ஒரு மனிதன், தன் வாழ்நாளில் பார்க்கின்ற, கேட்கின்ற,
ருசிக்கின்ற, நுகர்கின்ற, உணர்கின்ற அத்தனை தகவல்களையும் தொகுத்துப்
பார்த்து, தனக்கான ஒரு கருதுகோளை அல்லது உளவியலை உருவாக்கிக் கொள்கிறான். அதுவே அவனது
உளவியலின் சாரம். இதற்கு ஏற்பவே, அவனது சிந்தனையும், ஆளுமையும் வெளிப்படுகிறது.
துயரப்படுவோர் மீதான கழிவிரக்கம், கொடும் குற்றங்களுக்கு
எதிரான கோபம், மன நிறைவு தரும் மகிழ்வான தருணங்கள் என ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்துவது
அவனது உள்ளார்ந்த உளவியல் சாரத்தைத்தானே?
இந்த உள்ளார்ந்த உளவியல் சாரம், அனைவருக்கும்
உண்டுதானே? இதுதானே அவனது ஆன்மாவாகவும் இருக்க முடியும். இங்கே பக்தியை மட்டும் ஆன்மாவோடு
முடிச்சுப் போடுவது ஒருதலையானது. பக்திமானின் சாரமும் பகுத்தறிவாளனின் சாரமும் தன்மையில்
வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் சாரம் இருக்கும்தானே? இப்படித்தான் வாழ வேண்டும் என ஒருவன் தனக்காக வகுத்துக் கொண்ட வழிமுறைதான் ஆன்மீக நெறி என்றால் அது சரிதானே?
எனவே, ஆன்மா அல்லது ஆத்மா பக்தியோடு மட்டும்
தொடர்புடையதாகப் பார்ப்பது பிழையானது. ஆன்மீகம் என்கிற உளவியல் சார்ந்த மனித சாரம்
அனைவரிடமும் குடிகொண்டுள்ளது.
ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பிறகு, அந்த மனிதனின்
உளவியல் சார்ந்த சாரமும் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், அவன் வெளிப்படுத்திய அவனது
சாரம் பிறரால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும்
மீண்டும் பேசப்படுகிறது.
ஒருவனுக்குக் கெடுதல் செய்தால், அவனது ஆவி அல்லது
ஆன்மா அல்லது ஆத்மா 'உன்னை சும்மா விடாது' என கெடுதல் செய்வோரை எச்சரிக்கும் நோக்கிலும்
இந்த ஆன்மா கோட்பாட்டை பலரும் நம்புகின்றனர்.
பிறருக்காய் ஓயாது உழைத்தவர்கள் இதுவரை பட்டது போதும் என்பதனாலோ,
இதுவரை பிறரை பாடாய்ப் படுத்தியது போதும், இனியும் படுத்த வேண்டாம் என்பதனால்தானோ என்னவோ, ஒருவரின் உயிர் பிரிந்த பிறகு,
அவர் எவராயினும், ‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என ஆழ்ந்து இரங்குகிறதோ நம் மனம்?
ஒரு மனிதனின் உளவியல் சாரத்தைத்தான் நான் ஆன்மாவாக
அல்லது ஆத்மாவாக புரிந்து கொள்கிறேன். ஆன்மா நம் கண்ணுக்குப் புலப்படாதது, ஒரு மனிதனின்
உயிர் பிரிந்த பிறகும், அது உலவிக் கொண்டிருக்கிறது அல்லது பிரிதொரு உடலில் மீண்டும்
தஞ்சமடைகிறது அல்லது அடைக்கலமாகிறது என்கிற புனைவு பொருத்தமற்றது என்றே நான் கருதுகிறேன்.
புறத்தே இருந்து பெறப்படும் உள்ளீடுகள் மாறும் பொழுது அல்லது வேறுபடும் பொழுது
ஒரு மனிதனின் உள்ளார்ந்த உளவியல் சாரமும் வேறுபடத்தானே செய்யும். ஆன்மா நிலையானது என்பதும்
இங்கே நிலையற்றதாகிறது. இங்கே, பழைய ஆன்மா முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய ஆன்மா தோன்றுவதும்
இயல்புதானே? எனவே, ஆன்மா அழிவற்றது என்ற கருதுகோளும் இங்கே அடிபட்டுப் போகிறது.
வாகனங்கள் பரபரக்கும் சாலையைக் கடந்து செல்ல
பரிதவிக்கும் ஒரு மூதாட்டியைக் கரம் பிடித்து மறுபக்கம் சேர்ப்பவனுக்கோ ஆத்ம திருப்தி.
பசியால் வாடும் ஏழைகளின் பசியாற்றுவதில் சிலருக்கு
ஆத்ம திருப்தி.
கோடி கோடியாய் கொள்ளை அடித்ததில்
நலிந்தோரின் துயர் துடைக்க
கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதில் ‘வள்ளல்களுக்கும்’
ஆத்ம திருப்திதானே?
கொடுஞ் செயல் புரிவோனை, தடுக்கத் துணிவில்லை
என்றாலும் “நாக்கப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை’ கேட்டு
விட்டால் சிலருக்கு ஆத்ம திருப்தி.
கெட்டழியும் இச் சமூகத்தை சீராக்கத் துடிக்கும்
இளைஞனின் நெஞ்சக் குமுறல் அவனது ஆத்மாவின் வெளிப்பாடுதானே?
பார்ப்பதையெல்லாம் பதிவாய்ப் போடுவதில் எனக்குள்
எழுவதும் ஒரு ஆத்ம திருப்திதானே?
துணிந்தவனின் ஆன்மா ஆக்கபூர்வமானது. கோழைகளின்
ஆன்மா கதைக்கு உதவாதது.
உங்களிடம் இருப்பது எத்தகைய ஆன்மாவோ?
ஊரான்
No comments:
Post a Comment