித்ததால் வந்தக்கேடு இது. கழிவுநீரைக்கூட சுத்திகரிக்கும் ஆற்றலற்ற அரசு கட்டமைப்பு நீடிக்கும்வரை கடல் கன்னிகள் கலங்கப்படுவதை யார்தான் தடுக்க முடியும்?

மெரினா
கடற்கரைக்கு வந்துவிட்ட பிறகு இளைப்பாறாமலா? மணற்பரப்பில் இரண்டறக் கலந்திருந்த குப்பைக் கூலங்கள் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளின் கழிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட நேரம் நடந்த களைப்பைப் போக்க சிறது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஜல்லிக்கட்டின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஊர் திரும்பினோம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, August 7, 2018

கலைஞர் கடைசி அசுரனா?


இவன் வேதம் கூறும் நியதிகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கித் தள்ளினான். மனுஸ்மிருதியின் விதிகளுக்கு விரோதமாக  செயல்பட்டான். இவனது ஆட்சியி சட்டல் வேத நூல்களைக்  தடை விதித்தான். இவன்தான் ஹரிவம்சம் எனும் நூலில் சொல்லப்ட்டுள்ள வீணா என்கிற அரசன்.

இவன் ஒரு பலம் கொண்ட மன்னன். இவனே ஒரு பலசாலி என்பதால் பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்தான். இவன்தான் மகாபாரதம், ஆதிபருவத்தில் குறிப்பிடப்படும் புரூவரன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களை ஏற்க மறுத்தான். இவன் புரூவரனின் மகன். இவன்தான் மகாபாரதம், உத்யோகப் பருவத்தில் சொல்லப்பட்டுள்ள நகுஷன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பன ரிஷி வசிட்டருடன் முரண்பட்டதால் சாபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டவன். இவன்தான் விஷ்ணு புராணித்தில  சொல்லப்ட்டுள்ள நிமி என்கிற அரசன்.

வேதங்கள் கூடாது என்பதனால் இவனது ஆட்சியில் வேத பாட்சாலைகள் கிடையாது. இவன்தான் வாமண புராணத்தில் சொல்லப்படும் கேரள மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட மகாபலி சக்ரவர்த்தி. சும்மா விடுவார்களா பார்ப்னர்கள்? சூழ்ச்சியால் மகாபலியை ஒழித்துக் கட்டினார்கள்.

பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள இரணியன் என்கிற இரணிய கசிபு. இவன் பிரகலாதனின் தந்தை. இவன் பார்ப்பனர்களை எதிர்த்த ஒரு மாபெரும் அரசன். நரசிங்க அவதாரம் மூலம் இவனையும் கொலை செய்தனர் பார்ப்பனர்கள்.

இலங்கைக்கே அதிபதியாக இருந்த இராவணனைக் கொன்றார்கள். இப்படி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட மன்னர்களின் பட்டியல் மிக நீளமானது.

மன்னர்களின் ஆட்சிகள் எல்லாம் ஒன்றும் பொதுவுடமை ஆட்சிகள் அல்ல. இவர்களது ஆட்சி காலத்திலும் மக்கள் பல்வேறு அரசியல்-பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்திருப்பார்கள். மன்னரும் அவரது குடும்பமும் செல்வச் செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் மாபெரும் சக்ரவர்த்திகளாக, மன்னர்களாக, அரசர்களாக கோலாச்சிய போதும் இவர்களை ஏன் அசுரர்களாக, அரக்கர்களாக அதாவது இழிவானவர்களாக புராணங்கள் அடையாளப்படுத்துகின்றன? இவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் தும்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்காகவா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை ஏற்க மறுத்ததற்காகவா?

பார்ப்பனர்களை வணங்காமையால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் உள்ளிட்ட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவரையும் நான்காம் வர்ணமான இழிவான சூத்திர நிலைக்கு தகுதி இறக்கம் செய்கிறான் மனு. (மனுஸ்மிருதி 10 - 43, 44).


யாரெல்லாம் வேதங்களையும், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்களோ, அவர்களெல்லாம் அசுரர்கள் என இழிவு படுத்தப்பட்டார்கள். சதி மற்றும் நயவஞ்சகத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள். புத்தரில் தொடங்கி பல்வேறு மன்னர்கள் ஈடாக அதைத் தொடர்ந்து வள்ளலார், பசவன்னர், மகாத்மா புலே, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கௌரிலங்கேஷ்நரேந்திர தபோல்கர்கோவிந்த் பன்சாரேஎம்.எம்.கல்புர்கி, என்கிற இந்த அசுரர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த வரிசையில் இதோ இன்னுமொரு அசுரன். யாருடைய மரணத்தை பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்களோ, யாருடைய மரணம் பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவர் நிச்சயம் அசுரர்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இது இறுதி மகிழ்ச்சி அல்ல!

Tuesday, November 23, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-3

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்? உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்டக் காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின்படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும். இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறியத் திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை, அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள், நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும். அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே! இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா? கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா? முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள், முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா! பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன? பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள், நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?

முற்றும்.

ஊரான்.