Sunday, March 22, 2020

தாய்மை இன்றி தலைமுறையேது? பெண்மை இன்றி பிரபஞ்சமேது?


அம்பேத்கர்-பெரியார் வாசர் வட்டம் தனது 25-வது சந்திப்பில் “சர்வதேச உழைக்கும் மகளிர் நாள்” விழாவை 13.03.2020 அன்று மாலை இராணிப்பேட்டை ‘பெல்’ வளாகத்தில் மிக எழுச்சியோடு நடத்தியது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.
சந்தியா
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் தோழர் சந்தியா வேரவேற்புரையாற்றினார். 

அம்பேத்கர், பெரியார் இருவரும் இல்லை எனில் பெண்கள் இதுபோன்று மேடை ஏறி பேசியிருக்க முடியுமா? எனப் பெண் விடுதலைக்காகத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை தனது தலைமை உரையில் நினைவு கூர்ந்தார் தோழர் கிருபா அவர்கள்.


கிருபா
பல்வேறு தலைவர்கள் போராடிய பிறகும் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் முழுமையாக இன்னமும் கிடைக்கவில்லை; வீட்டிலும், பொது வெளியிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லை; தலைவர்கள் காட்டிய வழியில் நாம் தொடர்ந்து பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் தோழர் தேன்மொழி அவர்கள்.

தேன்மொழி
இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் ஓவியா அன்புமொழி அவர்கள் தனது உரையில்,

இது வெறும் மகளிர் நாள் விழா அல்ல. மாறாக இது சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் விழா. உழைக்கும் மகளிருக்கான இந்நாளை கோலப் போட்டி, சமையல் போட்டி என சிறுமைப் படுத்தும் வகையில் இதை ஒரு கொண்டாட்ட நாளாக சிலர் மாற்ற முயற்சிக்கின்றனர். இது கொண்டாட்ட நாள் அல்ல. உரிமைகள் பறிக்கப்பட்ட உழைக்கும் மகளிர் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் கடமையை வலியுறுத்தும் நாள். வேலைக்குச் செல்லும் உழைக்கும் மகளிர் வெளியிலும், வீட்டிலும் உழைத்தாலும் அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. தாங்கள் சம்பாதிக்கும் பணத்தைக்கூட ஆண்களைப் போல தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செலவு செய்ய முடிவதில்லை. சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் கணவனிடம் கொடுத்துவிட்டு அற்பச் செலவுகளுக்குக்கூட ஆண்களை அண்டியிருக்க வேண்டி உள்ளது.
ஓவியா அன்புமொழி
பெண்கள் தங்களது அரசியல் உணர்வையோ, காதல் உணர்வையோ வெளிப்படுத்த முடிவதில்லை. மீறி வெளிப்படுத்தினால் திமிர் பிடித்தவள் என பட்டம் சூட்டுகிறார்கள். பெண்கள் தங்களது சிந்தனையைக்கூட வெளிப்படையாகப் பேச முடியாத சூழல்தான் நிலவுகிறது. ஆனால் வரலாறு நெடுகிலும் பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தே வந்துள்ளனர்.  மறைமலை அடிகளார் அவர்களின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவர்கள் தனது தந்தை தனித்தமிழ் இயக்கத்தை மேற்கொள்வதற்கு உந்து சக்தியாக இருந்துள்ளார்.

திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் பெண்கள் போகப்பொருளாகவே சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் தெரிவு செய்வதைப் போல பெண்கள் தங்களுக்கு ஏதுவான உடையை தீர்மானிக்க முடிவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களே பெண்கள் என்ன மாதிரி உடையை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. இயற்கையாக மலரும் காதலில்கூட சாதிக்கு வெளியே காதலிக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

சிக்காகோ நகரில் நடைபெற்ற 8 மணி நேர உழைப்பிற்கான போராட்டத்திலும், 1917 ருசியப் புரட்சியிலும் உழைக்கும் மகளிரின் பங்கு மகத்தானது. பெண்களுக்கு வாக்குரிமை, சம வேலைக்கு சம ஊதியம் என ஆண்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பெண்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தொடர் போராட்டத்தின் விளைவாக 1975 இல் மார்ச் 8 ஐ சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

இன்று அதிகரித்து வரும் பார்ப்னப் பாசிச பயங்கரவாதத்தினால் நமது பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. எதை உண்பது, எதைப் படிப்பது, எதை உடுத்துவது என அனைத்தையும் இந்துத்துவா சக்திகளே தீர்மானிக்கின்றன. நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம். 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என நமது கல்வி உரிமையை பறிக்க முயன்றார்கள். எதிர்த்து நின்று முறியடித்தோம். நமது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் போராட்டத்தில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள்.

பறிக்கப்படும் நமது உரிமைகளை காத்திட, உரிமைகளை மீட்டெடுக்க அம்பேத்கர்-பெரியார் வழியில் களமாடுவோம். நமது போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

என எழுச்சியோடு தனது கருத்துக்களை முன்வைத்தார்.

மூத்த தோழர் தங்கவேல் அவர்களும், இளம் தோழர் வீரபாண்டியன் அவர்களும் பெரியார் மற்றும் அம்பேத்கர் குறித்து இடையிடையே பாடல்கள் பாடினர்.
தங்கவேல்
வீரபாண்டியன்
மொத்த நிகழ்வையும் தோழர் ஜெயக்கொடி அவர்கள் சிறப்பாக நெறியாளுகை செய்தார். இறுதியாக தோழர் காவியா அவர்கள் நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

ஜெயக்கொடி
காவியா










தொகுப்பு
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்







2 comments: