Saturday, March 7, 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----2


CAA-வுக்கு எதிராகத் தொடங்கியப் போராட்டம் NPR, NRC-க்கு எதிரான போராட்டமாக ஏன் மாறியது?

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 256. மாநில அரசுகள் நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 356-ஐப் பயன்படுத்தி அவ்வரசுகளை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்றாலும்கூட CAA, NPR, NRC-ஐ நடைமுறைப்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் தைரியமாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.

அது போன்றதொரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்திய சூழலிலும், CAA-வால் தமிழகத்தில் யாருக்கும் பாதிப்புக் கிடையாது எனக்கூறி NPR-க்கான பணிகளைத் தொடங்க உள்ளது எடப்பாடி அரசு. முதலில் CAA-வை ஆதரித்த சில மாநில அரசுகள்கூட தற்போது அதை எதிர்க்கின்ற போது தாங்கள் மோடியின் எடுபிடிகளாகத்தான் இருப்போம் என விடாப்பிடியாக நிற்கிறது எடப்பாடி கும்பல்.

அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ளவர்களை அடையாளம் காண்பதும், CAA வை நடைமுறைப்படுத்துவதும் நேரடியாக சாத்தியப்படாது. முதலில் இந்தியாவில் வாழுகின்ற மொத்த மக்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்குத்தான் NPR (National Population Register) என்று சொல்லக் கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு. இதற்கு ஒருவர் ஏராளமான ஆவணங்களைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டப்பபடும் ஆவணங்கள் சரியாக இருந்தால், சரியாக உள்ளவர்களை மட்டும் தனியாகப் பிரித்து பதிவேடு ஒன்றை தயாரிப்பார்கள். அதுதான் NRC (National Register of India Citizens) என்று சொல்லக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடு. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இந்தியக் குடியுரியைப் பெறமுடியும்.

நீங்கள் இந்தியர்தானா என்பதை நிரூபிக்க, நீங்கள் எங்கே எப்பொழுது பிறந்தீர்கள் என்பதற்கான ஆதாரத்தையும், உங்களது பெற்றோரும் இந்தியர்கள்தானா என்பதை நிரூபிக்க அவர்களது பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும். ஆதாரத்தைக் காட்டத் தவறினால் நீங்கள் சந்தேகப் பட்டியலில் வைக்கப்படுவீர்கள். உரிய ஆவணங்களைக் காட்டி நீங்கள் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். தவறினால் நீங்கள் அயல்நாட்டினர் (Foreigner) என அறிவிக்கப்படுவீர்கள்.
 
அயல்நாட்டினர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் அயல்நாட்டினரை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள “அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயத்தில்” (Foreigners Tribunal) நீங்கள் மேல் முறையீடு செய்யலாம். அங்கேயும் உங்களால் உரிய ஆவணங்களைக் கொண்டு நீங்கள் இந்தியர்தான் என நிரூபிக்கத் தவறினால் இந்தியாவில் வாழுகின்ற தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் அங்கே நீதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. அசாமின் சபீதா பேகமும், முனிந்திர பிஸ்வாசும் ஏற்கனவே கௌஹாத்தி உயர் நீதிமன்றம் வரை சென்று வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், சொத்துப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டிப் போராடியும் அவர்களால் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. மேலும் அங்கெல்லாம் சென்று வாதாடுகிற வலிமையும் பலருக்கு இருக்காது.

நீங்கள் அயல்நாட்டினர் என்று மட்டும்தான் சொல்வார்களேயொழிய எந்த அயல்நாட்டுக்காரர் என்று சொல்லமாட்டார்கள். எனவே நீங்கள் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் எந்த நாடு உங்களை சேர்த்துக் கொள்ளும்? பிறகு எங்கேதான் செல்வது? உங்களை நேரடியாகக் கொன்று விடமாட்டார்கள். முதலில் தடுப்பு முகாம்களில் அடைப்பார்கள். ஒரு குடும்பமே தங்களது குடியுரிமையை நிரூபிக்கத் தவிறானால் தாய் ஒரு முகாமிலும், தந்தை ஒரு முகாமிலும், மகன் ஒரு முகாமிலும், மகள் ஒரு முகாமிலும் என தனித்தனியாக பிரித்து விடுவார்கள். அதோடு உங்களது குடும்பம் என்கிற பந்தமும் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை எல்லாம் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ளும். எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ அல்லது முகாம்களில் உரிமைக்குரல் எழுப்பினாலோ சித்தரவதை செய்து மெல்ல மெல்லக் உங்களைக் கொன்று விடுவார்கள். இதுதான் ஜெர்மனியில் நடந்தது. அதையேதான் மோடி-அமித்ஷா கும்பல் செய்யப் போகிறது.

அசாம் தடுப்பு முகாம்
NRC-ஐ நடைமுறைப்படுத்தியதன் மூலம் அசாமில் 12 இலட்சம் இந்துக்களும் 7 இலட்சம் இஸ்லாமியர்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடைத்து வைப்பதற்காக அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஏற்கனவே இதில் அடைக்கப்பட்டு விட்டனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்துக்களை மட்டும் விடுவிக்க வேண்டும் என சமீபத்தில் மோடி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் மட்டும் தொடர்ந்து முகாம்களில் இருப்பார்கள். இது மேலும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதன் மூலம் மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து 31. டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் அவர்கள் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால் அவர்கள் அனைவரும் CAA சட்டத்தின மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். மாறாக ஒருவர் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர் எனவோ அல்லது இலங்கையிலிருந்து வந்த ஈத்தமிழர் எனவோ அல்லது மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம் எனவோ கண்டறியப்பட்டால் அவர் CAA சட்டப்படி இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது. அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மறுத்தால் முகாம்களில் அடைக்கப்படுவார்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அயல்நாடுகளிலிருந்து வந்துள்ள இந்து, கிருத்தவர், பௌத்தர், சீக்கியர், ஜைனர், பார்சி ஒருவரால் CAA சட்டத்தின் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். ஆனால் காலம் காலமாக இந்தியாவில் வாழும் ஒரு இந்து, ஒரு இஸ்லாமியன், ஒரு கிருத்தவன் NPR மற்றும் NRC மூலம் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் தனது குடியுரிமையை இழக்க நேரிடும். இஸ்லாமியர்களை CAA ஒதுக்குகிறது என்றால் NPR மற்றும் NRC ஒட்டு மொத்த இந்தியர்களையும் அச்சுறுத்துகிறது. இந்த உண்மையை மக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொண்டு வருவதால்தான் CAA-வுக்கு எதிராகத் தொடங்கியப் போராட்டம் தற்போது NPR மற்றும் NRC ஆகிவற்றிற்கு எதிரானப் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது.

நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதியவர்களை இன்று முதல் இல்லை என்றால் அது அநீதி அல்லவா? இது அநீதியானது என்பதைப் புரிந்து கொள்ளுகிற ஜனநாயகப் பக்குவத்தை இன்னமும் பெரும்பாலான இந்திய மக்கள் பெற்றிருக்கவில்லை என்பதுதான் பார்ப்பனக் கும்பலின் பலம். இந்தப் பலத்தில்தான் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது அக்கும்பல்.

பொன்.சேகர்

வழக்குரைஞர்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!


குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!


No comments:

Post a Comment