VI
கடன் தள்ளுபடி
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாகச் சரிந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் 13.03.2023 அன்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ”பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அதானியின் 9 நிறுவனப் பங்குகள் ஜனவரி 24 முதல் மார்ச் 1 வரை, 60 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது எனவும், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை, பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரித்து வருவதாகவும், 2 மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஏற்கனவே தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் வங்கிகளிடமிருந்து பெருநிறுவனங்கள் பெற்றுள்ள கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவற்றை வாராக் கடன் என பட்டியலிட்டு சுமார் ரூ.9.92 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு. இதில் ரூ7.27 லட்சம் கோடி எஸ்.பி.ஐ (SBI) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் கொடுத்த பணம். ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளின் இலட்சக் கணக்கான கோடி ரூபாய் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தயங்காத இவர்கள் மறுபுறம் ஏழை எளிய மாணவர்கள் பெற்றுள்ள சில ஆயிரம் ரூபாய் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என திமிர்த்தனமாக பேசுகின்றனர்.
அதானி குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கடன் விவரங்களை வெளியிட முடியாது என ஏற்கனவே நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அடுத்து எந்தெந்த முதலாளிக்கு எந்தெந்த வங்கிகளிலிருந்து எத்தனை லட்சம் கோடி தள்ளுபடி செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. அது அந்த நிர்மலா சீத்தாரமனுக்கே வெளிச்சம்.
வாராக்கடனாலோ அல்லது கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலோ வங்கிகளின் சொத்து மதிப்புக் குறைந்து வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்திற்கான வட்டிக் குறைப்பு, சேமிப்புக்கான போனஸ் குறைப்பு, சிறு குறு தொழில்-வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கடன் குறைப்பு அல்லது மறுப்பு, கல்விக் கடன் மறுப்பு, அரசின் நலத் திட்டங்களுக்கான நிதி மறுப்பு என ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீதான தாக்குதலாகவே இது அமைந்து விடுகிறது. இந்திய வங்கிகளால் அரசின் நலத் திட்டங்களுக்குக்கூட கடன் கொடுக்க முடியாத சூழலில்தான் உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடம் அரசே நேரடியாக பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெற்று வருகிறது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு, ரூ.54 லட்சம் கோடியாக இருந்த பன்னாட்டுக் கடன் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.147 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ரூ.55000 கோடிக்குக் கடன் வழங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்விபி வங்கி திவால் ஆகிவிட்டதாக 10.03.2023 அன்று அறிவித்துவிட்டது. இதனால் தங்களின் சேமிப்புத் தொகை திரும்பக் கிடைக்குமா என்கிற பெரும் கலக்கத்தில் உள்ளனர் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள். இதே நிலைக்குத்தான் இந்திய வங்கிகளும் தள்ளப்பட்டுள்ளன. மிகவும் பாதுகாப்பானது என கருதப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற நிலையில், இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி மட்டும்தான் எஞ்சி நிற்கிறது.
வங்கிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டு விட்டால் எதிர்காலத் தேவைகளுக்காக இனி நாம் எதையும் சேமிக்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, திருமணம், முதியோர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக்கூட பணமின்றி கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி, இருக்கிற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று ஏதிலிகளாக நாம் நடுத்தெருவிற்குத் தள்ளப்படுவோம்.
தொடரும்....
தொடர்புடைய பதிவுகள்
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1
No comments:
Post a Comment