I
ஹிண்டன்பர்க்
1937, மே மாதம் 3 ம் தேதி மாலை 7.36 மணிக்கு ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரிலிருந்து புறப்படுகிறது அந்த வான்கப்பல். ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பட்ட அந்த வான்கப்பல் 97 பேரைச் சுமந்து கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலின் மேலே அமெரிக்காவை நோக்கி வானில் சிறகடித்துச் செல்கிறது.
கடல் வழியாகப் பயணம் செய்யும் நேரத்தைவிட பாதி நேரத்தில் வான்வழியாகப் பயணம் செய்தால் அமெரிக்காவை அடைந்துவிட முடியும் என்பதாலும், பியானோ இசையின் மயக்கத்தில், அறுசுவை உணவோடு, சிகரெட் வளையங்களை இரசித்தவாறு வான்கப்பலில் பயணிப்பதென்றால் அந்தக் காலத்தில் யாருக்குத்தான் பிடிக்காது.
மே மாதம் 6 ம் தேதி காலை 6.00 மணிக்குத் தரை இறங்க வேண்டிய அந்த வான்கப்பல், மோசமான வாநிலை காரணமாக, மாலை 6.00 மணிக்குத் தரை இறங்குவது எனத் திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. தரை இறங்க வேண்டிய நியூயார்க் நகரின்மேல் மாலை 3 மணி அளவில் வட்டமடிக்கிறது அந்த வான்கப்பல்.
ஆனால் தரை இறங்குவதற்கு முன்பாகவே, ஹைட்ரஜன் வாயுக் கசிவால் அந்த வான்கப்பலில் தீவிபத்து ஏற்படுகிறது. வான்கப்பல் தீப்பற்றி எறிவதைக் கண்ட சிலர் வான்கப்பலிலிருந்து குதித்து உயிர் பிழைக்கின்றனர். 35 பேர் வான்கப்பலோடு தீயில் கருகி மாண்டு போயினர். ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான்கப்பல் பயணம் அத்தோடு முடிவுக்கு வருகிறது.
அந்த வான்கப்பலுக்கு ஹிட்லரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோயபல்ஸின் கோரிக்கை ஏற்கப்படாததால், ஜெர்மனியின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான பால் வான் ஹிண்டன்பர்க் என்பவரின் நினைவாக “ஹிண்டன்பர்க்” என்று அந்த வான்கப்பலுக்குப் பெயரிடப்படுகிறது. வான்கப்பல் வரலாற்றில் ஹிண்டன்பர்க் விபத்து ஒரு கோர விபத்து என்பதால் அது வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
கல்வெட்டுகளும், ஏடுகளும் வரலாறுகளை சுமந்த அன்றைய காலமானாலும், வான் அலைகளின் மூலம் தாவி வரும் இன்றைய டிஜிட்டல் காலமானாலும், யாரோ ஒரு சிலர் வரலாற்றை நினைவூட்டும்போதுதான் அவை மக்களிடையே எடுத்துச் செல்லப்படுகின்றன.
உலகெங்கிலும் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்வதற்கென, அமெரிக்காவைச் சேர்ந்த நாதன் ஆண்டர்சன் என்பவர் 2017 ம் ஆண்டு, தான் தொடங்கிய ஒரு நிதி ஆய்வு நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டபோது, ஹிண்டன்பர்க் வான்கப்பலும் அந்தக்கோர விபத்தும் நம் கண்முன் தோன்றத்தானே செய்கிறது.
ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்பட்டு வந்த வான் கப்பல் பயணத்தை ஹிண்டன்பர்க் கோர விபத்து முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போல, நிதி மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தனது ஆய்வு நிறுவனத்திற்கு ஒருவேளை ஹிண்டன்பர்க் என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஆண்டர்சன் தனது நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் என பெயரிட்டிருக்கக் கூடும்.
No comments:
Post a Comment