Monday, August 26, 2024

'ஜாதகம்' எனும் புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு!

மழலைகளை மகிழ்விக்க பால்வாடிகள் இலவசம்,

மாணவர்களுக்கு பள்ளிப் பாடப் நூல்கள் இலவசம்.
 
முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்லூரிப் படிப்பு இலவசம்.
 
அரசுப் பள்ளியில் பயின்று அயல்நாடு சென்று உயர்கல்வி பெறுவோருக்கு வான் பயணக் கட்டணம் இலவசம்.
 
மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம்,‌
 
பிங்க் கலர் பேருந்துகளில் பைசா நீட்டாமல் முக மலர்ச்சியோடு பயணச்சீட்டு பெறும் மகளிர் கூட்டம்.
 
அரசு மருத்துவ மனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை.
 
தனியார் மருத்துவ மனைகளில் சிக்கிக் கொண்டாலும் மீண்டுவர கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
 
நியாய விலைக் கடைகளில் இருபது கிலோ இலவச அரிசி, சலுகை விலையில் சீனி-பருப்பு-பாமாயில்.
 
பொங்கலுக்கு பொங்கல் பானைகள் பொங்க, பச்சரிசித் தொகுப்போடு இலவச வேட்டி சேலை.
 
சொந்த வீட்டில் சோறு மறுக்கப்பட்டாலும் நாலனாவில் கை நனைக்க அம்மா உணவகங்கள்

தமிழ்நாடே சொர்க்கத்தில் மிதக்கிறதோ
என ஒரு பக்கம் எண்ணத் தோன்றினாலும்,
 
சொர்க்கம் மதுவிலேஎன கால்கள் தள்ளாட, கைகளில் குவாட்டர்களோடு மறுபக்கம் முக்கால்வாசி பேர் டாஸ்மாக்கில் நீந்தினாலும்,

இலட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சூரியனும்-சனியும்,
ராகு-கேது-செவ்வாயும் என நவக்கிரகங்கள் அனைத்தும் தாயின் கருவறைக்குள்ளிருந்து பிறப்புறுப்பு வழியாக நீ வெளிவரும் போது துரத்தத் தொடங்கி,  நீ கவிழ்ந்து  தவழ்ந்து நிமிர்ந்து வளர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் நடக்கையிலே எத்தனை எத்தனை தடைக் கற்கள்?
 
மேஷம் முதல் மீனம் வரை உள்ள சில கொடிய விலங்குகள் உரையும் கொடுங் காடுகளையும்,
பூரம்-பூரட்டாதி
உத்திரம்-உத்திரட்டாதி
பூசம்-புனர்பூசம்
கேட்டை-அவிட்டம் என எண்ணற்ற பாழுங்கிணறுகளையும்-புதை குழி-சேறு-சகதிகளையும் கடக்க வேண்டிய உள்ளது.
 
அங்கே அகோரப் பசியோடு அலையும் சிங்கம் புலி ஓநாய்களும், அருவெறுப்பாய் நெளியும் பாம்புகளும்-பல்லிகளும், தேள்களும்-பூரான்களும் என எண்ணற்ற கொடிய ஜந்துக்கள் நம்மைச் சுற்றி வட்டமடிக்கின்றன.

வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த அடி எடுத்து வைத்தால் என்ன நேரிடுமோ என எண்ணி ஆசுவாசப்படுத்துவதற்குள், இவை நம்மைக் கொத்திக் குதறுகின்றன.
குதறப்பட்ட தசைகள் தாறுமாறாய் கிழிந்து தொங்க, ரத்தம் சொட்டச் சொட்ட நாமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இவைகள் நம்மை விடுவதாக இல்லை. இறுதியில் நாம் சுடுகாட்டில் போய் தஞ்சம் அடைந்தாலும், அதன் பிறகு நமது சந்ததியைத் துரத்துகின்றன.

செவ்வாயாலும், நாகத்தாலும், ராகுவாலும், கேதுவாலும் கெட்டழுகிப் போனவர்களின் பட்டியலை நீட்டினாலே அது செவ்வாயைத் தொட்டுவிடும்.

சிந்துபாத் கதைகூட ஒரு நாள் முடிவுக்கு வரலாம். ஆனால் இந்த ராசி எனும் கொடிய காடுகளும் நட்சத்திரங்கள் எனும் பாழுங்கிணறுகளும் அழிக்கப்படாத வரை ரத்தம் சொட்டச் சொட்ட நாமும் ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
 
ஆயிரம் கலைஞர்கள் வந்து 'நிஜ சொர்க்கத்தை' உருவாக்க முனைந்தாலும், ஒரு சில புரோகிதன்கள் உருவாக்கும் கொடிய காடுகளும், பாழும் கிணறுகளும் நம்மை காராகிரகத்தில் அல்லவா தள்ளிக் கொண்டிருக்கின்றன.
 
ஊரான்

No comments:

Post a Comment